பாரதியாரோடு பேசப்படாத இரண்டு ஊர்கள்
பாரதியாரோடு பேசப்படாத இரண்டு ஊர்கள்
மணப்பாறை தொன்மைமிகு மணவை தமிழ்மன்றம் சார்பில் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. தலைமை -திரு. சௌமா ராஜாங்கம் அவர்கள். வரவேற்பு - மன்றச் செயலர் திரு. நவமணி அவர்கள். இந்நிகழ்வில் வாழ்வும் இலக்கியமும் எனும் தலைப்பில் உரையாற்றினேன். செப்டம்பர்,11 மகாகவி பாரதியாரின் நினைவு நாள் என்பதால் பாரதி குறித்து சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டேன்.
பாரதியோடு தொடர்புடைய ஊர்களாக எட்டையபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, காசி, மதுரை சேதுபதி பள்ளி , காரைக்குடி கானாடுகாத்தான், சென்னை திருவல்லிக்கேணி ஆகிய ஊர்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. பாரதியோடு பேசப்படாத இரண்டு ஊர்கள் உள்ளன. அவை கடையம் மற்றும் காரைவாய்க்கால்
கடையம்
பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊர் கடையம். இவ்வூர் பாரதியாரின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
பாண்டிச்சேரியில் பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கைக்காக பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்து பாரதியார் 1918 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட பாண்டிச்சேரியிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா திரும்புகிறார். அவ்வாறு திரும்புகையில் கடலூர் எல்லையில் வில்லியனூரில் வைத்து கைது செய்யப்படுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் டிசம்பர் 14 அன்று விடுதலையாகிறார். விடுதலைக்குப் பிறகு அவர் சென்ற ஊர் கடையம். அங்கு அவர் செல்லம்மாள் மற்றும் குழந்தைகளோடு நாட்களைக் கழிக்கிறார்.
1921 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்ட பாரதி உடல் நலக்குறைவால் படுகையில் வீழ்ந்தார். இதிலிருந்து மெல்ல மீண்ட பாரதியை அவரது நண்பர் ஈரோடு வக்கீல் எம்.கே. தங்கப்பெருமாள் பிள்ளை அழைப்பின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் சென்றார். அங்குள்ள நூலகத்தில் 1921 ஜூலை 31 அன்று 'மனிதனுக்கு மரணமில்லை' எனும் தலைப்பில் உரையாற்றினார். மறுநாள் சுதேசிகள் காரைவாய்க்கால் எனும் இடத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 'இந்தியாவின் எதிர்காலம்' எனும் தலைப்பிலும் உரையாற்றினார். இதுதான் அவரது இறுதி வெளியூர் பயணமும் மேடை உரையும் ஆகும். இதுகுறித்து அவர் சுதேசிமித்ரன் பத்திரிகையில் சக்திதாசன் எனும் பெயரில் ஈரோடு யாத்திரை எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
ஆக, பாரதியோடு பேசப்படாத ஊர்களாக கடையம் மற்றும் காரை வாய்க்கால் எனும் இரு ஊர்கள் உள்ளன. இத்துடன் கருங்கல்பாளையத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இத்தகவலைக் குறிப்பிட்டு பேசிய நான் பாரதியின் கற்பனை பாத்திரமான கண்ணம்மாவை முக்கிய பாத்திரமாக வைத்து நான் எழுதிய
புனைவு நின்னைச் சரணடைந்தேன் என்கிற கதையை பகிர்ந்து கொண்டேன்.
நிகழ்வில் மணப்பாறை மைந்தர்கள் ஜீவிதன், அஷ்ரப் அலி, ஆ.தமிழ்மணி, தோகை. பழனிவேல் உள்ளிட்ட நண்பர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி!






.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக