நீர், கலப்பை, அகலம், இலக்கியம் - ஆலங்குடி
அனைவருக்கும் வணக்கம்
ஒப்பாரும் இல்லாத உலகேத்தும் தமிழ் மக்கள் / எப்பாலும் தமக்குரிய வியன்நெறியாம் செயன்முறையில் / தப்பாமல் செய்வனவும் தவிர்வனமும் கடைபிடித்து / முப்பாலின் படியொழுகி முறையோடு வாழும் ஆலங்குடி பகுதி வாழும் மக்கள், இலக்கியச் சுவைஞர், ஆன்றோர் சான்றோர், இவற்றுக்கெல்லாம் மேலாக இந்த நிகழ்வின் பாட்டுடைத் தலைவர்களாக விளங்கும் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த ஆலங்குடிப் பகுதி மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. மன்றம், பெருமன்றம், சங்கம், சங்கமம், கூடல், அவை, பேரவை, முற்றம், கழகம், சபை...இப்படியாக. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கொள்கைகொண்டு செயல்பட்டு வருகின்றன. திருமண விழாவோடு காதணி விழாவை சேர்த்து நடத்துவதைப் போல மொய் விருந்தோடு சம்பந்தி விருந்தை சேர்த்து முடிப்பதைப் போல முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா இப்படியாக விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால் ஆலங்குடி இலக்கியப் பேரவை பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களைப் பாராட்டி வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கோடு இந்த விழாவை நடந்துகொண்டிருக்கிறது.
இந்த விழாவுக்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. நமது ஊர்களில் நாம் பொங்கல் விழா கொண்டாடுவோம். பெரும்பொங்கல், சமத்துவப் பொங்கல், தலைப்பொங்கல், வருசப் பொங்கல், ஊர்ப்பொங்கல்,...இப்படியாக. எந்தெந்த ஊர்களில் விளைந்த கரும்பு, நெல்லரிசி, மஞ்சள் கொத்து, வாழைப்பழம் இவற்றைக் கொண்டு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுவோம். மூடு பொங்கல் என்றோர் பொங்கல் இருக்கிறது. சமீபத்தில் காதல் பெயரால் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினர் இந்தாண்டு வைக்கப்போகிற பொங்கல்தான் மூடு பொங்கல். இத்தனை வகையான பொங்கலில் பொலி பொங்கல் முக்கியமான பொங்கலாகும். நமது வீட்டு வயலில் விளைந்த நெல் அரசியைக்கொண்டு நமது ஊரில் செய்த பானையில் நமது ஊர் மஞ்சள் கொத்து கட்டி வைக்கும் பொங்கல் அது.
நம் ஊரில் விளைந்து நிற்கும் தமிழ் மாணவப் பயிர்களுக்கு நம் ஊர் பெரும் இதயக்காரர்கள் அவர்களால் முடிந்த சிறுதொகையை புரவலராக பங்கீடு செய்து நம் ஊர் எழுத்தாளர் ஒருவரை சிறப்புரையாக பேச வைத்து கொண்டாடும் இந்த விழா ஒரு வகையில் பொலி பொங்கல்தான்.
இப்பொழுது சங்கம் என்றால் சாதி சங்கமாகத்தான் இருக்கிறது. பாரதிதாசன் பாடியிருப்பதைப் போன்று, தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என இருப்பவர்கள் இன்னொரு புறம்.
இப்படியான சமூகப் பரப்பில்தான் ஆலங்குடி தமிழாய்ந்த சான்றோர்கள் கூடி ஆலங்குடி இலக்கியப் பேரவை அமைத்து அதில் தமிழ்ப் பயிர்களை வளர்த்தெடுக்க மாணவர்களைப் பாராட்டுகிறார்கள். உங்களின் இந்த சீரிய பணியை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.
இலக்கியத்திற்கான முதல் பேரவையைக் கூட்டியவன் இலக்கியச் சான்றுபடி கரிகால் பெருவளத்தான். கலிங்கத்துப் பரணியில் இப்படியாக ஒரு காட்சி வருகிறது.
கரிகாலம் சோழன் காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான். அந்த மாளிகை பதினாறு கால்களைக் கொண்டிருக்கிறது. அந்த பதினாறு கால்களிலும் அவன் பதினாறு பொற்கிழிகளைக் கட்டுகிறான். ஒவ்வொரு மாதமும் அவையைக் கூட்டி கவிபாட வைக்கிறான். ஒவ்வொரு மாதமும் சிறந்த புலவன் ஒருவனுக்கு பொற்கிழி வழங்குகிறான். அந்த பதினாறு பொற்கிழிகளையும் ஒருவனே பெருகிறான் அவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இவன் இரண்டு பெரு இலக்கியம் படைக்கிறான். ஒன்று பெரும்பாணாற்றுப்படை, மற்றொன்று பட்டினப் பாலை.
கரிகாலன் சோழனிடம் பொற்கிழிப் பெற்று பிறகு தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் போன்று ஆலங்குடி இலக்கியப் பேரவையில் பரிசு பெற்ற மாணவக் குழந்தைகள் எதிர்காலத்தில் தமிழுக்குப் பெருந்தொண்டு ஆற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆலங்குடி எனும் பெயரில் தமிழகத்தில் மூன்று ஊர்கள் உள்ளன. நாகப்பட்டினம் அருகில், பாபநாசம் அருகில், சிவகங்கை மாவட்டத்தில், அத்துடன் நமது ஆலங்குடி.
ஆலம் குடி என்பதுதான் ஆலங்குடி என்பதாக மருவியிருக்கிறது.
ஆலங்குடி என்றால் ஆலமரத்தின் கீழ் வாழும் குடி என்பதாக பலரும் பொருள் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பெயர்க்காரணத்தை என்னால் ஏற்க முடியவில்லை. நமது ஊருக்கும் அருகில் ஆலங்காடு என்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊர் ஆலமரத்தின் பெயரால் அழைக்கப்படும் ஊர். ஆனால் ஆலங்குடியை ஆலமரத்துடன் தொடர்பு கொண்ட ஊர் அல்ல.
ஆலம் என்பதற்கு நீர் என்று பொருள். நீரினை ஆதாரமாகக் கொண்ட ஊர் ஆலங்குடி. ஆலங்குடி நீரின் சிறப்பை இப்பகுதியில் விளையும் பயிர்களைக் கொண்டும் நிலத்தின் வளத்தினை கொண்டும் நாம் அறிந்துகொள்ளலாம்.
மேலும் ஆலம் என்பதற்கு கலப்பை என்றொரு பொருள் இருக்கிறது. கலப்பையை மூல ஆயுதமாகக் கொண்டு உழுகுடிகள் வேளாண்குடிகள் வாழும் ஊர் ஆலங்குடி.
மேலும் ஆலம் என்பதற்கு அகலம் என்றோர் பொருள் இருக்கிறது. அகலமான நிலப்பரப்பு கொண்ட குடி ஆலங்குடி.
சமஸ்தான காலத்தில் புதுக்கோட்டை நகர் ஆலங்குடி தாலுகாவின் கீழ் ஒரு ஊராக இருந்தது இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆலங்குடி எனும் ஊர் சங்க இலக்கியப் பெயராகவும் இருக்கிறது. அது நமது ஆலங்குடி அல்ல. ஆனால் தற்கால ஆலங்குடியில் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் உலகெங்கும் சென்று ஆலங்குடிக்கு பெருமைத்தேடி தந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்திய ஊர்களில் கோசலம் எனும் ஊர்தான் நாடு எனும் பொருளில் கம்பரால் 61 பாடல்களில் பாடப்பட்டுள்ளது. அதைவிடவும் புதுக்கோட்டையில் அமைந்துள்ள புல்வயல் எனும் ஊர் மீனாட்சி கவிராயர் எனும் புலவரால் நூறு பாடல்களால் பாடப்பட்டுள்ளது. இவர் தன் பெயரைக் குருபாததாசர் எனும் மாற்றிக்கொண்டு "மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு/ மலைமேவு குமரேச னே " என்று அவ்வூரை நூறு பாடல்களால் பாடியுள்ளார். அப்படியென்றால் தமிழக ஊர்களில் அதிக பாடல்களால் பாடப்பட்ட ஊர் புதுக்கோட்டை புல்வயல்தான்!
புல்வயல் இலக்கியத்தில் அதிகம் பாடப்பட்டுள்ளதே தவிர அவ்வூரில் இலக்கியவாதிகள் அதிகமில்லை. ஆனால் ஆலங்குடி இலக்கிய வளத்தில் செறிவான பகுதியாக இருக்கிறது.
