சிறுகதை பயிலரங்கு - உரை

மாணவ மணிகள் அனைவருக்கும் வணக்கம். வெள்ளி விழா கண்டிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியும் வைர விழா கண்டிருக்கும் தொன்மைமிக்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து நடத்துகிற இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கில் இரண்டாவது நாளாகிய மூன்றாவது அமர்வில்  மாணவர்களாகிய உங்களை நான் மணிகளே என்று அழைப்பதற்கு இரண்டு  காரணங்கள் உள்ளன. ஒன்று எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு 'சிறுகதை பின்னணி - இடமும் காலமும்'. காலம் என்பது மணிகளால் ஆனது. மற்றொன்று சிறுகதை கால அளவோடு தொடர்பு கொண்டது.



சிறுகதைக்கு எத்தனையோ பேர் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். அதிலொரு இலக்கணம், "சிறுகதை என்பது சில மணி நேரத்திற்குள்ளாக வாசிக்கும்படியாக இருக்க வேண்டும்" என்பது.

சிறுகதை என்ன செய்யும், நாம் ஏன் சிறுகதை வாசிக்க வேண்டும், எழுதவேண்டும்?

நான் எனது மேல் அலுவலருக்கு வணக்கம் வைப்பேன். பதிலுக்கு அவர் ம் என்பார். அந்த ம் என்னைக் காயப்படுத்தியது.  நான் 'ம்' எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அவரிடம் வாசிக்கக் கொடுத்தேன். மறுநாள் எனது வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைத்தார். 

நமக்குள் நிகழும் துக்கம், ஏக்கம், ஏமாற்றம்,  அவமானம்  இவற்றை கதையாக மாற்றி அதிலிருந்து மீளும் வடிகாலாக சிறுகதை எனும் படைப்பிலக்கியம் இருக்கிறது.

உலகின் மிகச்சிறிய கதை நம்மிடம் இருக்கிறது. ஓர் ஊரில் நரி அத்தோடு சரி. உலகின் மிகச்சிறிய சிறுகதை ரஷ்ய மொழியில் இருக்கிறது. பெரிய மீன் சிறிய மீன் கதை.

நமது புதுக்கோட்டை மாவட்டம் மகத்தான சிறுகதையாளர்களைக் கொண்டிருக்கிறது. 

அகிலன்

கந்தர்வன்,

பொன்.கருப்பையா,

அண்டனூர் சுரா,

தூயன் 

நா.முத்துநிலவன் 

மு.முருகேஷ 

ஆர்.நீலா 

ராசி.பன்னீர் செல்வம்

புதுகை சஞ்சீவி

குறிஞ்சி மைந்தன்

செம்பை மணவாளன்

செம்பை முருகானந்தம்

வம்பன் செபா

ஜீவி

கவிபாலா 

துவாரகா சாமிநாதன் 

பாலஜோதி ராமச்சந்திரன் 

சோலச்சி 

சோலையப்பன் 

மு.கீதா

ரெ.தமிழ் முருகன் 

கணியன் செல்வராஜ் 

ப. ராமகிருஷ்ணன் 

மா.பாண்டிச்செல்வம் 

சிவக்குமார் ஆயுதமொழியன் 

விஜயா சிவகாசி நாதன்

மணமேல்குடி கவி. வெண்ணிலவன் 

எம்.எஸ். கோவிந்தராஜன் 

பூவை எஸ். ஆறுமுகம்

வலம்புரி லேனா

சாமி கிரிஷ் 

மிடறு முருகராஜ் 

சுரேஷ் மான்யா

வாண்டு மாமா

துரை குணா 

கோவில் குணா

மூட்டாம்பட்டி ராசு

தீபம் முத்து

மைதிலி கஸ்தூரி ரெங்கன்


இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்தப் பெயர்களை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம் எதிர்காலத்தில் இந்தப் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டும் என்றுதான்.

புதுக்கோட்டை சிறுகதையை நாம் அகிலனிலிருந்து தொடங்கலாம். அகிலன் எழுதிய முதல் கதை காசுமரம். இந்தக் கதை பொதிகை தொலைக்காட்சியில் நாடகமாகவும் ஒளிபரப்பானது. நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் வறுமை, ஏழ்மையை காவேரி எனும் சிறுமியைக் கொண்டு கதையாக்கியிருப்பார். 

நான் சிறுவனாக இருக்கையில் காசு மரத்தில் காய்ப்பதாகவே நினைத்தேன். அப்பொழுது ஐந்து பைசா பத்து பைசா இருபது பைசா நாணயங்கள் இருந்தன. இருபது பைசா நாணயம் எண்கோண வடிவில் அழகாக இருக்கும். பத்து பைசா பூ போலிருக்கும். ஐந்து பைசா சதுரமாக இருக்கும். 

நான் இருபது பைசாக்களை மண்ணில் புதைத்து அதற்கு தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்.  அப்படியாகத்தான் நாகம்மாள்  சுப்பையாவுக்கு பிறந்த காவேரி எனும் சிறுமியும் தண்ணீர் ஊற்றுகிறாள்.  காசு முளைக்கவில்லை. 

அவள் படிக்கும் பள்ளியில் ஒருவன் ஆரஞ்சு பழக்கொட்டையை விழுங்கிவிடுகிறான்.  எல்லாரும் கொட்டை முளைக்கப்போகிறது என்று பயங்காட்டுகிறார்கள். இதைக் கவனிக்கிறாள் காவேரி. காசை விழுங்கினால் முளைக்குமென்று நம்புகிறாள். ஒவ்வொரு நாளும் ஒரு காசை விழுங்குகிறாள்.  மூன்றாம் நாள் ஒரு கொத்து காசுகளை விழுங்குகிறாள். வயிற்று வலி எடுத்து விழி பிதுங்கி துடிக்கிறாள். மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்படுகிறாள். இறக்கும் தருவாயில்  காவேரி தாய்க்கு சொல்கிறாள்.  "அம்மா நான் காசு விழுங்கிவிட்டேன். நான் விழுங்கிய காசு முளைத்து உனக்கு நிறைய காசு தரும்" என்று. அவள் அடக்கம் செய்த இடத்தில் ஒரு மாங்கன்று முளைக்கிறது. 

சிறுகதையில் காலம் என்பதற்கு இக்கதை சரியாகப் பொருந்தும். காவேரி இக்கதையில் காலமாகி காலமாக நிலைத்து நிற்கிறாள். 

அகிலன் எழுதிய மற்றொரு சிறப்பு வாய்ந்த சிறுகதை தாய்ப்பசு. இக்கதையை நீங்கள் தேடி வாசித்துப் பாருங்கள். மனிதனை விடவும் பசுவின் தாய்மனம் எவ்வளவு உயர்ந்ததென்று உணர்வீர்கள். தாய்ப்பசு ஒரு கதையாகவே செல்லும். கதையின் நிறைவு பகுதியில் அகிலன் பசு பாத்திரக்குரலில் பேசியதன் பிறகு அக்கதை சிறுகதையாக மாறும். 

காசுமரம் சிறுகதையில் காவேரி எனும் கதாபாத்திரமும் தாய்ப்பசு சிறுகதையில் மாடசாமி எனும் கதாபாத்திரமும் கதையை நகர வாழ்வு, கிராமவாழ்வு என்பதைக் காட்டும். 

ஒரு கதை எப்படி சிறுகதையாக மாறுகிறது என்பதற்கு காக்கா வடை திருடியக்கதை முக்கியமானது. முதலில் காக்கை நரியிடம் ஏமாறும். பிறகு காக்கையிடம் நரி ஏமாறும். இவை இரண்டும் கதைகள். இக்கதை இன்று அடுத்த தலைமுறை கதையாக மாறிவிட்டது. காக்கைக் குஞ்சு நரிப்பிள்ளை என்று மாறிவிட்டது. காக்கைகுஞ்சுக்கு தாய் காக்கை இக்கதையைச் சொல்லி உசார்படுத்துகிறது. நரிப்பிள்ளை அடுத்த தலைமுறை காக்கையிடம் அதன் அழகை வர்ணித்து, அதை மயக்கி அதை ஆ...வென்று வாய் பிளக்க வைத்து வடையைப் பறிக்கிறது.  ஒரு கதை சிறுகதையாக மாறுமிடம் இப்படித்தான்.

ஒரு கருப்பொருளை பல கதைகளாக எழுதலாம். நான் பறையொலி என்றொரு சிறுகதை எழுதினேன். ஓர் ஊரில் யார் இறந்தாலும் பறை கொட்டும் ஒருவர் அவரே இறந்துபோகையில் அவருக்கென்று பறை கொட்ட ஆளில்லாமல் அடக்கம் செய்யும் கதை இது. இக்கதை எழுதிய அதே காலக்கட்டத்தில் இதே மாதிரியான ஒரு சிறுகதை அதே இதழில் வந்தது. ஒருவர் ஊரில் யார் இறந்தாலும் அந்த வீட்டிக்குச் சென்று இராமாயணம் வாசிக்கிறார். ஒரு நாள் அவர் இறந்துவிட இராமாயணம் வாசிக்க ஆளில்லாமல் அடக்கம் செய்யப்படுகிறார்.  இவ்விரு கதைகளும் ஒரே கதைதான். ஆனால் வேறொரு கதைபொருள் கொண்டு கதையாக்கப்பட்ட கதைகள்.

கதையின் நிலத்தையும் காலத்தையும் கதாபாத்திரங்களைக் கொண்டே விளக்கவேண்டும். சுஜாதா எழுதிய 'காணிக்கை' எனும் சிறுகதை இந்த வகை கதைக்கு உதாரணம். 

கோவிலைச் சுற்றிக்காட்டி விளக்கும் ஒரு ஏழை வழிகாட்டி சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கிறார். நாலைந்து நாட்களாக கோவிலுக்கு யாரும் வரவில்லை. பசி. அரிசி வாங்க பணமில்லை. ஒரு நாள் நாலைந்து ஆண்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அவர்கள் கோவில் பெண் சிற்பங்களை கவர்ச்சிகளாக பார்த்து அந்த சிற்பங்கள் குறித்தும் தேவரடியார்கள் குறித்தும் கேட்கிறார்கள். வழிகாட்டி விளக்குகிறார். அந்த நேரத்தில் அவரது மகள் கிழிந்த ஆடையுடன் அரிசி வாங்க பணம் கேட்டு கோவிலுக்கு வருகிறாள். கவர்ச்சி சிலைகளைப் பார்த்து ரசித்த ஆடவர்கள் அதே கவர்ச்சி பார்வையில் அவளது கிழிந்த ஆடையின் வழியே தெரியும் சதையைப் பார்த்து ரசித்து, "இவள் உங்கள் மகளா?" என்று கேட்டு அவரது கையில் பத்து ரூபாய் கொடுக்கிறார்கள்.  பத்து ரூபாய் பெரிய தொகை. அதைக்கொண்டு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி வாங்கிவிடலாம். அவரது மனம் இதற்கு இடம் கொடுக்கவில்லை. அந்த பணத்தை கசக்கி கோவில் உண்டியலில் போட்டுவிடுகிறார். 

ஒரு கதையாளனுக்கு இந்த அற உணர்வு வேண்டும். கதையாளன் இந்த உணர்வை ஒரு கதாபாத்திரம் வழியே கடத்த வேண்டும்.

கிழிந்த ஆடையின் வழியே சதையைப் பார்ப்பது விரசம். கிழிந்த ஆடையின் வழியே வறுமை, ஏழ்மையைப் பார்ப்பது முற்போக்கு பார்வை, கலை.

இந்தப் பார்வை ஒவ்வொரு படைப்பாளனுக்கு வரவேண்டும். எதையும் வித்தியாசமாக பார்ப்பது , மாறுபட்ட பார்வையில் பார்ப்பது இரண்டும் படைப்பாளனை அடுத்தடுத்த நகர்வுக்கு கொண்டுசெல்லும். 

(15.07.2025 புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறுகதை பயிலரங்கில் சிறுகதை பின்னணி - நிலமும் காலமும் எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருங்கிய வடிவம்.)

ஏற்பாடு - கல்லூரி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.






















கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்