செங்கொடி - வெளியீட்டு விழாவில் தலைமை உரை

 அனைவருக்கும் வணக்கம்,

தஞ்சாவூர், புதுக்கோட்டை எனும் இரு நிலப்பரப்புகளாலும் ஒதுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட கந்தர்வகோட்டை மண்ணிலிருந்து ஒரு பெண் படைப்பாளர் நாவலாசிரியராக பரிமாணம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மொழியில் ரணம், ஈரம், இரத்தம், கண்ணீர், துக்கம், துயரம், பலி, ஏமாற்றம், எழுச்சி, போராட்டம்,... இத்தனை உணர்வுகளையும் தாங்கி செங்கொடி எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. மனுசியபுத்திரியும் தேவனும் எனும் புனைபெயரில் எழுதிவரும் முனைவர் ந. சுலோச்சனா அவர்கள் இந்த நாவலை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

தமிழ் எழுத்துலகில் நீண்ட புனைபெயரைக் கொண்டு எழுதிவருகிறவர் இவர்தான். எம்.ஆர். நடராஜன் எனும் பொதுவுடைமை மனிதரின் புத்திரி சுலோச்சனா அவர்கள்  சகாதேவன் எனும் இலக்கிய மனிதரைக் கரம் பிடித்ததன் விளைவாக  மனுசியபுத்திரியும் தேவனும் ஆனார்.

இதற்கு முன்பு அவர் அன்புள்ள தோழி, அது ஒரு கனாக்காலம், பாலை என்று மூன்று கவிதை தொகுப்புகளைத் தொடர்ந்து இந்த செங்கொடி எனும் நாவலை எழுதியிருக்கிறார். இவர் மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணை பேராசிரியராகவும், தமிழ்த்துறை தலைவராகவும், பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நாவல் கனவோ,  கற்பனையோ அதீதமான புனைவோ அல்ல. இந்த கதை இந்த மண்ணில் நிகழ்ந்தேறிய,  நிகழ்ந்து வருகின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க்கதை,  ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கு முறையிலிருந்து மீண்டெழும் கதை, செந்நீர் கதை. செங்கொடி கதை.

இந்த நாவலில் வரும் ஆசைத்தம்பி , தேவா, ரமேசு, பழனி, குமார், முருகன் பாத்திரங்கள் கற்பனை அல்ல. புனைவாக இந்த மண்ணில் வாழும் நிஜங்கள். வெங்கேடச பண்ணையார், ராஜாங்க பண்ணையார் பாத்திரங்கள் வேற்றுகிரக வாசிகள் அல்ல. இன்றும் ஆதிக்க குறியீடுகளாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

வெள்ளைச்சாமி- மூக்காயி,  காத்தன்- கருப்பாயி , பழனி - பாப்பாத்தி தம்பதிகளின் வாழ்வைதான் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நூலாசிரியர் குறித்து குறிப்பிடும் சுந்தம்பட்டி வெ. நாராயணசாமி அவர்கள், தீப்பொறியைவிட எளிதில் பற்றிக்கொள்ளச் செய்யும் வல்லமை அறிந்தவர் என்கிறார் . அவரைப் பற்றிய சரியான அவதானிப்பு இது. அப்படியாக இருந்ததனால்தான் செங்கொடி எனும் இந்நாவலை ரத்தமும் சதையுமாக கொடுக்க முடிந்திருக்கிறது.

வட்டார மொழியில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நான் தற்போது புதுகை வட்டாரச் சொல்லகராதி எனும் தலைப்பில் ஒரு நூல் கொண்டுவந்திருக்கிறேன். நான் அந்த நூலில் சேர்க்காத சில சொற்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. இந்த நாவலுக்கு வாழ்த்துரை தந்திருக்கும் நூலாசிரியரின் கணவன் முனைவர் சகாதேவன் அவர்கள் இந்த நாவல் திரைவடிவம் பெற்றால் பழனி பாத்திரமாக தான் நடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். திரைவடிவத்திற்கு உகந்த நாவல் இது. அதற்குரிய எல்லா அம்சங்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாவலில் வரும் கீதா எனும் கதாபாத்திரம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஆதிக்க சாதியில் பிறந்த கீதா அதே ஊரில் நன்கு படிக்கும் கல்லூரி இளைஞன் தேவா மீது அவள் கொள்ளும் காதலும் நட்பும் அன்பும் அவ்வளவு அழகாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. 

எனக்கு இந்த நாவலில் வரும் கீதா - தேவா பாத்திரங்களின் போக்கை வாசிக்கையில் தற்போது காதலின் பெயரால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சுபாஷினியின் காதலன் கவின் நினைவுக்கு வந்தான். அந்த படுகொலை சம்பவம் தந்த  பதைபதைப்பு இந்த நாவலும் தந்தது.

நாவலில் பத்திகள் வருணனையோடு எழுதுவதும் உரையாடல் மக்கள் மொழியில் எழுதுவதும் ஒன்றில்ல. இரண்டும் இருவேறு கலைகள். இந்த கலை நூலாசிரியருக்கு நன்கு கைவரப்பெற்றுள்ளது.

"அந்தாளு செத்தாலும் அவன் சாதிய வாழவச்சிட்டுதான் போகணுமென நினைக்கிறான்."

"உங்களுக்கு எதிரி நானா, என் தந்தையா, என் சமூகமா, இல்லை இந்தியாவுல தலையெழுத்தாகிப்போன ஒட்டுமொத்த சாதிய அமைப்பா?" என்று கீதா கேட்கிற இடமும்

அதற்கு தேவா, " எல்லாரும்தான் எல்லாமும்தான்" என்று பதில் சொல்கிற இடமும் இந்த நாவலில் இடம்பெற்ற சிறந்த உரையாடலில் ஒன்று.

இந்த நாவலிருந்து நாம் ஏற்க வேண்டிய இடம் ஆசைத்தம்பி தேவாவிடம் சொல்லும் இடம். " நம்மளோட சுயமரியாதைக்கு நமக்கு மேலே உள்ளவங்களிடம் போராடுகிறோம். அதேமாதிரி நாமளும் நமக்குக் கீழே உள்ளவன ஆதரிக்கணும் "

இந்த உணர்வு நம் ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் நுழைந்தால் இங்கு சாணிப்பால் சவுக்கடிக்கு இடமிருக்காது. ஆணவப்படுகொலையால் இரத்தம் ஓடாது. குடிசைகள் எரியாது.  இரட்டைக் குவளை தேநீர் கடைகளில் இடம்பெறாது.

இந்த நாவலில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் யாரை காக்க வேண்டுமோ அவர்களைக் காப்பாற்றி இறந்துபோகிறார்கள். நாவலின் நிறைவில் காதல் வெற்றிபெறுகிறது. அன்பு மேலோங்குகிறது. இதற்கெல்லாம் செங்கொடி காரணமாக இருக்கிறது.

செங்கொடி எனும் இந்நாவலை ஏந்தி எனது தலைமை உரையை நிறைவுசெய்கிறேன். நன்றி வணக்கம்!

(17.08.2025 அன்று கந்தர்வகோட்டை ஏஐடி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய தலைமை உரை)



















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்