தமிழக அரசியல் பாடல்களில் சிறந்த பத்து பாடல்களை தொகுத்தால் அதிலொரு பாடலாக ஆலங்குடி மண்ணில் பிறந்த ஒரு பாடல் இருக்கிறது. ஆலங்குடி ஆ.வெ. சுந்தரபாரதி எழுதி பாடிய இந்தப் பாடல் இன்றும் அரசியல் பாடல்களில் முக்கியமான பாடலாக விளங்குகிறது.
காருபோட்டு ஓடி வந்து கையெடுத்து சலாம் போட்டு
அக்கான்னு தங்கச்சின்னு அவசரமாய் உறவைச் சொல்லி
ஓட்டுகேட்டு வந்தாங்களே சின்னாத்தா
இப்ப ஒருத்தரையும் காணலயே செல்லாத்தா
பக்தி பாடல்களைத் தொகுத்தால் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த புதுகை மணிமாறன் எழுதி பாடிய இப்பாடல் பத்து சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.
பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா அறந்தாங்கி வீரம்மா காளியம்மா
தமிழகத்தின் சிறந்த நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தால் ஆலங்குடி களபம் செல்ல. தங்கையா எழுதிப் பாடிய,
ஏ சின்னமச்சான் என்ன புள்ள
சிவத்த மச்சான் அட சொல்லுப்புள்ள
ஊருக்குள்ள உன்ன ஏசுறாக ஒன்ன ரெண்டா சொல்லி பேசுறாக.
இதுமட்டுமா, கவிஞர்கள் செழித்து வளரும் பூமியாக ஆலங்குடி இருக்கிறது. தமிழ்ச்செம்மல் ரமா. ராமநாதன் அவர்கள் முதன்மை இடத்தில் இருக்கிறார். செம்மல் என்பது மலரின் ஒரு பருவம். பூ பூத்து உதிர்ந்து விடாமல் பிஞ்சு வைக்கும் பருவம் இது. இவரது கவிதைகளில்
வரிகளைக் கூட்டாதீர்
பாவம்
மக்களும் ஹைக்கூவும்.
என்கிற கவிதையும்
ஆறுகளிலே
அழுக்கானது
டிசம்பர் ஆறு எனும் கவிதையும் முக்கியமான கவிதைகள்.
ஆலங்குடி ஆர். நீலா மென் உணர்வு கவிதையாளர்களில் முக்கிய இடம் வகிக்கிறார்.
தாவணியின் தலைப்பை
விளையாட்டாய் முறுக்கும்போதும்,
கோவிலுக்குப் போகும்போது
கூடுதலாய் அலங்கரிக்கும்போதும்,
தனியாக அமர்ந்து
பாடங்களை மனனம் செய்யும்போதும்,
அவனை நினைத்தே
அவ்வளவும் செய்வதாய்
அடித்துவிட்ட தந்தையே!
நீ அடித்தபிறகுதானப்பா
அவனை நினைத்தேன்.
ஆலங்குடி வெள்ளைச்சாமி
குலசாமியின் முத்தம் எனும் நூலில்
எல்லாவற்றையும் தின்று
பசியடங்காத வறுமை
கடைசியாய்
அகோரமாய் மேய்கிறது
தன்மானத்தை
என்கிற கவிதையும்
காதல் என்பது
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருக்கும் நாம்
என்கிற கவிதையும் என்னை பெரிதும் கவர்ந்தவை.
நேசன் மகதி எனும் கவிஞர்
சாப்பாட்டை
சிந்தாமல்
சாப்பிடுங்கள் என்று
எப்படிச் சொல்வேன்
பிள்ளைகளிடம்
வரிசைக்கட்டி
நிற்கின்றவே
எறும்புகள்
எனும் இக்கவிதை குறுந்தொகை பாடலில் ஒன்றை நினைவூட்டுகிறது.
வம்பன் செபா தற்போது கவிதையிலும் சிறுகதையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கஜா புயல் காலத்தில் இவர் எழுதிய,
புயல் வருகிறது
சூது வாதுகளை
கழித்துக்கொள்ளுங்கள்
என்கிற கவிதையும்
நீ இலக்கணமானவள்தான்
அதற்காக என்னை
பகுபத உறுப்பிலக்கணமாகவா பிரித்தெடுப்பது
என்கிற கவிதையும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை.
மேலும் ஆலங்குடி பகுதியைச் சார்ந்த சு. மதியழகன், தமிழ்க்குமரன், சிவானந்தம், இரும்பொறை, சச்சின், க. மணிவண்ணன், ராஜகவி வையாபுரி, தவப்புதல்வன் சசிக்குமார், அந்தோணி, நடேசக் கோனார், துரைமாணிக்கம், வீ. மாரிமுத்து, எனும் பலர் இப்பகுதியில் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமையாக திகழ்ந்து வருகிறார்கள்.
நான் புரவலர்களை வியந்து பார்க்கிறவன். புரவலர்கள் இல்லையென்றால் தமிழ் இந்தளவுக்கு வளர்ந்திருக்காது. கவிச்சக்கரவர்த்தி தமிழின் மிகப்பெரிய காப்பியமான கம்பராமாயணத்தில் ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் வீதம் கம்பனின் கொடை வள்ளல் சடையப்பர் வள்ளலைப் பாடியுள்ளான். இராமன் எனும் இறைவனைப் பாடியிருக்கும் இந்தக் காப்பியத்தில் சடையப்ப வள்ளல் எனும் பெயரை நீக்கிவிட்டால் கம்பராமாயணம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனும் வைணவ நூலுக்கு நிகராக அது போற்றப்படும் என்று அவைப் புலவர்கள் கேட்டுக்கொண்டும் கம்பன் தான் இயற்றிய காப்பியத்திலிருந்து சடையப்ப வள்ளலை நீக்கிவிடவில்லை.
சீறாப்புறாணம் எனும் காப்பியத்தை உமறுப் புலவர் இயற்றினார். இவருக்குக் கொடை வள்ளலாக இருந்தவர் சீதக்காதி எனும் அப்துல் காதர். சீறாப்புராணம் காப்பியத்தில் சீதக்காதி குறித்து உமறுப்புலவர் எழுதியுள்ளார்.
செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்றொரு சொல்லாடல் உண்டு. உமறுப்புலவர் மகளுக்குத் திருமணம். திருமணத்திற்கு சீதக்காதியிடம் உதவிக் கேட்டிருந்தார். திருமணம் நாட்கள் நெருங்கிய தருணத்தில் சீதக்காதி இறந்துவிடுகிறார். உமறுப்புலவர் தனக்கு உதவி செய்யவில்லையென்றாலும் உதவி செய்வதாக சொன்னாரே என்று அவர் அடக்கம் செய்யப்பட்டிருந்த மேட்டில் சென்று மரியாதை செலுத்தினார். அப்பொழுது அந்த மேட்டை உடைத்துக்கொண்டு ஒரு கை வெளியே வந்தது. அந்தக் கையில் முத்துக்கள் பதிக்கப்பட்ட மோதிரம் இருந்தது. “இதிலிருந்து வந்ததுதான் செத்தும் கொடுத்தார் சீதக்காதி.”
தமிழுக்காக தன் சேமிப்பில் ஒரு பகுதியை கொடுப்பதை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் எனும் கவிஞர் மனிதன் விசித்திரமாவன் எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
மனிதன் விசித்திரமானவன்
உரித்துக்கொண்டே போனால்
ஒன்றுமில்லாத
வெங்காயத்துக்குக்கூட
கண்ணீர் சிந்துவான்.
ஆனால்...
கையில்லாதவன்
பிச்சைக் கேட்டால்
காலிருக்கிறதே என்பான்
காலில்லாதவன்
பிச்சைக் கேட்டால்
கையிருக்கிறதே என்பான்.
இரண்டுமே இல்லாதவன்
பிச்சைகேட்டால்
சில்லரை இல்லையே என்பான்.
மனிதன் விசித்திரமானவன்.
இந்தக் கவிதையோடு ஆலங்குடி இலக்கியப் பேரவை புலவர்களை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இவர்கள் தமிழுக்காக பெருங்கை நீட்டுகிறவர்கள். இந்நேரத்தில் எனக்கு மயிலை சீனி. வேங்கடசாமி குறித்து பாரதிதாசன் சொன்ன ஒரு வரி நினைவுக்கு வருகிறது. “தாங் கெட நேர்ந்த போதும் தமிழ்கெட மாற்றா அண்ணல் மயிலை சீனி. வேங்கடசாமி“ என்று. இந்த வரி சீனி. வேங்கடசாமிக்கு மட்டுமா பொருந்துகிறது? ஆலங்குடி இலக்கியப் பேரவை அங்கத்தினருக்கும் பொருந்துகிறது. வாழ்க ஆலங்குடி இலக்கியப் பேரவை. உங்களின் தமிழ்த்தொண்டை வணங்கி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
(03.08.2025 அன்று ஆலங்குடி இலக்கிய பேரவையில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்)
















.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக