முத்தமிழின் விழுமியங்கள்
அனைவருக்கும் வணக்கம்,
கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சிறப்பு என்பது அதன் அமைவிடம்தான்.இந்தக் கல்லூரி கரம்பக்குடியின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மருதன்கோன்விடுதி எனும் ஊரில் அமையப்பெற்றுள்ளது.
ஊர்ப்பெயர்களில் மரூஉக்கு உட்படாத ஊர் மருதன்கோன்விடுதி.
இந்த ஊருக்கும் அருகிலுள்ள ஊர் மைலன்கோன்பட்டி, மேலங்கபட்டி என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் உண்மையான பெயர் மகிழ்நன்கோன்பட்டி.
அதற்கும் அடுத்து அம்புக்கோவில் உள்ளது. அகநானூறு, மதுரைகாஞ்சி, புறநானூறு, சிலப்பதிகாரத்தில் அழும்பில் என்று பாடப்பட்ட ஊர்தான் அழும்பில்கோவில் என்றாகி தற்போது அம்புக்கோவில் என்றுமருவியுள்ளது.
இன்னொரு புறம் கொத்தகப்பட்டி என்றார் ஊர் உள்ளது. இந்த ஊரிலிருந்துகூட நிறைய மாணவர்கள் படிக்கிறீர்கள். அந்த ஊர் நீண்ட ஏரிக்கரையில் அமைந்துள்ளது. ஏரியின் கரைக்கு கோட்டகம் என்று பெயர். சிலப்பதிகாரத்தில் இச்சொல் உள்ளது.
கோட்டகம்பட்டி என்பதுதான் இன்று கொத்தகப்பட்டி என்று திரிந்துள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஊரிலிருந்து மாணவர்கள் படிப்பதால் இக்கல்லூரி வரலாற்று சிறப்பு ஊராக இருக்கிறது.
முத்தமிழில் விழுமியங்கள் எனும் தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தமிழ் எப்படி முத்தமிழாகும்? தமிழ் என்கிற சொல்லில் த என்பது வல்லினத் தமிழ். மு என்பது மெல்லினத் தமிழ். ழ் என்பது இடையினத் தமிழ். தமிழின் மேன்மையைப் பாருங்கள். அதன் மாண்பை பாருங்கள்.
முத்தமிழ் என்றால் நாம் எல்லாரும் சொல்வது இயல், இசை, நாடகம் இம்மூன்றையும்தான். நாடகம் என்பது தமிழ்ச்சொல்தானா, என்கிற சந்தேகம் வருகிறது.
நாடகத்திற்கு வேறொரு தமிழ்ப்பெயர் இருக்கிறது.
இயல் பலருக்குப் பெயராகச் சூட்டப்படுகிறது. இயல்விழி, இயல்வதி, இயலவன் இப்படியாக.
இசையின் பெயரால் பெயர்கள் உள்ளன. தமிழிசை, மழையிசை, குழலிசை, இசையரசி, ஏன் இசை என்றே ஒருவருக்கு பெயர் உள்ளது.
ஆனால் நாடகத்தின் பெயரால் யாரும் பெயர் வைப்பதில்லை. பெயர்தான் வைப்பதில்லையே தவிர நாடகம் என்கிற சொல் பேச்சு வழக்கில் உள்ளது. அவன் நாடகக்காரன், என்னே நாடகமாடுறான்,...இப்படியாக.
நாடகம் என்பது ஒரு காலத்திற்குப் பிறகு தாழ்நிலை பெயராகியிருக்கிறது. ஆகவேதான் அச்சொல் மாண்பமை சொல்லுக்கு மாறாக அதன் எதிர்நிலையில் அச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
நாடகம் என்பது தற்காலத்திய பெயர். நாடகத்தின் ஆதிவடிவம் என்பது கூத்து.
பத்துப் பாட்டுகளில் ஒன்றான மலைபடுகடாம் எனும் நூல் கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.
கூத்துக்குள் பாணன் வருகிறான். விறலி வருகிறாள். கூத்தன் வருகிறான். பொருநன் வருகிறான்.
நமது மாவட்டத்தில் விராலிமலை என்றோர் ஊர் உள்ளது. விராலி மரங்களான மலை என்பதால் அதற்கு விராலிமலை என்று பெயர். விறலிமலைதான் விராலிமலை என்றானதாக பதிவுகள் உண்டு. அதாவது விறலியர் என்கிற கூத்துப் பெண்கள் வாழ்ந்த ஊர் விறலிமலை. அதுவே விராலிமலை என்றானது.
இன்று கூத்து என்பதும் நாடகம் என்பதும் வெவ்வேறாக பார்க்கப்படுகிறது. நம் முன்னோர்களின் கூத்துதான் இன்று நாடகமாக உருமாற்றமாகியிருக்கிறது.
கூத்தின் பெயரால் கூத்தன், கூத்தையன், கூத்தாயி என்று இன்றும் பெயர்ச்சூட்டப்படுகிறது. இங்கு கூத்து என்பது பண், நடனம் இரண்டும் கொண்டது. நடனம் பெயரால் எனக்கொரு நண்பர் இருக்கிறார். நடனம் என்பதும் கூத்தன் என்பதும் சிவபெருமானைக் குறிக்கிறது.
இறை வழிபாட்டில் திருமால், சிவன் இரண்டும் இரு பெரும் தெய்வங்கள்.
திருமால் துயில் கொள்கிறவன். அவன் மேலும் தூங்குவதற்காக பண் இசைக்கப்படுகிறது. சிவன் நடனக் கோலம் கொண்டவன். அவனை மேலும் ஆட்டுவிப்பதற்காக பண் இசைக்கப்படுகிறது. ஆகவேதான் கூத்தன், நடனம், நடராசன் ஆகிய பெயர்கள் அவனுக்கு உரியதாக இருக்கிறது.
எந்த மொழியின் பெயராலும் தனி மனிதப் பெயர்கள் அழைக்கப்படுவதில்லை. தமிழுக்கு மட்டுமே இச்சிறப்பு உண்டு. தமிழரசன், தமிழச்சி, தமிழரசி, தமிழழகி, முத்தழகு, முத்தமிழன்,...இப்படியாக.
முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் இவை மூன்று மட்டும்தானா?
இன்று முத்தமிழ் என்பது அறிவியல் தமிழ், கணினி தமிழ், மருத்துவ தமிழ் என்பதாக வளர்ந்துள்ளது.
இன்று தமிழை வளர்ப்பது கவிதை, சிறுகதை, புதினம் எனும் மூன்று தமிழ்கள். ஆகவே இவை மூன்றையும் முத்தமிழ் என்று சொல்லலாம்.
இயல், இசை, நாடகம் மூன்றையும் எந்த நூலேனும் பாடியுள்ளதா என்று பார்க்கையில் நச்சினார்க்கினியர் ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இயல், இசை, நாடகம் எனும் மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கி அகத்தியர் ஒரு நூலைப் படைத்தார் என்று. இதுவொரு கருத்தாக இருக்கிறது. அந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை.
முத்தமிழின் விழுமியங்கள் இன்றைய வாழ்வில் நம்மிடம் இருக்கிறதா, என்று நாம் நமக்குள் தேடுகையில் நம்மையும் அறியாமல் அதற்குள் நாம் கட்டுண்டு இருப்பதை உணரமுடிகிறது.
இன்று இசை ஹிந்துஸ்தான் இசை, கர்னாடிக் இசை, மேற்கத்திய இசை என்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிம்பொனிக் இசை இன்று உலகளவில் பேசும்பொருளாகியிருக்கிறது.
இன்று இசை இவ்வளவு பெயரால் அழைக்கப்பட்டாலும் பண்டைய தமிழர்களின் பாமரர்களின் மெட்டு என்பது ஆனந்தக் களிப்பு மெட்டு. தாயுமானவர் இந்த மெட்டில் அதிகப்படியான பாடல்களை இயற்றினார். ஆகவே அதற்கு தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டு என்று பெயர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் இந்த மெட்டில் பல பாடல்கள் இயற்றியுள்ளார். குறிப்பாக நாம் பள்ளியில், கல்லூரியில் வழிபாட்டு கூட்டத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றியதன்பிறகு பாடுகின்ற தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்கிற பாடல் இந்த மெட்டிலேயே பாரதியார் இயற்றினார். இதே மெட்டில் ஓடி விளையாடு பாப்பா என்கிற பாடலையும் பாடலாம்.
ஆனால் இன்று நாம் பாடுகின்ற தாயின் மணிக்கொடி பாரீர் என்கிற பாடல் அந்த மெட்டில் பாடவில்லை.
கடுவெளி சித்தர் இந்த ஆனந்த களிப்பு மெட்டில் பாடல்கள் இயற்றியுள்ளார். பரந்த வெற்றிட பரப்பில் தவம் செய்து சித்தரானதால் அவருக்கு கடுவெளி சித்தர் என்று பெயர்.
பாவம் செய்யாதிரு மனமே- நாளைக்
கோபசெய்தே எமன்
கொண்டோடிப் போவான்
பாவம் செய்யாதிரு மனமே!
இது அவர் பாடிய 35 கண்ணிகளின் பல்லவி. அந்த கண்ணிகளில் ஓர் பாடல்
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி- மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தான் தாண்டி.
இந்த பாடல் பானை, தோண்டி, தொட்டி செய்யும் குயவரைப் பற்றிய பாடல் என்பதாக பார்த்தால் அது இயல்.
இப்பாடலில் உள்ள நாலாறு என்பதை நான்கு+ஆறு =பத்து என்று பிரித்தால் அது பத்து மாதக் கரு என்பதைக் குறிக்கும்.
அப்படியாக பத்து மாதங்கள் கருவுற்று வளர்த்து, பெற்றெடுத்து வளர்ந்து அந்த பிறப்பின் ரகசியத்தையும் பெருமையையும் அறியாமல் பொறுப்பற்று வாழ்ந்து குறை வயதிலேயே இறந்து போகிறவன் ஒருவனை கூத்தாக நடித்தால் அதுவே நாடகம்.
இதே சித்தர் வேறொரு கண்ணியில் பாடியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு இது பெரிதும் உதவும்.
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப்புலன் எனும் காட்டை- வெட்டிக்
கனலிட்டு எரித்திட்டால் காணலாம் வீட்டை.
இன்றைய வாலிப பருவத்தில் நான்கு வகையான தீய குணங்கள் நம்மை பற்றுகிறது. காமம், குரோதம், மதம், மாற்சரியம். இந்த நான்கையும் நம்மிடமிருந்து விரட்டிவிட்டால் நமது உடல் எனும் நாட்டை ஆளலாம் என்கிறது இப்பாடல்.
ஒரு மனிதனின் வாழ்விற்குள் இயல் இருக்கிறது. இசை இருக்கிறது. நாடகமும் இருக்கிறது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
ஆகவேதான் ஷேக்ஸ்பியர், "உலகம் ஒரு நாடகமேடை. அதில் நாம் எல்லாரும் நாடக மாந்தர்கள் என்றார். "
புகழேந்திப் புலவர் பாடிய தனிப்பாடல் ஒன்றுண்டு.
பழியும் புகழும் எவர்க்கும் உண்டாம் இந்தப் பாரில் உனக்கு
அழியும் சிலையும் கயலுமென்றோ அகளங்கதுங்க
மொழியும் பொழுது எங்கள் பெண் சக்கரவர்த்தி முகத்திரண்டு
விழியும் புருவமும் ஆகி இப்போது உன்னை வெல்கின்றவே!
இந்தப் பாடல் இயலாக இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடல் பா வடிவம் கொண்டிருப்பதால் இதற்குள் அந்த பா வுக்கு உரிய ஓசை கொண்டுள்ளது.
இந்தப் பாடலின் பொருளை கதையாகக் கூறினால் இதற்குள் ஒரு கூத்துக்கலையும் நாடகமும் இருப்பது காணலாம்.
கதை இதுதான்.
சோழ மன்னன் அரசியுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். இவர்களின் ஆட்டத்தைப் புகழேந்திப் புலவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். இருவரில் யார் வெற்றி பெறுவார்கள்? இது காதல் அல்லவா, அரசியே வெற்றி பெறுகிறாள்.
கலைஞர் மு. கருணாநிதி ஒரு படத்தில் வசனம் எழுதியிருப்பார். மிருக ஜாதியில் புலி மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியில் மான் புலியை வேட்டையாடுகிறது.
இங்கு கடல்கொண்ட சோழன் சொக்காட்டத்தில் அரசியிடம் தோற்றுவிடுகிறான். தனது வெற்றியை புலவர் ஒரு பாடலாக பாடமாட்டாரா என்று அரசி ஏங்குகிறாள்.
அரசியின் ஏக்கப்பார்வையை உணர்ந்த புலவர் ஒரு பாடலைப் பாடுகிறார். இந்தப் பாடலை நாடகமாக நிகழ்த்தினால் இப்படியாக இருக்கும்.
சோழன் மீது சேரனும் பாண்டியனும் போர்த்தொடுக்கிறார்கள். போரில் சோழன் இருவரையும் வென்றுவிட்டான். அதாவது புலிக்கொடி வில் கொடியையும் மீன்கொடியையும் வீழ்த்திவிட்டது.
போரில் தோல்விகண்ட சேரன், பாண்டியன் இருவரும் சோழனுக்கு எதிராக சாபமிடுகிறார்கள். எங்கள் வில், மீன் இரண்டும் ஒரு நாள் உன்னை வீழ்த்தும். அந்த சாபம் பலிக்கிறது. வில்லும் மீனும் சோழனை வீழ்த்திவிட்டது. எப்படித் தெரியுமா?
அரசியின் இமைதான் வில். அவளது விழிதான் மீன். சொக்கட்டான் விளையாட்டில் சோழனை மயக்கி அவனை வீழ்த்திவிட்டது.
புகழேந்திப் புலவரின் கற்பனையோ கற்பனை!
இந்தப் பாடலுக்குள் இயல் இருக்கிறது. இசை இருக்கிறது. நாடகம் இருக்கிறது.
இயல் இசை கூத்து மூன்றும் கலைகள் மட்டுமல்ல. மூன்று தமிழ்கள். இந்தத் தமிழ்களை நீங்கள் முறையாக கற்றுக்கொள்வதன்மூலம் வாழ்வில் நிலையான புகழை நீங்கள் அடைவீர்கள்,,,
நன்றி வணக்கம்
29.03.2025 அன்று கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முத்தமிழ் விழாவில் முத்தமிழில் விழுமியங்கள் எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சாராம்சம்.





.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக