எட்டையபுரம் தொன் போஸ்கோ கல்லூரி நாவல் உரை
இன்று எட்டையபுரம் கீழ ஈரால் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் , தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான இலக்கிய கருத்தரங்கில் 'தற்கால நாவல் இலக்கியம்' எனும் தலைப்பில் உரையாற்றினேன். உரையில் தூத்துக்குடி, திருநெல்வேலி நகரங்களை மையமாக வைத்து நான் எழுதிய தீவாந்தரம் எனும் நாவல், அந்த நாவலில முக்கிய பாத்திரமாக இடம்பெற்ற தூத்துக்குடி கசப்புக் கவி ஆண்டான் கவிராயர் குறித்து பகிர்ந்துகொண்டேன். இவர் சாபக்கவி பாடுவதில் தேர்ந்தவர்.
தொடக்கக் கால நாவல்களில் பத்மாவதி சரித்திரம் குறித்தும் நாவலின் முதன்மை பாத்திரமான பத்மாவதி குறித்தும் பகிர்ந்துகொண்டு தற்கால நாவலுக்குள் நுழைந்தேன்.
தற்கால நாவல்களில் தூத்துக்குடி மற்றும் நெய்தல் நிலத்தைக் கதைக்களமாகக் கொண்டதில் குறிப்பிட்ட சில நாவல்களைப் பகிர்ந்துகொண்டேன். அவற்றில் கண்ணகுமார விஸ்வரூபன் எழுதிய தேரியாயணம், இராஜம் கிருஷ்ணன் எழுதிய கருப்பு மணிகள், இல. வின்செண்ட் எழுதிய அக்காணி, எம்.எம்.தீன் எழுதிய காதல் அசுரன் க்ளைவ், கி.ரா எழுதிய கோபல்ல கிராமம், சு. தமிழ்ச்செல்வி எழுதிய சிலாவம் ..போன்ற நாவல்கள் முக்கியமானவை.
டான் போஸ்கோ எனும் கல்லூரி பெயரை நிர்வாகம் தொன் போஸ்கோ என்று மாற்றியிருப்பதை வீரமாமுனிவர் தன் பெயர் கான்ஸ்ஸான்ட்டி ஜோசப் பெஸ்கி என்பதை தைரியநாதசாமி என்று மாற்றி பிறகு அதை நல்ல தமிழில் வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டதை நினைவுகூர்ந்தேன்.
முன்னதாக தற்கால கவிதைகள் .குறித்து கவிஞர் கண்மணி ராசாவும் சிறுகதைகள் குறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் அறம் அவர்களும் உரையாற்றினார்கள்.
நல்ல உரையாகவும் அமர்வாகவும் இன்றைய நிகழ்வு இருந்தது. நிகழ்வு அமைப்பாளர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள்.

.jpg)
.jpg)

.jpg)





.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக