என் ஆசிரியரின் இதயம் பெரியது, நன்றியுடன் தலை வணங்குகிறேன்,,, தான் செய்யும் வேலைக்காக எத்தனை பரிசுகள், பாராட்டுகள் , விருதுகள் எனப் பெற்றாலும் தன் ஆசிரியரிடம் பெறும் பாராட்டும் பொன்னாடையும் மற்ற எல்லாவற்றையும் விடவும் மேலானது, என்றே உணர்கிறேன். நான் ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்கையில், தொழிற்நுட்பத்துறை விரிவுரையாளராக இருந்து எங்களை வழிநடத்தியவர், திரு. முனைவர் பெ. நடராஜன் அவர்கள். அப்பொழுதே அவருக்கென தனித்துவமான பண்புநலன்களைக் கொண்டிருந்தார். முதலாமாண்டு ஆசிரியர் பயிற்சியின் போது, பயிற்சி மாணவர்களின் கற்பித்தல் திறனை வீடியோவாக படமெடுத்து, மாநில அளவில் முன்மாதிரியாக ஒளிபரப்பு செய்தவர். பலரும் அவரவர் வகுப்பறைக்குள் கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ள , நான் வகுப்பறைக்கும் வெளியே மாணவர்களை அழைத்துவந்து பள்ளி மைதானத்தில் நாடகத்துடன் மாதிரி வகுப்பு எடுத்ததையும், அதை அவர் படம்பிடித்து, சக ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஒளிபரப்பி பாராட்டியதையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் . தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவர் தற்போது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பு முதல்வராக இருப்பதன் மூலம் இந்நிறுவனம் பெருமை கொள்கிறது. நான் படித்த இந்நிறுவனத்தில் நூல் வெளியிட விரும்புகிறேன், என்கிற எனது நீண்ட நாள் ஆசையை அவரிடம் தெரிவிக்க, அதற்கு அவர் உடனே இசைவு தெரிவித்து, ஒரே நாளில் அதற்கான ஏற்பாட்டில் இறங்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை அழைத்து நூல் வெளியிட்டு விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு, மாணவர் நலன் மீது அவர் கொண்டுள்ள பற்று ,பாசம் , அன்பு இவற்றைத் தவிர வேறொன்றுமில்லை, என்பதே திண்ணம். தான் உண்டு , தன் வேலை உண்டென கடந்துவிடுவதே பல ஆசிரியர்களின் பெரும் போக்காக இருக்கின்ற இன்றையச் சூழலில் , தன் மாணவனின் எழுத்தைப் பாராட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்தியதை வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன். அவரது வாழ்த்துகையைப் பெற்றதன் மூலம் எழுத்து மற்றும் பணி கலாச்சாரத்தில் மேலும் சிறப்பாக செயலாற்றுவேன் , என இந்நேரத்தில் உறுதியளிக்கிறேன். என் ஆசிரியரின் இதயம் பெரியது, தலை வணங்குகிறேன் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்