வேங்குடிவயல் - ஏற்புரை

 எனது ஏற்புரை-இராம. செ. சுப்பையா நினைவு நாவல் போட்டி பரிசளிப்பு விழா

இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் முதல் மூன்றிடம் பெற்ற நாவல்களுக்கான பரிசளிப்பு விழா கோடம்பாக்கத்தில் நடைபெற்றது.  படைப்பு குழுமம் அரங்கில் நடைபெற்ற விழாவில் நாவல் போட்டியின் நடுவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் தமது உரைகளில் போட்டிக்கு வந்த நாவல்களின் கதை, எழுத்து மொழி, தற்போதைய நாவலின் போக்கு ஆகியவற்றைக் கோடிட்டு பேசினார்கள்.

பரிசு மற்றும் கேடயம் வழங்கிய பிறகு எழுத்தாளர்கள் ஏற்புரையில் எழுத்து அனுபவம் குறித்து பேச கேட்டுக்கொண்டார்கள். எனது ஏற்புரையை இவ்வாறு அமைத்துக்கொண்டேன்.




இராம. செ. சுப்பையாவின் பெயர் திரும்பத் திரும்ப இந்த பூமியில் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுப்பையாவின் மகன் தேவாசுப்பையா இந்த நாவல் போட்டியை நடத்துவதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் குக்கிராமமான அண்டனூர் என்கிற எனது கிராமம்  இலக்கியப் பரப்பில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக  அண்டனூர் சுரா எனும்  பெயரில் கதைகள் எழுதித் கொண்டிருக்கிறேன்.  எனது அப்பா பெயரும் சுப்பையாதான்.

இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் தமிழ் மூன்றாம், நான்காம் , ஐந்தாம் இடத்திற்குள் இருக்கிறது. ஆனால் இந்திய மொழிகளில் அதிகம் எழுதப்படும் மொழிகளின் வரிசையில் தமிழ் முதலிடம் பிடித்திருக்கிறது. இதற்கு  பல அறக்கட்டளைகள்,  இலக்கிய அமைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடத்துவதும் ஒரு காரணம். அந்த வகையில் இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளைக்கு எனது வணக்கங்கள்.

இந்த நாவலை வாசித்த சிலர் வேங்குடிவயல் முதல் பரிசுக்குரியது என்றார்கள். அந்த விமர்சனத்தை நான் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை.  ஐந்து நடுவர்களின் முடிவுகளை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன். நாவல் அதற்குரிய இடத்தை அதாவது மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஏன் இந்நாவல் பரிசே பெறாமல் பிரசுரத்திற்குரிய நாவலாக தேர்வுபெற்றிருந்தாலும் அதையும் நான் மனமுகந்து ஏற்றிருப்பேன்.  காரணம் இந்நாவல் பரிசுப்போட்டிக்காக எழுதப்பட்டதல்ல.  எழுதிய நாவலொன்று என்னிடம் கைவசமிருந்ததால் நாவல் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். எனது மாவட்டத்தில் நிகழ்ந்தேறிய ஒரு அவகரமான  சம்பவத்தின் புனைவே இந்நாவல்.

மனிதனின் மனக்கிடங்கில் பாம்புகள், புலி, சிங்கம், எருது, பசு என்று பல விலங்குகள் தூங்குகின்றன. நாமெல்லாம் யாராக இருக்கிறோம். நமக்குள்ளாக என்ன விலங்கு தூங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இந்நாவலை வாசித்து உங்களையே நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த நாவலை நாற்கரம் வெளியிட்டிருக்கிறது  காலையில் முகநூலில் சு. மாதவன் எனும் பேராசிரியர் நாற்கரம் வழியே விருது பெறும் நூற்கரம் என்று வாழ்த்தினார். நாற்கரம் - நூற்கரம் இரண்டு சொற்களும் எனது இலக்கியப் புலத்திற்குப்  புதிது. ஒரு பதிப்பகத்தார் ஒரு படைப்பை வாசித்து பிழைத்திருத்தம் செய்து நூலை பிழையில்லாமல் கொண்டுவரும் சில பதிப்பகங்களின் வரிசையில் நாற்கரம் பதிப்பகம் இருக்கிறது. அந்தப் பதிப்பகத்துடன் இந்த நாவல் போட்டியோடு தொடர்புடைய எல்லாருக்கும்  எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்