நினைவஞ்சலி- நந்தலாலா
அனைவருக்கும் வணக்கம்,
கவிஞர் நந்தலாலா அவர்களின் மரணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்கு மட்டுமான இழப்பு அல்ல. முற்போக்கான கலை இலக்கிய அமைப்பு, அது சார்ந்த சமூகத்திற்கான பேரிழப்பு.
நந்தலாலா என்கிற சொல்லை உச்சரிக்கும் பொழுதெல்லாம் எனக்கு பெரியார் நினைவுக்கு வருவார்.
'பெரியார்' என்கிற அடைவுப் பெயர் மாதர் சங்கம் பேரியக்கமாக கூடி சூட்டியப்பெயர். இச்சொல் எந்த இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்டது?
பெரியார் என்கிற சொல்லைத் தந்த பெருமை திருக்குறளையும் நாலடியாரையும் சாரும்.
'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்'
ஓர் இலக்கியச் சொல் ஒருவரின் அடையாளப் பெயராகவும் சிறப்புப் பெயராகவும் அமைந்தது ஈ.வெ.ரா அவர்களுக்குத்தான்.
இவருக்குப் பிறகு யார் பெயரெல்லாம் இலக்கியச் சொல்லாகியிருக்கிறது என்று தேடுகையில்,,,,
நம் முன்னே நந்தலாலா வருகிறார்.
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா'
இச்சொல்லின் உள்ளார்ந்த பொருள் என்னவென்று தேடுகையில் கண்ணனைக் குறிக்கும் சொல்லே நந்தலாலா என்றும் நந்தகோபாலனே நந்தலாலா என்றும் சிலர் உரை எழுதியிருக்கிறார்கள். எம்மால் அதை ஏற்க முடியாது.
நந்தலாலா என்பது மனதின் உள்ளே பொதிந்திருக்கும் இன்ப ஊற்று. தாலாட்டும் சந்தமும் கலந்த ஒரு பேரின்பச் சொல்.
பாரதியின் இந்தப் பாடலுக்குள் கவிஞர் நந்தலாலா எங்கே இருக்கிறார்?
'கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா - உன் கீதம் இசைக்குதடா நந்தலாலா' இந்த வரியிலா? இல்லை.
இதற்கும் அடுத்த வரியில் இருக்கிறார்.
'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உனைத்
தீண்டுமின்பம் தோன்றுதையே நந்தலாலா.'
ஒரு விளக்கு எரிகிறது. தீயின் நாக்குதான் விளக்கு. விளக்குக்கு ஒரு சிறப்பு குணமுண்டு. இருட்டை விரட்டுவது மட்டுமல்ல விளக்கின் வேலை. தன்னை சூழவரும் இருண்மையை விரட்டுவதே அதன் முதன்மை வேலை. இங்கு இருண்மை என்பது பிற்போக்கான கருத்துகள். அறிவுக்குச் சற்றும் பொருந்தாத பொய் மூட்டைகள்.
மேடைகளில் நந்தலாலா அவர்கள் கைதட்டுப் பெற வேண்டும் என்பதற்காகக்கூட பிற்போக்கான கருத்துகளை விதைத்தவரல்ல. அவரது எடை அளவிற்கு பொன்னும் பொருளும் கொடுத்தாலும் அறிவுக்கு உதவாத பொருண்மையைப் பேசாதவர். இந்த இன்பத்தை எந்தச் சொல்லால் அழைப்பது. அதுதான் 'நந்தலாலா'.
இவர் ஆனந்த விகடனில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வரலாறை தொடராக எழுதி வெளியான நூலுக்கு ஊறும் வரலாறு என்று பெயர்ச்சூட்டினார். இந்த நூலை முதலில் வாசிக்கும் யாருக்கும் ஊரும் வரலாறு என்றே புரிந்துகொள்ள தோன்றும். திருச்சி காவிரி பாயும் ஊர் என்பதாலும் நன்னீர் ஊற்று என்பதாலும் 'ஊறும் வரலாறு' என்று பெயர்ச் சூட்டியிருப்பதாக புரிந்துகொண்டேன்.
நந்தலாலா மரணம் எத்தகையது?
சில மரணங்கள் கல்லறைகளைக் கட்டிச் செல்கிறது.
சில மரணங்கள் வாழ்வு என்பது பெரும்பொய் என்று சொல்லிச் செல்கிறது.
சில மரணங்கள் அறக்கட்டளைகளை நிறுவிச் செல்கிறது.
சில மரணங்கள் தத்துவங்களை, வாழ்வு நெறிகளை கொடுத்துச் செல்கிறது.
சில மரணங்கள் மொழிக்குச் சாகா கவிதைகளை தந்துச்செல்கிறது.
பண்டித நேருவின் மரணம் அப்படியான சாகா கவிதையைத் தந்துசென்றது. அவர் மரணத்தின்மீது கவிதை எழுதிய கவியரசு கண்ணதாசன் அவர்கள் மரணத்தைச் சபித்தார்.
"சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ,
சஞ்சலமே நீயுமொருநாள் சஞ்சலத்தை காணாயோ
தீயே உனக்கொரு நாள் தீமூட்டி பாரோமோ
தெய்வமே உன்னையும் நாம் தேம்பி அழ வைப்போமே."
இந்தக் கவிதை கண்ணதாசன் தமிழுக்குத் தந்தது அல்ல, நேரு கண்ணதாசன் வழியே தந்துவிட்டு சென்றது.
அடுத்து பேரறிஞர் அண்ணா பெரும் கவிதையை தமிழுக்குத் தந்துவிட்டு போனார். "எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்- இதையும் தாங்க ஏதண்ணா இதயம்?"
அண்ணா கலைஞர் வழியே இப்படியான கவிதையைக் கொடுத்துச் சென்றார்.
நம் எல்லாருக்கும் இரங்கற்பா பாடியிருக்கிறார் திருவள்ளுவர்.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு."
இக்குறளிலுள்ள பெருமை எனும் சொல் எனக்கு உவப்பாக இருந்ததில்லை. ஒரு மரணம் எப்படி பெருமையுடைதாக இருக்க முடியும்?
நீண்ட நாட்கள் எனக்குள்ளிருந்த இந்தக் கேள்விக்கானப் பதிலை நந்தலாலா தந்துவிட்டுப் போயிருக்கிறார், கவிச்சுடர் கவிதைப்பித்தன் வரிகளின் மூலமாக.
"நேற்று சிரித்த முகம் நந்தலாலா
இன்று நிழற்படம் ஆனதையே நந்தலாலா
தேற்றமுடியவில்லை நந்தலாலா
எங்குத்
தேதி கொடுத்துச் சென்றாய் நந்தலாலா."
இது நந்தலாலாவுக்கு எழுதிய கவிதையா? இல்லை, சமூகத்தை நேசிக்கும் யாவருக்குமான கவிதை.
நேற்று சிரித்த முகம், இன்று நிழற்படம் என்று பெருமையுடைத்து இவ்வுலகு! என்னே வரி! என்னே வாழ்க்கை?
நந்தலாலா எமது ஊரில் பிறந்தவர் என்பதல்ல சிறப்பு. அவர் பிறந்த ஊரில் நான் பிறந்திருக்கிறேன் என்பதே சிறப்பு.
நந்தலாலா மேடைகளை அழகு செய்தவர். உரையின் வழியே தமிழ் செய்தவர்.
தமிழை மேலும் அழகு செய்தவர். அவரது நினைவுகள் போற்றப்பட வேண்டும். நந்தலாலா எனும் சொல் உள்ளமட்டும் நந்தலாலா வாழ்வார்.
வாழிய நந்தலாலா!!

.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக