புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கமும் படைப்புலகமும்
மார்ச் 31, ஞாயிறு அன்று சங்கீதா ஓட்டலில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் நான்காம் நிகழ்வு நடைபெற்றது. ஒரு படைப்பாளனின் ஆகப்பெரும் கனவு என்பது அவரது படைப்புகளைக் கொண்டு பேசப்படும் படைப்புலகம்தான். பல எழுத்தாளர்களுக்கு இப்படியான நிகழ்வு நடந்தேறாமல் போயிருக்கிறது. அதிலும் உள்ளூரில் மண்ணின் மைந்தர்களால் படைப்புலகம் கொண்டாடப்படுவது அரிது, பெரிது.
எழுத்தாளர் திரு. ரா.ராஜநாராயணன் அவர்கள் புதுக்கோட்டை தாஞ்சூர் பகுதியைச் சார்ந்தவர். அரசுப் பள்ளி ஆசிரியர். எண்ணமும் ஏற்றமும், இவர்கள் வேறு யாருமல்லர், வைகைப் புயல் வடிவேலு, சின்னக் கலைவாணர் விவேக், கீழடிப் புதையல் எனும் ஐந்து நூல்கள் எழுதியுள்ளார். நான் கீழடிப் புதையல் எனும் நூலை அறிமுகம் செய்து பேசினேன்.
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக எழுதிய கட்டுரை என்பதால் நூல் அந்த வரையறையோடு 19 தலைப்புகளைக் கொண்டிருந்தது. இந்த நூலை வாசிக்கையில் எனது தேடல் இது தொடர்பான பல நூல்களை நோக்கி அழைத்துச் சென்றது.
எல்லீஸ் எழுதிய A GRAMMAR OF THE TELOOGOO LANGUAGE (தெலுங்கு இலக்கணம்), கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், ஜான் மார்சல் எழுதிய சிந்து சமவெளி நாகரிகம் ஆகியவை எனது வாசிப்பின் நீட்சியாக அமைந்தது.
சிலைமான் பாலசுப்பிரமணியன் - மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆத்மார்த் ராமகிருஷ்ணன்- அலெக்ஸாண்டர் கக்கிம்காம்- ஜான் மார்சல்- எல்லீஸ்- ராபர்ட் கால்டுவெல் - பாண்டியர் ஆகியவர்களைக் கோடிட்டு வைகை தொல்லியல் அகழாய்வோடு சிந்துசமவெளி அகழாய்வை ஒப்பிட்டு பேசினேன்.
ராபர்ட் கால்டுவெல் அவரது நூலில் தமிழ் மொழிக்கு அறவம் என்றொரு பெயர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அறம் சார்ந்த மொழி என்பதால் அதற்கு அப்படியொரு பெயர். மலையாளத்தில் மேற்கு என்பதை படுஞாறு என்று சொல்லப்படுகிறது. அதாவது படுஞாயிறு.
சேரர், சோழர், பாண்டியர் மூவேந்தர்களில் தமிழ் மொழியைக் காக்க போர்ப்புரிந்தவர்கள் பாண்டியர்கள். மெய் எழுத்துகளில் வைக்கப்படும் புள்ளி எழுத்துகளை நீக்க வேதகால ஆரியர்கள் முயற்சிக்க அதை எதிர்கொண்டு மெய் எழுத்துகளைக் காத்தவர்கள் பாண்டியர்கள்,,, போன்ற செய்திகளை உரையில் உள்ளடக்கினேன்.
எனது சமீபகால உரைகளில் அதிக பேர் கேட்ட உரையாகவும் பேச்சுக்கிடையில் அலைபேசிகளின் ரீங்கார ஒலியில்லாமல் வெளிநடப்பில்லாமல் அத்தனை அமைதியாக இந்த உரையைக் கேட்டார்கள்.
நிகழ்வின் நிறைவில் நினைவுப்பரிசாக திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும் கே.எம். சரீப் எழுதிய நூலைக் கொடுத்தார்கள். கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
மனநிறைவான நிகழ்வு. அறுசுவை உணவு. தொடரட்டும் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கப் பணி,,,


























.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக