மகாகவி ஈரோடு தமிழன்பன் நூல் மீதான எனது உரை
அனைவருக்கும் வணக்கம், புதுக்கோட்டை வீதிகள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னால் ‘புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம்’ குறித்து கட்டுரை எழுதும் அளவிற்கு வீதி கலை இலக்கிய களம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. வீதி இலக்கிய களத்திற்கு எனது வாழ்த்துகள்!! “வீணை வருவதற்கு முன்பு இசை இருந்த இடம்” என்கிற தலைப்பில் ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் இந்தத் தலைப்பையொட்டியே யோசிக்கிறேன். வீதி கலை இலக்கிய களம் உருவாவதற்கு முன்பு வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா எங்கே இருந்தார்? அறிவொளி இயக்கம் வருவதற்கு முன்பு கவிஞர் நா. முத்துநிலவன் எங்கே இருந்தார்? ஒருவேளை புத்தகம் என்கிற ஒன்று கண்டுபிடிக்காமல் போயிருந்தால் கவிஞர் ஸ்ரீ மலையப்பன் பிறந்திருக்கக்கூட மாட்டாரோ? என்று. தம்பி ஸ்ரீ மலையப்பன் என்னை அலைபேசியில் அழைத்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, அண்ணே ஈரோடு தமிழன்பனின் ஒரு நூல் குறித்து உங்கள் பார்வையை வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதை ஏன் சிரித்தபடி சொல்கிறார் என்று யோசித்தேன். காரணம் கிடைத்தது. கவிதைகளில் நகைச்சுவையைக் கொண்டுவந்தவர் ஈரோடு தமிழன்ப...