நன்றி கரிசல் இலக்கிய விழா

கரிசல் மண்ணையும் கரிசல் இலக்கியத்தையும் தொடர்ந்து நான் என் நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்து வருகிறேன்.


இதுவரை உத்தேசமாக  120 கதைகள் எழுதியிருக்கிறேன். சுமாரான, பரவாயில்லை எனும் படியான, புதிய வடிவிலான, பரிசோதனை முயற்சியிலான, தமிழகம் அளவிலும் உலகளாவிய அளவிலும் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகள்,.. இதற்குள் அடங்கும்.

நண்பரே, படைப்புக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, படைப்பின் தரம்தான் முக்கியம்.  மௌனி எவ்வளவு கதைகள் எழுதினார்? சொற்பம்தான்! பேசப்படுகிறார் அல்லவா! கரிச்சான்குஞ்சு படைத்தது ஒன்றே ஒன்றுதான், பசித்த மானுடம். காலம் கடந்து நிற்கிறதே! ப. சிங்காரம் புயலிலே ஒரு தோனி, புயலுக்கு அப்பால் எனும் இரண்டு நாவல்களே எழுதினார். இன்றைக்கு வரைக்கும் பேசப்படுகிறதே,..அப்படி. இந்த விமர்சனத்தை நான் மறுத்ததில்லை!

ஒரு நண்பர் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எழுதினார். பன்றி குட்டிப் போடுவதைப் போல சிலர் நூல்கள் போடுகிறார்கள். சிங்கம் குட்டி போடுவதைப் போல ஒன்று போட்டாலும் தரமான ஒரு குட்டியாகப் போட வேண்டும், என்று. இந்த விமர்சனம் எனக்காக எழுதியது அல்ல. இந்த விமர்சனத்தோடும் என் படைப்புகளை பொருத்தி பார்த்திருக்கிறேன்.

எந்த விமர்சனத்திற்கும்  நான்  பதில் சொல்ல நினைத்ததில்லை. இதற்குக் காரணம் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள்!

அவரது கதைகளை ஒவ்வொரு சொல்லாக அனுபவித்து வாசிக்கும் தீவிர வாசகன் நான். அவரது சொற்களில் மயங்கி அவரிடம் பல நாட்கள் உரையாடியிருக்கிறேன். எனது சொற்களை உள்வாங்கிக்கொண்டு, அவரது  கதைகள்மீது நவீன எழுத்தாளர்கள் வைக்கும் எதிர்மறையான விமர்சனங்களைக் கொஞ்சமும் தயங்காமல் என்னிடம் பகிர்ந்துகொள்வார்.

இதற்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டேன். விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு சரியெனப் படுவதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து இயங்குவதே சரியான செயல்பாடு என்றார். அவரது வழியையே நானும் பின்பற்றுகிறேன்.

என்னை அவரிடம் கொண்டுபோய் சேர்த்த சிறுகதை 'அழகான கருப்பி'. சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தையும் அந்த விபத்தில் மரணமுற்ற ஒரு சிறுமியையும் மையப்படுத்தி  அந்தக் கதையை எழுதியிருந்தேன்.  கிழக்கு வாசல் உதயம் இதழில் அக்கதை பிரசுரமானது. அக்கதையை வாசித்த மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் இதழாசிரியரிடம் மூலமாக என்னை அழைத்து பாராட்டினார்.  அதன்பிறகு அவரை நான் இறுகப் பற்றிக்கொண்டேன்.

என் எழுத்தின் முன்னத்தி ஏர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள்தான். அவர் மரணித்து எனக்கு அதிர்ச்சி கொடுக்கையில்  அவருக்கு நான் எழுதிய இரங்கல் கட்டுரையின் தலைப்பாக அதையே சூட்டினேன்.  என் முன்னத்தி ஏருக்கோர் அஞ்சலி! என்று.

இருபது சிறுகதைகள் எழுதி பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமானதன் பிறகு அதிலிருந்து பதினைந்து கதைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக்கும் முயற்சியில் இறங்கியபோது நூலுக்கு அணிந்துரை வேண்டி அவரைத் தொடர்புகொண்டேன். அவர் அனுப்புங்கள்,  எதிர்காலத்தில் எழுத்தில் மிளிரும் தன்மை தங்களிடம் தென்பட்டால் அணிந்துரை தருகிறேன் என்றார். ஒரு வாரத்தில் அவ்வளவு கதைகளையும் வாசித்து அன்பில் ஓர் அணிந்துரை எனும் தலைப்பில் எழுதி அனுப்பினார். அந்த அணிந்துரையில் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஆண்டன் செகாவ் படைப்புகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இந்த அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாக கரிசல் இலக்கிய விழாவைப் பயன்படுத்திக்கொண்டேன்.

டிசம்பர் 15, சிவகாசியில் நடைபெற்ற கரிசல் இலக்கிய விழாவில் வடிவக் கதைகளும் வகைமைக் கதைகளும் எனும் தலைப்பில் உரையாற்றினேன். கி.ரா,  பூமணி, சோ.தர்மன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசாமி ஐவரும்  கரிசல் வட்டார வழக்கில்  கதைகள் எழுதினாலும் ஐவரின் கதைகளும் வாசிக்க சற்றே ஒன்றுபோலிருந்தாலும் ஐவரின் கதைகளிலிருக்கும் நுண்ணிய வேறுபாடுகளை என்னளவில் நான் உணர்ந்ததை வேறுபடுத்தி காட்டினேன். இவர்களோடு பா. செயப்பிரகாசமும் அடங்குவார்.

தமிழ்நாட்டில் இலக்கியத் திருவிழாக்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.  ஆயினும் விருதுநகர் கரிசல் இலக்கிய விழா மற்ற விழாக்களை விடவும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. நல்ல திட்டமிடல்.  விழாவில் கல்லூரி மாணவியர்கள் திரளாக பங்கேற்றிருந்தார்கள். எழுத்தாளர்களுக்கான நினைவு பரிசுகளில் திருவள்ளுவர் இடம்பெற்றிருந்தார்.  விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் வாழ்த்துரை வழங்கிய நூலும் இதில் இடம்பெற்றிருந்தது.

மாவட்ட ஆட்சியர் திரு. முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்களுடன் சற்றுநேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. கரிசல் இலக்கியக் கழகத்தின் செயலர் மருத்துவர் திரு. த. அறம் அவர்கள் என்னை ஆட்சியரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஆட்சியரிடம் எனது நூலொன்றை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இந்த வாய்ப்பை  நல்கிய தோழர். த. அறம் அவர்களுக்கு எந்நாளும் எனது  நன்றிகள்!

வீடு திரும்பி இளைப்பாறுகையில் மனதிற்கு ஒன்று தோன்றியது. சிறுகதை எழுதுவதிலிருந்து கொஞ்சம் நான் விலகி வருவதை என்னால் உணர முடிந்தது. தற்போது எனது கவனம் நாவல், ஆய்வு, வரலாறு, கட்டுரை வடிவங்களில் குவிகிறது. சிறுகதை பக்கமாக இன்னும் கொஞ்சம் நான் திரும்பத்தான் வேண்டும்.  முன்னேவிடவும் நுட்பமாக, ஆழமாக, தீர்க்கமாக!

திரும்புகிறேன்!

நன்றி - கரிசல் இலக்கிய விழா !



















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்