எல்லையில்லா வானம் - நூல் வெளியீட்டு தொடக்க உரை
அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டக் கிளையின் சார்பில் எழுத்தாளர் அன்னை சௌந்தராஜன் எழுதிய 'எல்லையில்லா வானம்' நூல் வெளியீட்டு விழாவும் அத்துடன் க.அஜய் எழுதிய 'மழையின் சாயலில்,,,' கவிதை நூல், ரேவதி ராம் எழுதிய 'நின்று கழிக்கும் வெயில்' கவிதைத் தொகுப்பு, மு.சிவானந்தம எழுதிய 'வழிபாட்டு விழாக்களில் தமிழர் மரபுகள்' கட்டுரை நூல் குறித்த திறனாய்வு கூட்டம் நடைபெறுகிறது.எனது உரைக்குப் பிறகு எல்லையில்லா வானம் எனும் நூல் வெளியிடப்படவிருக்கிறது. இந்த நூலினை இந்திய பொதுவுடைமை கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் த.செங்கோடன் அவர்கள் வெளியிட கவிஞர் கோ. கலியமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.
எல்லையில்லா வானம் என்பது மிகப்பெரிய சிந்தனை. எல்லாயில்லா வானத்தைக் காட்சிப்படுத்துவது எளிது. ஒரு வெள்ளைத்தாளில் ஒரு ஓரத்தில் சின்னதாக ஒரு பறவையை வரைந்தால் அந்த தாள் எல்லையில்லா வானமாகிவிடும்.
இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் சொன்னேன். தமிழ் இலக்கியம் மிக நீண்ட காலம் கடலாக இருந்தது. ஆழமும் பரந்த பரப்பையும் கொண்டிருந்தது. தமிழ் இலக்கியத்திற்குள் மொழிபெயர்ப்பு வந்ததன்பிறகு, தமிழ் இலக்கியம் மொழிபெயர்ப்புக்குள் நுழைந்ததன் பிறகு வானமாகிவிட்டது என்று. எல்லாயில்லா வானம் நூலாசிரியர் அன்னை சௌந்தராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
இப்பொழுதெல்லாம் முன் தயாரிப்பு இல்லாமல் எந்தக் கூட்டங்களிலும் பேச முடிவதில்லை. பேசியதைத் திரும்பப் பேசாமல் புதிய சொற்களைப் புதிய கருத்துகளைப் புதிய வடிவில் தயாரிக்க வேண்டியிருக்கிறது. கவிஞர் கோ. கலியமூர்த்தி அவர்கள் அப்படியாக பேசுகிறவர்.
இதுபோதாதென்று கவிஞர் க. அஜய் அவர்கள் மழையின் சாயலில்,,,எனும் கவிதை நூலில் ஒரு கவிதையில் சொல்லியிருக்கிறார். "சொறிந்த இடத்தைத் திரும்பச் சொறிந்தால் புண் உண்டாகும். பேசியதைத் திரும்பவும் பேசினால் பகை உண்டாகும்" என்று. அவரது நூலினை மூட்டாம்பட்டி ராஜூ அவர்கள் அறிமுகம் செய்யவிருக்கிறார். இவர் புதுக்கோட்டையின் பொன்னீலன்.
புதுக்கோட்டைக்கு இது மழைக்காலம். மழை பெய்யும் வேண்டும். மழை பெய்வதற்குப் பதிலாக வெயில் 'ஆப்பையால் ஓர் அடி' போல மண்டையில் அடித்துக்கொண்டிருக்கிறது.
ஆப்பையால ஒரு அடி சோலச்சியின் புதிய கவிதை நூல். அவரது கவிதையில் ஓரிடத்தில் வரும் 'ஈட்டி முள்ளுக்குள் அமர்ந்திருக்கும் ஈச்சம் பழங்களைப் போல' கொத்துக்கொத்தாக இந்தாண்டு எந்தாண்டிலும் இல்லாத அளவிற்கு அதிக நூல்கள் புதுக்கோட்டையில் விளைந்திருக்கின்றன.
முப்பத்தைந்து நூல்கள் இந்தாண்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. அதிலும் கவிதை நூல்கள் அதிகம். மழை நனைக்காத புதுக்கோட்டையை கவிதைகள் நனைத்திருக்கின்றன.
கோடை வெயில்கூட நம்மைப் பார்த்து மழையாக வேர்த்துக்கொட்டுது என்கிறார் சோலச்சி. கோடை வெயிலில் வியர்வை மழையாக வியர்த்துக் கொட்டுவது தகும். ஆனால் மழைக்காலத்தில் வெயில் அடுப்படி இட்லியைப் போல அவிழ்த்துக்கொட்டுவதை என்னவென்று சொல்வது!
கவிஞர் ரேவதிராம் அவர்கள் இந்த முறை தன் கவிதையை வெயிலாக விரித்திருக்கிறார். அவர்தான் ஒரு கவிதையில் வெயிலை இட்லியாகச் சுட்டு எடுக்கிறார். அவர் ஊற்றி வைத்த சூரியன்கள் வட்டத் தட்டில் வட்டம் வட்டமாக வேகிறது. தொட்டுக்கொள்வதற்கு மேகமாய் தேங்காய்ச் சட்டினி.திடீரென்று பெய்யும் மழை போல குவளையும் சலம்பும் தண்ணீர்.
பாவம் பெண்கள். வெயில் எங்கே தயாராகிறது கேட்டால் அடுப்பங்கரை என்கிறார்கள்.
அடுங்கரை அல்ல வானம் என்று வெளியே அழைத்துவந்து காட்டினால் வானம் ஆகப்பெரிய அடுப்பங்கரை என்கிறார்கள். பெண்களுக்கு வானம் மேகம் சூரியன் நிலா மழை ஏன் பிரபஞ்சம் கூட அடுப்பங்கரையாகத் தெரிகிறது.
எனக்குச் சூரியனைத் தொட்டுப்பார்க்க ஆசை. ரேவதிராம் கவிதையில் ஒரு பெண் தீண்டும் வெயிலை ஒரு கையில் தள்ளிவிட்டு மறுகையால் செங்கலை அடுக்கிக்கொண்டிருப்பாள். அவள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும் செங்கலில் ஏறி சூரியனின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விடணும் போல் ஓர் ஆசை.
அதற்கேன் இவ்வளவு தூரம்? சப்பாத்திக் கள்ளியில் முட்களாக முளைத்திருப்பது என்னவாம்? நீள்வடிவ பச்சைச் சூரியன் என்கிறார் ரேவதி. தொட்டுப் பாருங்களேன் சுடும் என்கிறார்.
ஊர்க்காடே மழையில் நனைகையில் புதுக்கோட்டை மட்டுமேன் வெயிலில் நனைகிறது? ரேவதியிடம் கேட்டேன். பொட்டக்கோழி கூவிப் பொழுது விடியாது. ஆமாம், சேவல் கூவித்தான் பொழுது விடிவதாய் நம்பிக்கொண்டிருப்பவர்களின் அறியாமையைச் சுண்டி விளையாடுகிறது வெயில் என்கிறார் அவர். இவரது "நின்று கழிக்கும் வெயில்" எனும் நூல் ஒரு போட்டியில் சிறந்த படைப்பாக தேர்வு பெற்ற நூல். அவரது நூலினை கவிஞர் துவாரகா சாமிநாதன் அவர்கள் அறிமுகம் செய்கிறார்.
துவாரகா நூலினை அறிமுகம் செய்வதில் தேர்ந்தவர். அதற்காக நேர்ந்து விடப்பட்டிருக்கிறவர்.
எங்கள் ஊரில் ஒரு உழவன் உழுதுவிட்டு புல் வரப்பில் படுத்திருந்தார். அவரை எழுப்பலாமென்று அருகில் செல்கையில் அவரே திடுக்கிட்டு எழுந்துவிட்டார். எழுந்தவர் சொன்னார், "பறவை கொத்துவதைப் போல வெயில் கொத்துகிறது " என்று. எரிக்கும் வெயிலை அவர் ஒரு பட்சியைப் போல பார்த்தது எனக்கு வியப்பாக இருந்தது. துவாரகா எழுதியிருக்கும் 'நிலம் தின்னும் பட்சி' எனும் நூல் அப்படியானதுதான். நிலம் உழவனைப் போல தூங்குகிறது. சூரியன் பட்சியாக மாறி எழுப்புகிறது.
துவாரகா ஒரு கவிதையில் சொல்கிறார். "பசி மறக்க பீடி குடிக்கும் வயிறுகள்" என்று. இந்தக் கவிதையில் பசியும் வெயில், பீடியும் வெயில். இத்தகைய வரிகளை எழுதும் துவாரகா சாமிநாதன் அவர்கள் ரேவதியின் நின்று கழிக்கும் வெயில் எனும் நூலை அறிமுகம் செய்கிறார்.
இந்த நூலுக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மேனாள் மாவட்டத் தலைவர் மு.சிவானந்தம் அவர்கள் எழுதியிருக்கும் வழிப்பாட்டு விழாக்களில் தமிழர் மரபுகள் எனும் நூலுக்கும் பெரிய தொடர்பு உண்டு. இவ்விரு நூல்கள் ஒரு பொருண்மை நூல்கள். இந்நூல் முழுக்க வழிபாட்டு முறைமை ஆய்வுப்பூர்வமாக அணுகியிருக்கிறது.
மு.சிவானந்தம் அவர்கள் பொதுவுடைமைவாதி. முற்போக்காளர். இவர் வழிபாட்டு நூல் எழுதலாமா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். ஆங்கில கவிஞர் பெர்னாட்ஷா ஒரு நாத்திகர். அவர் ஒரு முறை சொன்னார். "I AM AN ATHEIST AND I THANKS GOD TO IT" நான் நாத்திகன் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறிகிறேன் என்று.
நாத்திகம், ஆத்திகம் இரண்டுக்குமான வித்தியாசம் கடவுள் குறித்த நம்பிக்கையின் அளவுகோள்தான். கடவுள் சிலருக்கு கோபுரத்தில். சிலருக்கு சிற்பம். சிலருக்கு கல். சிலருக்கு மரம். சிலருக்கு கல். சிலருக்கு மண். சிலருக்கு புல். சிலருக்கு மனது.
இந்த நூல் கடவுளின் இருத்தலை
ஆய்வுப்பூர்வ அணுகிறது. இந்த நூலினை சோலச்சி அவர்கள் திறனாய்வு செய்கிறார்.
இந்தப் படைப்புகள் யாவும் கவனம் பெற வேண்டும். இந்தப் படைப்புகள் தந்த படைப்பாளர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டத் தலைவர் என்கிற முறையில் வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!!
(15.11.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்ட நிகழ்வில் ஆற்றிய தொடக்க உரை)




.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக