அம்பேத்கர் ஆக்கங்கள்
அனைவருக்கும் வணக்கம்,
"அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும். அரசியலமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால், அது நல்லதாகவே இருக்கும்."
சமீபத்தில் இந்திய உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் இந்த மேற்கொள் வரியைக் குறிப்பிட்டு, அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு பத்து தொகுதிகள் நூல் அறிமுகப்படுத்தும் விழாவை முன்னெடுத்துள்ளது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேச்சு, எழுத்து, ஆய்வு அனைத்து படைப்புகளையும் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் எனும் தலைப்பில் நூறு தொகுதிகள் கொண்டுவருகிறது. நூறு என்கிற எண்ணிக்கை நம் எல்லாருக்கும் வியப்பையும் மலைப்பையும் அளிக்கிறது.
மார்ச் 1 அன்று எனது ஒரு நூல் விடயமாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். நிறுவன மேலாளரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அப்பொழுதே அச்சிலேறி நூலாக்கப்பட்டு சுடும் காகிதமாக அம்பேத்கரின் ஆக்கங்கள் பத்து தொகுதிகள் மேசைக்கு வந்தன. இந்த நூல் பொது வாசகப் பார்வைக்கு வருவதற்கு முன்பு இத்தொகுதிகளைப் பார்த்து கதகதப்பான பக்கங்களைப் புரட்டும் பெரும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்பொழுதுதான் என்சிபிஎச் நிறுவனம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து நூறு தொகுதிகள் கொண்டுவரும் தகவலை நான் அறிந்துகொண்டேன்.
ஒரு தொகுதி சராசரியாக முந்நூறு பக்கங்கள். அப்படியென்றால் நூறு தொகுதிகளும் முப்பதாயிரம் பக்கங்கள்.
ஒரு பக்கத்திற்கு சராசரியாக முப்பத்து நான்கு வரிகள். அப்படியென்றால் முப்பதாயிரம் பக்கங்களுக்கும் 10,20,000 வரிகள்.
நம் பூமியில் நமக்கு முன்பு வாழ்ந்த ஒரு தலைவர் சமூக மக்களுக்காக சிந்தித்து அரசியல், தத்துவம், சிந்தனை, ஆய்வுப் பூர்வமான வரிகளைக் கொண்ட களஞ்சியமே இத்தொகுதிகள்.
அம்பேத்கரின் எழுத்துகள் மராட்டிய, ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் பெற்றிருக்கின்றன.
தமிழ் வளர்ச்சித்துறை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உடன் இணைந்து வெளியிட்டிருக்கும் தொகுதிகளுக்கு எழுதியிருக்கும் பதிப்புரையிலிருந்து சொல்வதாக இருந்தால் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் டெல்லியில் இயங்கிய அம்பேத்கர் ஃபவுண்டேசன் அறக்கட்டளை உதவியோடு 1993 - 2005 ஆம் ஆண்டுகளின் இடைவெளியில் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் எனும் தலைப்பில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் பதினேழு தலைப்புகளிலிருந்த நூலை முப்பத்தேழு தொகுதிகளாக்கப்பட்டன.
பிறகு மலையாளத்திலிருந்து 38, 39, 40 தொகுதிகள் தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொண்டுவரப்பட்டன. ஆக மொத்தம் நாற்பது தொகுதிகள். இவையாவும் மணிப்பிரவாள மொழிநடையிலிருந்தது. இந்த ஆக்கங்கள் தற்போது நல்ல தமிழிலும் இக்காலத் தமிழ்நடைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
நாற்பது தொகுதிகளையும் முந்நூறு பக்கங்கள் அளவில் பகுத்து தொகுக்கையில் அது நூறு தொகுதிகளாகின்றன. அவற்றில் முதல் பத்து தொகுதிகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அது என்ன மக்கள் பதிப்பு?
ஒரு சினிமாப் பாடல் ஒன்றுண்டு. என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா என்று. இந்த வரிகள் இன்றைய பதிப்புத்துறைக்கு சாலப் பொருந்தும். ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என்பது செலவீனமாக இருக்கிறது.
அம்பேத்கரின் முதல் பத்து தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியும் சராசரி முந்நூறு பக்கங்கள் வீதம் மூவாயிரம் பக்கங்கள் கொண்டவை. அப்படியென்றால் இதன் விலை மூவாயிரம் ரூபாய். பத்து விழுக்காடு கழிவில் கொடுத்தால் 2700 ரூபாய். இந்த மதிப்பான நூலைத்தான் ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். இந்த விலை அச்சுக்கூலியே தவிர அண்ணலின் அறிவு, உழைப்பு, ஆய்வுக்கான தொகையீடு அல்ல.
இந்த நூலிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓர் அழகான அணிந்துரை தந்துள்ளார். அதில் கல்வி அறிவும் சுயமரியாதையும் பகுத்தறிவுமே தாழ்ந்துகிடக்கும் மக்களை உயர்த்தும் என்கிற பெரியாரின் சிந்தனையை மேற்கோள் காட்டியுள்ளார்.
"அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடி வரும்" என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்கும் முன்பு அண்ணல் அவர்கள் 1942 - 1946 ஆம் ஆண்டுகளில் வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராக பதவி வகித்ததையும்
விடுதலை இந்தியாவில் 1947- 1951 ஆம் ஆண்டுகளில் இந்திய சட்ட அமைச்சராக இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணல் அம்பேத்கர் பெயரால் தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரிகள், கல்லூரிகள், அவரது பெயரில் அறிவிப்பட்ட விருதுகள், மணி மண்டபங்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார்.
இந்தத் தொகுதி அம்பேத்கரின் முந்தைய தொகுதிகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பது முக்கியமானது. இத்தொகுதிகளில் பின்னிணைப்பாக கலைச்சொற்கள் அகராதி இணைக்கப்பட்டுள்ளது. பொருளடைவு இணைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை பயணம் கால நிரலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் மொத்த தொகுதிகளையும் ஒரு நூல் நூறு ரூபாய் வீதம் மக்கள் பதிப்பாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு முதலில் நமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
தமிழ்நாடு அரசு நிதி உதவியின்கீழ் வெளிவரும் இத்தொகுப்புகளுக்கான நெறியாள்கைக் குழுவில்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை.ந. அருள்,
சூலூர் பாவேந்தர் பேரவை நெறியாளர் புலவர் செந்தலை ந. கவுதமன்,
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மேனாள் தலைவர் பேரா. வீ. அரசு ,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மேனாள் பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி,
கல்லூரிக் கல்வி இயக்கக மேனாள் துணை இயக்குநர் திரு. அ. மதிவாணன் ஆகியோர் இருந்துள்ளார்கள்.
இத்தொகுப்பின் நூலுக்கான ஓவியம் ட்ராஸ்கி மருது அவர்கள் வரைந்துள்ளார்கள்.
நூல் வடிவமைப்பை பா. ஜீவமணி செய்துள்ளார்கள். அவர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு முதற்பத்து தொகுதிகளை அறிமுகம் செய்யும் விழாவிற்கு வருகைதந்துள்ள அனைவரையும் வரவேற்று இடம் அமர்கிறேன் நன்றி வணக்கம்.
(ஏப்ரல் 14, 2025 திங்கள் அன்று புதுக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் எனும் தலைப்பில் ஆற்றிய உரை)



.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக