பள்ளத்தான்மனை பெயர்க்காரணம்

 அனைவருக்கும் வணக்கம்,


பள்ளத்தான்மனை அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியின் பொன் விழா ஆண்டில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்தமைக்காக பெருமை கொள்கிறேன். 

பள்ளத்தான்மனை ஊர் பள்ளி ஆண்டுவிழாவில் எதைப் பற்றி பேசுவது என்று யோசித்தபொழுது ஊர்ப் பெயர்க்காரணம் குறித்து பேசலாமென்று  அதற்கான ஆய்வில் இறங்கினேன். எனது இந்த ஆய்வு தவறாகக்கூட இருக்கலாம். ஆயினும் உங்கள் ஊர்ப்பற்றிய ஆய்வை இந்த மேடையில் தொடங்கி வைக்கிறேன்.

பள்ளத்தான் என்பது என்னவென்று ஆராய்கையில் ஆனைவிழுந்தான், பன்றியான் ஊர்ப் பெயர்கள் என் ஆய்வுக்கு வந்தன.

ஆனைவிழுந்தான் பள்ளம் என்று அழைக்கப்படும் இவ்வூர் கந்தர்வகோட்டைக்கும் அருகில் உள்ளது. ஆனைவிழுந்தான் என்பது என்னவென்றால் யானைகளின் மூர்க்கத்தை அடக்கி மனிதப் பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறவர்கள் ஆனைவிழுந்தான் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பள்ளமான இடத்தில் குடிவைக்கப்பட்டார்கள்.  ஆகவே அது ஆனைவிழுந்தான் பள்ளம் என்று அழைக்கப்பட்டது.

பன்றியான் பள்ளம் என்றோர் இடம் புதுக்கோட்டைக்கும் அருகில் உள்ளது. விவசாயத்தைச் சீரழிக்கும் காட்டுப்பன்றிகளை பிடித்து அடக்கி விவசாயத்தை காப்பவர்கள் பன்றியான் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் குடிவைக்கப்பட்ட இடம் பன்றியான் பள்ளம்.

இந்த பொருளில்தான் பள்ளத்தான்மனை எனும் ஊர்ப் பெயர் விளங்குகிறது. பள்ளமான இடத்தை மேடுகளைக் கொண்டு கரைத்து சமப்படுத்துகிறவர்கள் பள்ளத்தான் என்று அழைக்கப்பட்டார்கள்.

இப்பகுதி சுற்றிய ஊர்கள் ஒரு காலத்தில் மேடும் பள்ளமுமாக , குளம் குட்டைகளாக இருந்திருக்கின்றன. இப்பகுதி மண் கரம்பை வகையைச் சார்ந்தது. ஆகவே இப்பகுதியின் பெரிய ஊரான கரம்பக்குடி கரம்பை எனும் மண்ணின் பெயரால் பெயர் விளங்குகிறது.

மேடுகளைக் கரைத்து  பள்ளங்களில் நிரப்பி பூமியைச் சமப்படுத்தியவர்கள் பள்ளத்தான்கள். இவர்கள்  முதலில் பள்ளத்தில் குடிவைக்கப்பட்டார்கள்.  பள்ளத்தில் குடியிருந்த இவர்கள் மற்ற ஊர் மக்களுக்கு நிகராக குடியிருப்பு இடத்தைச் சமப்படுத்தி மனை அமைத்து வாழ்ந்தார்கள். ஆகவே இவ்வூர் பள்ளத்தான்மனை என்று அழைக்கப்பட்டது.

அப்படியென்றால் பள்ளத்தான்மனை மக்கள் பெரும்  உழைப்பாளிகள். உழைப்பாளிகள் மட்டுமல்ல, மேடு பள்ளம் ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்த சமத்துவவாதிகள். அடிமை வாழ்வு முறையிலிருந்து எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை பெற்றுக்கொண்ட ஊர் பள்ளத்தான்மனை.

இந்த ஊர் எனக்கு ஆசிரியரைத் தந்திருக்கிறது. எம். ஆர் என்று அழைக்கப்படும் ஆசிரியர் எம். ரெங்கசாமி அவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்.

இந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியர் ஜெயந்தி அவர்கள் என்னுடன் படித்தவர். மேனிலை வகுப்பில் எனக்குப் பெரும் போட்டியாளராக இருந்திருக்கிறார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர்.

எனக்கு நெருங்கிய நண்பர்கள் இந்த ஊரைச் சார்ந்தவர்கள். அவர்களில் திருவாளர்கள் பிரகாஷ், முருகராஜ், திருமேனி, பிரபாகர் முக்கியமானவர்கள். பிரகாஷ் என்னுடன் படித்து எனக்கு அதிகாரியாக வந்தவர்.

இந்த ஊரைச் சார்ந்த விஜயன் அவர்கள் தற்போதுள்ள எழுத்தாளர்களில்  முதலில் கவிதை நூல் வெளியிட்டவராவார். அவரது நூல் காதல்+சமுதாயம்=காகிதம். இந்த நூல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில்  மேடை அமைத்து பெரும் விழாவாக வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் மேடைக்கு அழைக்கப்பட்ட பல குழந்தைகள் எதிர்கால எழுத்தாளர் என்று அழைக்கப்பட்டார்கள். இப்படியாக வேறெந்த ஊர்களிலும் அழைத்து நான் கேட்டதில்லை. இந்த ஊரில் அப்படியாக அழைக்கப்பட காரணம் எழுத்தால் பாதிக்கப்பட்டு  எழுத்தால் நிமிர்ந்திருக்கின்ற துரை.குணா அவர்கள் இந்தப் பள்ளியில் படித்தவர். அதுமட்டுமன்றி அவரது குழந்தைகள் இப்பள்ளி மாணவர்கள்.

இத்தகைய சிறப்புமிக்க பள்ளியின் ஆண்டுவிழாதான்  இன்று பெரும்விழாவாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த விழாவை வாழ்த்த பௌர்ணமி நிலவு வானில் மையம்கொண்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பள்ளியைக் காக்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் உங்கள் எல்லாருக்கும் இருக்கிறது. பொன்விழா காணும் இப்பள்ளி நூற்றாண்டு காண  பொன்விழா காணும் இந்நாளிலேயே வாழ்த்துகிறேன்.

இப்பள்ளி நூலகத்திற்கு  நான் எழுதிய நூல் ஒன்றை பரிசாக  வழங்குகிறேன்,,,

(14.03.2025 அன்று பள்ளத்தான்மனை அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில் எனது உரையின் சாராம்சம்)




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்