குழந்தை வைக்கும் தண்ணீருக்குக் குருவிகள் ஏன் அதிகம் வருகின்றன?
புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் நடத்திய அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா நினைவு இலக்கிய பரிசளிப்பு விழாவின் சிறப்புகள் குறித்துப் பேச எழுத பல விடயங்கள் இருக்கின்றன. இந்த விழாவிற்கு ஒரு பங்கேற்பாளனாக முதல் ஆளாக சென்றிருந்தேன். விழா மேடை, இருக்கைகள், மேளக்கச்சேரி, மெல்லிசை, புத்தகக் கண்காட்சி, விருதாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பரிவட்டம், பூமாலை, கவித்துவமான வரவேற்புரை, தொகுப்புரை, நோக்கவுரை, தலைமையுரை, பாராட்டுரை, சிறப்புரை, ஏற்புரை, நன்றியுரை, விருந்து உபசரிப்பு என்று எல்லா வகையிலும் விழா சிறப்புற்றிருந்தது. தமிழ்ச்சங்கத் தலைவர் தனது உரையை, இந்த விழாவில் இளைய தலைமுறையினர் குறைவாக இருப்பதை கவலையாகக் குறிப்பிட்டு தொடங்கியதும் விழாத் தலைவர் வாழும் காலத்திலேயே எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதும், கவிச்சுடர் அவர்கள் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள் சாதியமதவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென குறிப்பிட்டு உரையை நிறைவு செய்ததையும் முக்கிய அம்சமாக பார்க்கிறேன். பாராட்டுரை, சிறப்புரைகள் நல்ல முன் தயாரிப்போடு இருந்தன. இவ்வளவு சிறப்பு அம்சங்களில் என்னைப் பெரிதும் கவர்ந்தது விழாவைத் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்ததையே சொல்வேன்.
விழா முடிந்து விருந்து முடித்து வெளியே வருகையில் ஒரு நண்பர் கேட்டார். ஒரு கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டு, " இவருக்கு எப்படி இவ்ளோ கூட்டம் கூடுது?" என்று. " கூட்டு உழைப்பு" என்றேன். இந்தப் பதிலை அவர் ஏற்கவில்லை. அவரைத் திருப்திப்படுத்த ஒரு சம்பவத்தைச் சொன்னேன்.
எனது வீட்டுக்குத் தினமும் அதிகாலையில் அடைக்கலான் குருவிகள் வந்து சத்தமிடும். அந்தக் குருவிக்காக நான் ஒரு தட்டில் தண்ணீர் வைத்தேன். அந்த குருவிகள் தண்ணீரைக் குடித்து சற்றுநேரம் ஆரவாரித்துச் செல்லும். நீண்ட நாட்கள் அப்படியாக வைத்து பிறகு தண்ணீர் வைக்கும் வேலையை என் மகளிடம் ஒப்படைத்தேன். அவள் தினமும் குருவிக்குத் தண்ணீர் வைத்து வந்தாள். அவள் வைத்த தண்ணீருக்குக் குருவிகள் அதிகம் வருகின்றன. ஒரு குழந்தை வைக்கும் தண்ணீருக்குக் குருவிகள் ஏன் அதிகம் வருகின்றன?
இந்தக் கேள்விக்கு என்ன பதிலோ அதுதான் நீங்கள் கேட்டக் கேள்விக்கான பதில் என்றேன். கேள்விக் கேட்டவர் புன்னகைத்துச் சென்றார்.




.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக