திசைகள் வழிகாட்டு அமைப்பு -ஐவர் பாராட்டு விழாவில் எனது உரை

 நண்பர்கள் தோழர்கள் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

கம்பராமாயணத்தில் கம்பர் ஓரிடத்தில் 'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்' என்று பாடியுள்ளார். எனக்கு இந்த வரியிலுள்ள ஓர் என்கிற சுட்டுச்சொல் மீது வியப்பும் சந்தேகமும் வந்தது. அன்புள இனி நாம் ஐவர்கள் உளரானோம் என்று பாடியிருந்தாலும் இதனால் பொருள் மாறிவிடப் போவதில்லை. ஏன் ஓர் என்கிற பதத்தைச் சேர்த்தார் என்று. இதை யாரிடமேனும் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

யாரிடம் கேட்பது, கம்பரிடமே கேட்டேன். கம்பர் சொன்னார். ராமன், இலக்குவனன்,  பரதன், சத்துருக்கன் , குகன் என்று ஐவரைக்கொண்டு ஐவர்கள் என்று எழுதினேன். எனக்கும் முன்பு கனகவிசயர் பஞ்சப் பாண்டவர்கள் எனும் ஐவரை பாடியிருக்கிறார். நாட்டுப்புறவியல் ஆய்வாளர் நா. வானமாமலை ஐவர் ராசாக்கள் எனும் கதையை சேகரித்து நூலாக வெளியிட்டுள்ளார். அவரிடம் ஐந்து ராசாக்கள் இருக்கின்றன. வீரமாமுனிவர் எழுதிய பரமாத்மா குரு கதையில் ஐந்து பேரைக் கொண்டு சிறார் கதை எழுதியுள்ளார். இந்த வரிசையில் அறந்தாங்கி திசைகள் அமைப்பு மருத்துவர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் புதுக்கோட்டை முக்கிய ஐந்து ஆளுமைகளை வைத்து ஒரு மாபெரும் பாராட்டு விழா நடத்தியுள்ளார். இப்படி பல ஐந்துகள் இருப்பதால் நான் எனது பாடலில் ஓர் ஐந்துகள் என்று குறிப்பிட்டு எழுதினேன் என்றார். எனது சந்தேகத்தைப் போக்கிய கம்பனுக்கு நன்றி நல்கி அவரிடமிருந்து விடைபெற்றேன்.  அப்பொழுது கம்பன் என்னை நிறுத்தி எனக்கொரு சந்தேகம் அதை தீர்த்து உதவுங்கள் என்றார்.

கம்பனுக்கே சந்தேகமா,  கேளுங்கள் என்றேன். நானும் ஔவையாரும் ஒரு காலத்தவர்கள்.  சோழ மன்னன் எங்கள் இருவருக்கும் ஒரு நாள் பாராட்டு விழா எடுத்தார்.  அதில் பேசிய புலவர்கள் ஔவையை விடவும் என்னை ஓரிரு வார்த்தைகள் கூடுதலாக பேசிவிட்டார்கள்.  இதைப் பொறுக்கமுடியாத ஔவை பாராட்டு அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாள்.  இருவரைவைத்தே பாராட்டு விழா எடுக்கமுடியாத நிலையில் புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி அவர்கள் ஐவரை வைத்து பாராட்டுவிழா எடுக்கிறாரே இது எப்படி சாத்தியமானது என்று கேட்டார்.

நான் சொன்னேன். நீங்கள் நினைப்பதைப் போல மருத்துவர் அவர்கள் ஐவருக்குப் பாராட்டு விழா நடத்தவில்லை.  தமிழ் இலக்கணம் ஐந்து. எழுத்து சொல் பொருள் யாப்பு அணி. இந்த ஐந்து இலக்கணத்திற்கும் ஐவரை அமரவைத்து பாராட்டு விழா நடத்துகிறார்.

அப்படியா என்ற கம்பர் யார் யாரை எததுக்கு அமர்த்தினார் என்று கேட்டார் கம்பர். நான் உதாரணத்தோடு சொன்னேன்.

நான் ஒரு முறை தினமணியில் ஒரு கட்டுரை எழுதினேன். கட்டுரையின் தலைப்பு எல்லாரும் என்பது யாரெல்லாம்.  இக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இக்கட்டுரையின் இறுதியில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று எழுதிவிட்டேன். கவிஞர் நா. முத்துநிலவன் புலனம் வழியே சந்தேகம் எழுப்பினார். எல்லாரும், எல்லோரும் இரண்டில் எது சரியென்று. இப்படி எழுத்தை சீர்த்தூக்கிப் பார்த்து பிழைகளை களைகிறவர் முத்துநிலவன். ஆகவே எழுத்துக்கு அடையாளமாக அவரைப் பாராட்டுகிறார்.

சொல்லுக்கு யாரைப் பாராட்டுகிறார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே! அந்தச் சொல்லை அழகாக உச்சரிப்பவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள். சொல்லின் அழகு என்பது சொல்லியதைத் திரும்பச் சொல்லாமல் புதிதாக சொல்வதுதான். இதுகுறித்து  நன்னூல் இலக்கணம் பத்து குற்றங்கள்
பாடியுள்ளது. இவர் பத்து மணிக்கு உரையாற்ற அழைக்கப்படுகிறார் என்றால் 9.59 க்கு இலக்கியத்தில் நடக்கும் நிகழ்வை உரையில் பதிவு செய்கிறவர். எந்த தலைப்பையும் தற்காலப்படுத்துவதில் தேர்ந்தவர். ஆகவே சொல்லின் இலக்கணத்திற்கு தங்கம் மூர்த்தி அவர்கள் அமர்த்தினார்.

பொருளுக்கு? கேட்டார் கம்பர்.

எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது நன்னூல் இலக்கணம். இவரிடம் ஒரு சொல் இருக்கிறது. இச்சொல்லைக் கொண்டு ஆய்வு செய்தால் ஆயிரம் இலட்சம் பக்கங்கள் எழுதலாம். உலகில் கலை, அரசியல், இலக்கியம், வரலாறு என்று பெரும் பொருள் பொதிந்த சொல் இவரிடம் உள்ளது. அச்சொல் அபெகா.  அம்பேத்கர் குடகுக் கடல் என்றால் பெரியார் குணக்கடல்.  கார்ல் மார்க்ஸ் தென்பெருங்கடல்.  இச்சொல்லைக்கொண்டு நூறு கூட்டங்கள் நடத்தியுள்ளார். கூட்டம் நடத்துவதோடு பேசுவதோடில்லாமல் அதன்படி வாழ்கிறவர்.  ஆகவே பொருள் இலக்கணத்திற்கு மருந்துவர் நா. ஜெயராமன் அவர்களை அமர்த்தியுள்ளார்.

யாப்பு என்பதற்கு கட்டுதல் என்று பொருள். யாப்பின் உறுப்புகளாக தளை, அடி, தொடை, அசை, சீர் உள்ளன. உடல் என்பது  தலை, அடி, தொடை கொண்டது. இவர் தாய்க்கும் சேய்க்கும் எந்த சேதாரமில்லாமல் மகப்பேறு பார்க்கிறவர். அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் அதையும் செய்து தைத்து கட்டுகிறவர். ஆகவே யாப்புக்கு மருத்துவப் பேராசிரியர் பத்மினி அவர்களை நிறுத்தினார்.

அணி என்பதற்கு அழகு என்று பொருள். இன்றைக்கு அழகு என்கிற பெயரில் பொய்யும், புரட்டும், புராணமும் ஒன்றையொன்று புனைந்துகிடக்கிறது. இவற்றை பிரித்து உண்மையை கண்டறிய அறிவியலால் மட்டுமே முடியும். அறிவியல் என்பது அறிவு. அறிவு என்பது புத்தகம். புதுக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தி பலரின் அகக்கண்கள் திறக்க காரணமாக இருக்கிறவர் அ. மணவாளன் அவர்கள். ஆகவே அணி இலக்கணத்திற்கு தோழர் மணவாளனை அமர்த்தி இந்த விழாவை நடத்துகிறார் என்றேன்.

கம்பர் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு கேட்டார். இந்த விழாவை நடத்தும் திசைகள் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் என்ன மருத்துவர் என்று கேட்டார். நான் தோல் மருத்துவர் என்றேன். இல்லை, இல்லை. அவர் இதயங்களின் மருத்துவர் என்றார்.

வாழ்க மருத்துவர்! புகழ் பெறுக ஐவர்கள்! திசைகள் மகிழட்டும்! நன்றி வணக்கம்!!























புகைப்படங்கள் - எஸ்பிபாலா- அறந்தாங்கி


விழா நாள் - 31.08.2024 
,இடம் - ரோட்டரி ஹால் புதுக்கோட்டை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்