சக தோழனாக - கவிஞர் நா. முத்துநிலவன்

 அனைவருக்கும் வணக்கம்,


கவிஞர் நா. முத்துநிலவனின் சக தோழனாக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பதே வாழ்வின் பிரதிபலிப்புதான். அதை நினைவூட்டுகிறது கவிஞர் நா. முத்துநிலவனின்  படைப்புலகம்.

இந்த நிகழ்வின் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தியின் மொழியிலிருந்து சொல்வதாக இருந்தால் எங்களின் முன்னத்து ஏர், முத்தமிழின் தேர், முளைக்கின்ற வித்துகளில் தெளிக்கின்ற நீர் - கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களின் படைப்புலகம்  அவரது எழுபதாவது அகவையைக் கொண்டாடும் பிளாட்டினம் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வயதை அடிப்படையாகக் கொண்ட விழாவை விரும்பாதவர். காரணம் அவர் மார்க்சிய சிந்தனை கொண்டவர். மார்க்சிய பார்வையில் வயது என்பது சமூக பொருளாதார நிலை.

பிறகு ஏன் இங்கு நான் எழுபதைக் குறிக்கும் பிளாட்டினம் விழா என்று குறிப்பிடுகிறேன் என்றால்  இன்றைய விழா  அழைப்பிதழிலுள்ள பெயர்களை வாசித்துவிட்டு சும்மாதானே இருக்கிறேன் என்று பெயர்களை எண்ணிப் பார்த்தேன். அழைப்பிதழில்
 எழுபது பெயர்கள் இருந்தன. எழுபது பேர்கள் சேர்ந்து ஒருவரைக் கொண்டாடும் ஒரு விழாவுக்கு என்ன பெயர் வைக்க முடியும். அதான் பிளாட்டினம் விழா என்கிறேன்.

இந்தப் படைப்புலகில் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களின் படைப்பின் ஆழம், அகலம், உயரப் பரப்பு குறித்து பலரும் பேசி அவரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறார்கள். ஆனால்  நானோ அவரைச் சற்றே கோபமூட்ட விரும்புகிறேன்.

நம் முன்னோர்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடவில்லை.  பிறந்த நேரத்தில் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி அழ வைத்தே கொண்டாடினார்கள். அப்படியாகக் கொண்டாட காரணம் குழந்தை பிறக்கையில் அழுதுகொண்டே பிறக்கிறது. ஆகவே குழந்தையை அழவைத்து பிறந்தநாள் கொண்டாடினார்கள்.  ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா போன்றதுதான் ஒரு கவிஞரின் படைப்புலகம்.

ஒரு கவிஞன் எப்பொழுது பிறக்கிறான்? இந்த சமூகத்தின்மீது அநீதி இழக்கப்படும்பொழுது அந்த அநீதிமீது கோபம்  கொள்கையில் ஒரு கவிஞன் பிறக்கிறான். கோபம் ஒவ்வொரு படைப்பாளியின் அடிப்படை உணர்வாக இருக்கிறது.

ஒரு கட்டுரையில்  கவிஞர் நா. முத்துநிலவன் குறிப்பிடுகிறார், தனக்கு எப்பொழுதெல்லாம் கோபம் வருமென்று? அவரது மொழியிலிருந்தே அதை சொன்னால்,  நா. முத்துபாஸ்கர் எனும் என் பெயரை பேராசிரியர் செந்தலை ந. கவுதமன் அவர்கள் நா. முத்துநிலவன் என்று மாற்றினார். இப்பெயரை யாரேனும் என். முத்துநிலவன் என்று ஆங்கிலத்தில் அழைத்தால் எனக்கு கண் மண் தெரியாமல் கோபம் வரும் என்கிறார்.

இங்கு அவரை நான் என். முத்துநிலவன்  என்று அழைத்து அவரைக் கோபமூட்டுகிறேன். 'என்' என்று நான்  விளிப்பது ஆங்கிலத்தில் அல்ல. எனக்குப் பிடித்தமான ஒன்றை, எனக்குரிய ஒன்றை எனது, என்னுடைய, என் என்றே உரிமைகொண்டாட முடியும். அந்த வகையிலே அவரை நான்  என். முத்துநிலவன் என்று உரிமையோடு அழைக்க விரும்புகிறேன்.

இனிது தமிழில் இனிமையான ஒரு சொல். இச்சொல்லை ஔவை பாடியுள்ளார்.

"இனியது கேட்கின்  தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே"

இந்த இனிதுகளை நா. முத்துநிலவன் வேறொரு விதமாக பார்க்கிறார்.
தமிழ் இனிது, இலக்கணம் இனிது, இலக்கியம் இனிது. இம்மூன்று இனிதுகளும் அவரது நூல்கள். இந்த நூல்களையும் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தந்த முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே, புதிய வார்ப்புகள் ஆகிய நூல்களோடு இந்த படைப்புலகம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு எனது வணக்கங்கள்.

இந்த விழாவில் இப்படியாக ஒரு பட்டிமன்றம் நடத்தியிருக்கலாம். "கவிஞர் முத்துநிலவன் பட்டித்தொட்டியெங்கும் அறியப்பட்டிருக்க காரணம் அவரது பேச்சா, எழுத்தா?" என்று.

இந்தப் பட்டிமன்றத்திற்கு நீதிபதியாக இருந்து  நான் தீர்ப்பு எழுதினால் "எனது பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்றிய அரசு வழங்கும் எந்தவொரு பதவியையும் ஏற்கமாட்டேன்" என்கிற உத்திரவாதத்தோடே எழுதுவேன்.  "கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் எழுத்தால் அறியப்பட்டிருக்க வேண்டியவர். அதற்கு முன்னதாக பேச்சால் அறியப்பட்டுவிட்டார் " என்று.

கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பேச்சு,விவாதம்,  கவிதை, பட்டிமன்றங்களில் தனி முத்திரை பதித்தவர்.  இவை தவிர சமூகச் செயற்பாட்டாளர்.  இப்படி பன்முகம் கொண்டவராக அவர் இருந்தாலும் இந்த சமூகம் அவரை நேர்க்கண் கொண்டு பார்ப்பது பேச்சாளராகத்தான். ஏன் அப்படியாகப் பார்க்கப்படுகிறார்?

பேச்சுக்கு இலக்கணம் இருப்பதைப் போல பேச்சாளர்களுக்கும் இலக்கணம் இருக்கிறது. முத்துநிலவன் தனக்கென்று இலக்கணம் வகுத்துக்கொண்டு மேடைகளை கையாள்கிறவர். 

பா, பாட்டு, பண்ணுக்கு  இலக்கணம் உண்டு. பல்லவி- அனுபல்லவி - சரணம் என்று. இந்தச் சொற்கள் வடமொழி சொற்கள்.

இச்சொற்களைத் தமிழ்ப்படுத்தினால் எடுப்பு - தொடுப்பு- முடிப்பு என்று வரும். இந்த இலக்கண அடுக்கில் மேடைகளில் உரையாற்றுபவர் நா.முத்துநிலவன்.  ஒரு பாடலைப் பாடி உரையைத் தொடங்குவார். உரையை மெதுவாக உயர்த்தி உச்சத்திற்குச் செல்வார். பேசும் பொருளை கனப்படுத்தி  உரையை முடிப்பார்.

இந்த இலக்கண அடுக்கை எந்த நேர நெருக்கடியிலும் சிதைத்துக்கொள்கிறவரில்லை.  ஒரு குறள் வெண்பா எப்படி நாள் மலர் காசு பிறப்பு என்கிற இலக்கணத்தை மீறாதோ அப்படியானதுதான் இவரது உரையும்.

இப்படியான இந்த உரையை இவருக்கு வகுத்து தந்தவர் யாராக இருக்குமென்று நான் யோசித்திருக்கிறேன்.  இந்த கேள்விக்கு ஒரு கட்டுரையில் பதில் எழுதியிருக்கிறார். "எனது மேடை பேச்சின் ஆசான்" என்பது அக்கட்டுரை.

எனது மேடை பேச்சுக்கு ஆசான் என்று  நா.ரா என்று அழைக்கப்பட்ட புலவர் நா
ராமச்சந்திரன் அவர்களைக் குறிப்பிடுகிறார். இவர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மேனாள் மாவட்டத் தலைவர்.

இப்படியாக எழுதுவது ஒன்றும் சாதாராண விசயமல்ல.  இதற்கு பெரிய மனது வேண்டும். இதயம் வேண்டும். இதைவிடவும்  நன்றி உணர்ச்சியும் நன்றி உணர்வு வேண்டும். எழுத்தால், வரலாற்றால் பதிவு செய்வதற்கு ஆழமான, பெரிய இதயத்தை விடவும் பரந்த இதயம் வேண்டும். அப்படியான பரந்த இதயம் இருப்பதனால்தான் நன்றி உணர்வோடு அக்கட்டுரையாக எழுத முடிந்திருக்கிறது. அதுமட்டுமன்று அதே கட்டுரையில் இன்னொரு செய்தியைச் சொல்கிறார. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும் எனது இரு கண்கள் என்கிறார். அவரது படைப்புக்கு முதலில் விருது வழங்கி கௌரவித்தது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்தான் என்கிறார்.

அவரது இந்த இதயம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இதயத்திற்கு மகிழ்ச்சி , ஆனந்தம் எனும் உரம் பாய்ச்சப்பட வேண்டும். அப்படியாகப் பாய்ச்சும் விழாவாகத்தான்  இந்த படைப்புலகம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் நமது மண்ணுக்குப் பெருமை.
வாழ்க கவிஞரே! வாழ்த்துகிறேன் சக தோழனாக.

- அண்டனூர் சுரா 





(18.05.2025 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கவிஞர் நா. முத்துநிலவனின் படைப்புலகம் எனும் விழாவில் வாழ்வரங்கம் அமர்வில் சக தோழனாக எனும் தலைப்பில் நான் பேசியது.)

கருத்துகள்

  1. நன்றி நன்றி தோழரே🤝
    அன்பின் பகிர்வுக்கு நன்றி 🤝
    (கடைசியில் வரும் தேதியை மட்டும் 18/5/25 என மாற்றுக்)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்