ஓர் எழுத்தாளனுக்கு இந்த அளவிலான புத்தக வெளியீட்டு விழா போதுமானது

குழந்தை பிறந்தால் பெயர் சூட்ட வேண்டும், நூல் பிறந்தால் வெளியிட வேண்டும். இது முறைமை,சடங்கு, சம்பிரதாயமாக  இருந்துவருகிறது. குழந்தையும் நூலும் ஒன்றுதான்! குழந்தை தன் பெயரைத் தானே சொல்கிற போதும் நூலின் பெயரை அடுத்தவர்கள் சொல்கிறபோதும் பிறந்த நோக்கை அவை எய்துகின்றன.

ஓர் எழுத்தாளனுக்கு ஒரு செலவுமில்லாமல் விழா நடைபெறுவது பெரிய கொடுப்பினைதான். வளைகாப்பு செலவில்லாமல் அதற்கு முன்பே குழந்தை பிறந்துவிடுவதைப் போல. அப்படியாகவே வேங்குடிவயல் எனும் நாவல் வெளியீடு கண்டது. எனது இருபத்து மூன்றாவது நூல் இது. ஐந்தாவது நாவல்.

கல்கி அச்சு இதழாக வெளிவருகையில் அந்த இதழுக்கு கதைகள் அனுப்புகையில் எனக்குப் பரிச்சயமானவர் கவிஞர் அமிர்தம் சூர்யா அவர்கள். எப்பொழுதும் உற்சாகத்துடன் இயங்குபவர். சென்னையில் இலக்கிய, நூல் வெளியீட்டு விழாக்கள் இவரின்றி  நடைபெறுவதில்லை.  இவர்தான் இராம. செ. சுப்பையா நினைவு நாவல் போட்டியை நடத்தியவர். இப்போட்டியில் பரிசு பெற்ற நாவலை அவரே வெளியிட்டது சிறப்பு. நூலைப் பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர்,கவிஞர், ஓவியர் சீராளன் அவர்கள். இவர் பிரபல எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் புதல்வர். 

புத்தகம் வெளியிடும் நேரத்திற்கு சரியாக வந்து எதிர்பாரா இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் புதுக்கோட்டை  கவிஞர்கள் மைதிலி கஸ்தூரிரெங்கனும் ரேவதியும். அதுவரை மன மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தவன் முக மகிழ்ச்சியில் மலர்ந்துவிட்டேன். கவிஞர் பாரதி மோகன் அவருக்கே உரித்தான குழந்தை இதயத்துடன் என்கூடவே இருந்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் எனது நண்பர் பாலஜோதி ராமச்சந்திரன் அவர்களின் நூலும் வெளியீடு கண்டதும் வெளியீட்டுக்குப் பிறகு எழும்பூர் ரயில் நிலையம் வரை உரையாடி சிரித்து பொழுதைக் கழித்ததும் மறக்க இயலா தருணங்கள்,  நன்றிகள்!

இந்த வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தார் நாற்கரம் பதிப்பகத்தார் திரு. நல்லு அவர்கள். படைப்பை முழுமையாகப் படித்து அவரே பிழைத் திருத்தம் செய்து முரணான விசயத்தை  எழுத்தாளரிடம் உரையாடி நூல் வடிவமைப்பில் அதிக அக்கறை எடுத்து நூலைக் கொண்டுவரும் பாங்கால் எதிர்காலத்தில்  இப்பதிப்பகம் நல்ல உயரம் எட்டப்போவது உறுதி. வாழ்த்துகள் !

மனிதப் பாத்திரங்களின்றி இந்நாவலைப் படைத்திருக்கிறேன். இந்நாவலுக்குள் நாம் எல்லாரும் இருக்கிறோம்,  எதோ ஒரு முகமூடியை அணிந்துகொண்டும் முகமே முகமூடியாய் கொண்டும். இந்நாவலை வாசிக்கும் யாரும் அசல் முகத்தைக் கண்டடைவார்கள்,  அடைவீர்கள்!வாசியுங்கள் உரையாடுவோம்! வாசிப்பு ஒன்றே மனிதனை மனிதத்துவமாக்குகிறது!

இடம் - தஞ்சை ரயில் நிலையம் 

நேரம் - 5.38 , நாள் - 06.01.2025
































கருத்துகள்

பிரபலமான இடுகைகள்