அறிவுடைமை

 அனைவருக்கும் வணக்கம்,








தேமா,  புளிமா என்பவை யாப்பு இலக்கணம் அலகிட்டு வாய்ப்பாடுகள்.  இதேபோன்று ஒய்மா என்றொரு சொல் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது.


ஒய்மா  என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடை ஊர். இந்த இலக்கியம் 'ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்' என்கிற வள்ளலைப் பாடுகிறது. பாடியவர்  'நத்தத்தனார்' எனும் புலவர். 

ஒய்மா நாடு என்பது இன்றைய  திண்டிவனம் பகுதி.  நல்லியக்கோடன் எனும் வள்ளல் ஓவியர் குடி மரபில் வந்தவன். இம்மன்னனை புலவர் நல்லியக்கோடன் ஓரிடத்தில் இவ்வாறு காட்சிப்படுத்துகிறார். 

"சிரித்த முகத்துடன் திகழும் தனது சுற்றத்தினருடன் அரசன் நல்லியக்கோடன் அரசவையில் வீற்றிருக்கிறான். அந்தக் காட்சி எப்படியாக இருக்கிறதென்றால் பல விண்மீன்களுக்கு நடுவில் ஒளிமிக்க திங்கள் திகழ்வதைப் போன்றிருக்கிறது". என்னவோர் உவமை!

இந்த உவமைக்கு நேர்மாறாக மாணவர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். திங்கள் முகம் கொண்ட தலைமைஆசிரியரைச் சுற்றிலும் ஒளிமிக்க, பிரகாசமான நட்சத்திரங்களாகச் சூழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் கண்களில் ஒளிரும் இந்த ஒளியும் முகத்தில் தெரியும் இந்தப் பிரகாசமும் அணையாமல் காக்கவே இந்த இலக்கிய விழா.

பொன்னன்விடுதி எனும் ஊர் சமீபத்திய ஊர். இந்த ஊர்களெல்லாம் விடுதி என்று வருகிறதோ அந்த ஊர்களெல்லாம் ஐந்நூறு ஆண்டுகளுக்குட்பட்ட ஊர். புதுக்கோட்டையில் விடுதி ஊர்கள் பல உள்ளன. இவற்றில் அழகான ஊர் பொன்னன்விடுதி.

நமது ஊருக்கும் அருகிலுள்ள மழையூர் அப்படியல்ல. பன்னிரெண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூர் இடம்பெற்றுள்ளது.

இவ்வூரை மக்கள் மலையூர் என்று எழுதுகிறார்கள். சிலர்  மழையூர் என்று எழுதி வருகிறார்கள். இரண்டில் எது சரி?

இவ்வூரில் மலையோ,  குன்றோ இல்லை. ஆகவே இவ்வூர் மலையூர் என்று அழைக்கப்பட வாய்ப்பில்லை. எல்லா ஊரிலும் பெய்யும் மழைதான் இந்த ஊரிலும் பெய்கிறது. அப்படியிருக்க இந்த ஊர் மட்டும் விசேசமாக மழையூர் என்று அழைக்கப்பட காரணம்?

மழையூர்  அக்னியாற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அக்னியாறு அஞ்ஞான விமோசனி ஆறு என்று வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.  ஆயினும் மக்கள் அழைப்பது காட்டாறு என்றுதான்.

அந்த ஊரையொட்டியுள்ள ஆற்றின் கரையில்  முன்னோர் வாழ்ந்துள்ளார்கள்.  கோடைக்காலத்தில் பிரச்சனையில்லை. மழை காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தால் மக்களின் சேமிப்புகள், ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மழைக்காலத்தில் கரைப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து ஆற்றின்  தென்பகுதிக்கு வந்தவர்கள் கோடை காலத்தில் திரும்பவும் பழைய இடத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்.  மழை காலத்தில் பூர்வீக இடத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியேறிய ஊர் என்பதால் அதற்கு மழையூர் என்று பெயர்.

இன்று நான்  அறிவுடைமை எனும் தலைப்பின்கீழ் சில அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இத்தலைப்பு நானாக தேர்வு செய்த தலைப்பு. இங்கு வந்தபிறகுதான் தெரிந்துகொண்டேன் இப்பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் அறிவுடைநம்பி என்று.

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லில் ஒன்று அறிவு.

அறிவுடைமை எனும் பெயரில் தனி அதிகாரம் படைத்துள்ளார்.  அந்த அதிகாரத்திற்குள் அறிவைப் பாடியதோடில்லாமல் அந்த அதிகாரத்திற்கும் வெளியேயும் அறிவு குறித்து பாடியுள்ளார்.

அறிவு என்பது ஒரு பொருள். கொடுத்துப் பெறக்கூடியது. பெற்றுக்கொடுக்கக்கூடியது. அதுமட்டுமன்று. அது பெருகக்கூடியது.  பெறுக்கக்கூடியது.  ஆகவேதான் அறிவுடைமை எனும் அதிகாரத்தைப் பொருட்பாலில் வைத்து பாடியுள்ளார்.

அறிவுடைமை எனும் அதிகாரத்தைத் தாண்டி கல்வி எனும் அதிகாரத்தில் ஒரு ஒரு குறளைப் பாடியுள்ளார். நம் எல்லாரும் பிடித்த குறள் இது.

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு.

நான் முதலில் கற்றுக்கொண்ட குறள் இதுதான்.  இந்தக் குறள் ஏன் நம் பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்தக்குறளாக இருக்கிறது?  இக்குறளில் உள்ள மணற்கேணிதான் அதற்குக் காரணம்.

சின்ன வயதில் ஆடு மாடு ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்காக அக்னி ஆற்றங்கரைக்கு வருவோம். தாகமெடுத்தால் தண்ணீர்த்தேடி குளம், குட்டைகளுக்கு ஓடவேண்டியதில்லை. ஆற்றின் மணற்பரப்பைத் தோண்டினால் நீர் கிடைக்கும். இதை நாங்கள் சுருக்குநீர் என்று சொல்வோம்.

அது என்ன சுருக்குநீர்? பாட்டி சுருக்குப்பையில் காசு மறைத்து வைத்திருப்பதைப்போல இந்த ஆறும் தன் சுருக்குப்பைக்குள் இந்த நீரை மறைத்து வைத்திருக்கும். ஆகவே  ஊற்றுநீரை சுருக்கு நீர் என்று சொல்வோம். இப்பொழுதெல்லாம் ஆற்றில் ஊற்றுநீர் கிடைப்பதில்லை என்பதால் சுருக்குநீர் எனும் பதம் வழக்கொழிந்துவிட்டது.

திருவள்ளுவர் ஏன் அறிவுக்கென்று தனி அதிகாரம் ஒதுக்கினார்? அந்த அதிகாரத்தில் ஏன் இத்தனை வகையான அறிவுகளைப் பாடினார்?

நீங்கள் பத்தாம் வகுப்பு படிக்கிறீர்கள்.  பத்தாம் வகுப்பில் நீங்கள் சராசரியாக ஐநூறுக்கு நானூற்று இருபது மதிப்பெண்களுக்கு மேலாக எடுக்க வேண்டும் என்பதற்காக  அறிவுடைமை அதிகார குறள்களின் வரிசை 421 - 430 என்பதாக இருக்கிறது.

ஒரு மன்னன் எதிரி மன்னன் மீது படையெடுத்தான்.  எதிரி மன்னனின் அரண்,  அரண்மனை, கோட்டை, கோபுரம் எல்லாவற்றையும் சுவடு தெரியாமல் அழித்து வருவது அவனது நோக்கம். படைத்தெடுத்த மன்னன் எதிரியின் கோட்டை கொத்தளத்தை அளித்துவிட்டு திருவள்ளுவரிடம் வந்து சொன்னான். "வள்ளுவரே, என் எதிரியின் மொத்த களத்தையும் நான் சுவடில்லாமல் அழித்துவிட்டேன்.  அவன் தனக்கென்று உரிமை கொண்டாட அவனிடம் ஏதுமில்லை" என்றான்.

வள்ளுவர் சிரித்தார். சிரிப்புக்கான பதிலை அறிவுடைமை எனும் அதிகாரத்தில் முதல் குறளாக வைத்தார். "அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்". பகைவனால்கூட உள்ளே நுழைந்து அழிக்கமுடியாத அரண் என்பது அறிவு.

வள்ளுவர் தான் இயற்றிய அதிகாரங்களில் பெரிதும் குழம்பிய அதிகாரம் அறிவுடைமைதான்.
திருவள்ளுவருக்கே குழப்பமா என்று பார்க்கிறீர்களா? அறிவு என்பது என்ன என்கிற கேள்வி அவர் பலவிதமாக பதில் எழுதியுள்ளார்.

ஒரு குறளில் நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று எழுதினார்.

மற்றொரு குறளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார்.

இன்னொரு குறளில் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு என்கிறார்.

மேலுமொரு குறளில்  அவ்வதுறைவது அறிவு என்கிறார். 

ஒரு குறளில் நுண்பொருள் காண்பது அறிவு என்கிறார். அறிவுக்கு அவர் இத்தனை வகையான அறிவுகளை காட்சிப்படுத்துகிறார்.

இந்தக் குறள்களில் இன்றைய தேவை நுண்பொருள் காண்பது அறிவு.  இது மெய்ப்பொருள் காணும் அறிவை விடவும் நுட்பமான அறிவு.

முன்பெல்லாம் உண்மை என்பது திண்ணையில் இருந்தது. தெருவில் இருந்தது. பெரிய மனிதர்களிடம் இருந்தது. கற்றவர்களிடம் இருந்தது. இப்பொழுது உண்மை எங்கே இருக்கிறதென்றால் பொய்களின் மூட்டைகளுக்குள் இருக்கிறது.

பொய்களிலிருந்து  உண்மையை நாம் கண்டறிய நுட்பமான அறிவு தேவையாக இருக்கின்றது.

இது போட்டிக்கான உலகம். நீங்கள் மாவட்ட ஆட்சியராக,  விஞ்ஞானியாக,  கலைத்துறைகளில் தனித்த இடம்பெற தங்கள் அறிவுகளை நுண்ணறிவாக உருமாற்ற வேண்டும்.


இந்த அறிவைப் பெருக்கிக்கொள்ளுங்கள். காரணம் அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலான் என்னுடைய ரேனும் இலர்.

நன்றி வணக்கம்.

24.03.2025 அன்று பொன்னன்விடுதி அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ்க்கூடல் நிகழ்வில் ஆற்றிய உரையின் சாராம்சம்,,,

நன்றி - ஆசிரியர் பெருமக்கள் , திரு. சுதர்சன் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அவர்கள்,,,



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்