ஓர் எழுத்தாளனுக்கு இந்த அளவிலான புத்தக வெளியீட்டு விழா போதுமானது
குழந்தை பிறந்தால் பெயர் சூட்ட வேண்டும், நூல் பிறந்தால் வெளியிட வேண்டும். இது முறைமை,சடங்கு, சம்பிரதாயமாக இருந்துவருகிறது. குழந்தையும் நூலும் ஒன்றுதான்! குழந்தை தன் பெயரைத் தானே சொல்கிற போதும் நூலின் பெயரை அடுத்தவர்கள் சொல்கிறபோதும் பிறந்த நோக்கை அவை எய்துகின்றன. ஓர் எழுத்தாளனுக்கு ஒரு செலவுமில்லாமல் விழா நடைபெறுவது பெரிய கொடுப்பினைதான். வளைகாப்பு செலவில்லாமல் அதற்கு முன்பே குழந்தை பிறந்துவிடுவதைப் போல. அப்படியாகவே வேங்குடிவயல் எனும் நாவல் வெளியீடு கண்டது. எனது இருபத்து மூன்றாவது நூல் இது. ஐந்தாவது நாவல். கல்கி அச்சு இதழாக வெளிவருகையில் அந்த இதழுக்கு கதைகள் அனுப்புகையில் எனக்குப் பரிச்சயமானவர் கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்கள். எப்பொழுதும் உற்சாகத்துடன் இயங்குபவர். சென்னையில் இலக்கிய, நூல் வெளியீட்டு விழாக்கள் இவரின்றி நடைபெறுவதில்லை. இவர்தான் இராம. செ. சுப்பையா நினைவு நாவல் போட்டியை நடத்தியவர். இப்போட்டியில் பரிசு பெற்ற நாவலை அவரே வெளியிட்டது சிறப்பு. நூலைப் பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர்,கவிஞர், ஓவியர் சீராளன் அவர்கள். இவர் பிரபல எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் புதல்வர்....