பசி, தாகம் இரண்டில் எது கொடிது?
ஓர் எழுத்தாளர் இறந்துபோகிறார். அந்த துக்க நிகழ்வுக்கு அவர் தன் கதைகளில் படைத்த கதாபாத்திரங்கள் எல்லாம் வருகைதந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். எழுத்தாளர் - கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்வு முதலும் கடைசியுமாய் இங்கேதான் நடந்தேறுகிறது. எழுத்தாளர் இறந்துதான் கதாபாத்திரங்கள் அவரைச் சந்திக்க வேண்டுமா?
பசி எனும் நவீன நாடகத்தில் எனது மிடற்றுத் தாகம் சிறுகதை பாத்திரங்கள் உயிர்பெற்று என் முன்னே கொஞ்சநேரம் வாழ்ந்து மறைந்துள்ளதாக உணர்கிறேன்.
தாகம் என்பது இங்கே பசியாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. உயிர்களைப் பெரிதும் வதைப்பது பசியா, தாகமா?
ஒரு பச்சிளம் குழந்தைக்குப் பசி என்பது தாகமாக இருக்கிறது. ஒரு வயோதிகருக்கு தாகம் என்பது பசியா இருக்கிறது. கொடிது பசியா, தாகமா? இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் பிராண நிறக் கனவு நூலிலுள்ள மிடற்றுத் தாகம் எனும் கதையை வாசித்து உணர வேண்டுகிறேன்.
"பிரபஞ்சத்தின் உயிர்கள் யாவும் மறுக்க இயலா நிஜம் பசி
உயிர் தழைத்த நொடியே ஜனனம் கொண்ட பசி
பூமியில் உணவுக்காய் அலைந்து நகர்கிறது உயிர்களெல்லாம்."
நான்சிகோமகனின் இந்த உரத்தக் குரல் பெரும்பசியாய் காதினுள் அறைகிறது.
மூன்று வயதுள்ள குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர் வரை இந்த நாடகத்தில் நடித்துள்ளார்கள். ஷேக்ஸ்பியர், ஜார்ஜ் பெர்னாட்ஷா, இளங்கோவடிகள் காலத்தில் கொஞ்ச நேரம் வாழ்ந்த மனலயத்தை உங்களைப் போலவே நானும் பெற்றேன். இந்த நாடகத்தைச் சிறுகதை சிதையாமல் இயக்கிய தோழர் கோவை செல்வின் AJ அவர்களுக்கும் இந்தக் கதையைத் தேர்வு செய்து பசியின் பாத்திரமாக உருமாறிய தோழர் நான்சிகோமகன் அவர்களுக்கும் இந்த நாடகத்தை இயக்கிய ஆணிவேர் படைப்பரங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை மேற்கு கிளைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(11.05.2024 அன்று கோவை மாருதி தியேட்டர் நாடகம் அரங்கத்தில் மிடற்றுத் தாகம் சிறுகதையைத் தழுவி அரங்கேற்றப்பட்ட பசி எனும் நாடகத்திற்குப் பிந்தைய எனது உரை.)







































.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக