அண்ட100 நூல் வெளியீட்டு விழா
அன்புகள் - நினைவுகள் - நன்றிகள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்திய அண்டனூர் சுரா சிறுகதைகள் -100 நூல் வெளியீட்டு விழா எதிர்பார்ப்பை விடவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. குறித்த நேரத்திற்கு தொடங்கிவிட்ட விழாவில் தலைமை உரையாற்றிய கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், "புதுக்கோட்டை இலக்கிய கோட்டை என்றும் புதுக்கோட்டை சிறுகதையாளர்களான அகிலன், புதுகை சஞ்சீவி, சுரேஷ் மான்யா போன்றோர்களின் படைப்புகளைக் குறிப்பிட்டு எனது சிறுகதைகள், பிற படைப்புகள் குறித்து அவருக்கே உரித்தான அழகு நடையில் உரையாற்றினார். நான் எழுதிய புதுக்கோட்டை வரலாறு, சொல்லகராதி போன்ற படைப்புகளை உள்ளடங்கி அவரது உரை இருந்தது.இவரைத் தொடர்ந்து கவிஞர் அஜய் குமார் கோஷ், மு. சிவானந்தம், மு. கருப்பையா வாழ்த்துரை வழங்கினார்கள். அந்த வாழ்த்துரையில் அஜய் குமார் கோஷ் நான் வாசகர் கடிதத்தில் எழுதத் தொடங்கி சிறுகதை , நாவல் வரை வந்திருப்பதை குறிப்பிட்டு பேசினார்.
மு. கருப்பையா இலக்கியம் தேவை குறித்தும் மு. சிவானந்தம் எனக்கும் எழுத்தாளர் சோலச்சிக்குமான நட்பையும் நினைவுகூர்ந்தார்.
அடுத்ததாக நூல் குறித்து கருத்துரையாற்றிய ஜோ. டெய்சிராணி அவர்கள் எனது முதல் கதையான பறையொலி குறித்து பேசினார்.
இந்து தமிழ்த்திசை ஆசிரியர் வெ.சந்திரமோகன் அவர்கள் மொத்த சிறுகதைத் தொகுப்பு கொண்டுவருவது சவால் மற்றும் தைரியமான விசயம் என்பதுடன் காமதேனு இதழில் ஆசிரியராக பணியாற்றுகையில் எனது கதையுடன் அவரது அனுபவ விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து எழுத்தாளர் ராசி பன்னீர்செல்வம் அவர்கள் சதக் ஹசன் மாண்டோ எழுதிய திற சிறுத்தையுடன் நான் எழுதிய திற சிறுகதையையும் ஆண்டன் செகாவ் எழுதிற ஒரு சிறுகதையுடன் எனது மிடற்றுத் தாகம் சிறுகதையையும் ஒப்பிட்டு பேசினார்.
கவிஞர் ஸ்டாலின் சரவணன் துயிலி, ஊழியம் இவ்விரு கதைகள் படைக்கப்பட்ட விதத்தை சுட்டிப்பேசினார். கதையின் முடிவை வைத்துக்கொண்டு கதையை நகர்த்துகிறாரோ என்கிற கேள்வியை எழுப்பினார். என்னை அவர் தொடக்கக் காலத்திலிருந்து கவனித்தவர் என்பதால் அவர் நடத்திய சூப்பர் லயன்ஸ் பத்திரிகையில் தொடக்கத்தில் நான் எழுதிய படைப்புகளை நினைவு கூர்ந்தார்.
எழிலுரை ஆற்றிய கவிப்பித்தன் அவர்கள் கவிதைப்பித்தன், கவிப்பித்தன் இரு பெயர்களுக்கும் இடையிலான ஒற்றுமை குழப்பத்தை குறிப்பிட்டு என் சிறுகதையில் பயன்படுத்தப்பட்ட உவமைகள், சில முரண்கள் இவற்றைக் குறிப்பிட்டு பேசினார். மேலும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்த பல சம்பவங்கள் சிறுகதையாக எழுதப்பட்டுள்ளது. பல கதைகள் எழுத்தாளர் தான் கூறுவதைப் போன்று எழுதப்பட்டுள்ளது என்றார்.
நிறைவுரையாற்றிய கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்கள் கவிப்பித்தன் சொன்ன கவிப்பித்தன், கவிதைப்பித்தன் இரு பெயர்களுக்கும் இடையிலான பெயர்க்குழப்பம் உரைக்குப் பதில் சொல்லி கதைக்குள் வந்தார். ஊர்முழ வேட்டி எனும் கதையைக் குறிப்பிட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் வெள்ளை வேட்டி உடுத்தினான் என்பதற்காக படுகொலை செய்யப்படும் கதையின் போக்கைச் சொல்லி அது தொடர்பான மூன்று உண்மைச் சம்பவங்களைச் சொன்னார். (அவர் சொன்ன சம்பவங்களில் ஒன்றை நான் சிறுகதையாக புனைந்திருக்கிறேன். )
தான் முன்னுரையில் சிறுகதையை பிரியாணி சமையலோடு ஒப்பிட்டு எழுதியதைக் குறிப்பிட்டு வாழ்த்தி உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக எனது ஏற்புரை.
ஏற்புரையில் நான் ஒரு வெளிநாட்டு எழுத்தாளரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர் படைத்த கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு தொடங்கினேன். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் படைத்திருக்கும உண்மையான கதாபாத்திரங்கள் பலர் எனது ஊரிலிருந்து வருகை தந்ததைக் குறிப்பிட்டேன்.
நான் எழுத வந்த தொடக்கத்தில் எனக்குப் பக்கப் பலமாக இருந்த ஸ்டாலின் சரவணன், அறிவொளி முருகேசன், சோலச்சி, ராசி பன்னீர் செல்வம், இரா. காமராசு, செம்பை முருகானந்தம் இவர்களின் பெயரைக் குறிப்பிட்டேன். தொடர்ந்து நான் இயங்குவதால் எனது ஆசிரியர் பணியின் மீது சந்தேகம் கொள்கிறவர்களுக்கு பதில் சொன்னேன். எழுத்து என்பது நேரத்திட்டமிடலில் தொடங்குகிறது. எனக்கு ஆசிரியர் பணி, எழுத்துப் பணி இவை இரண்டைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்றும் நான் விவசாய நிலமற்ற குடும்பத்தில் பிறந்தவன். ஒருவேளை விவசாய நிலம் இருந்திருந்தால் எழுதுவதற்குப் பதிலாக நிலத்தை உழுதுகொண்டிருந்திருப்பேன் என்பதைப் பதிவு செய்தேன். நூலை வெளியிட்ட கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்களுக்கும் இவ்விழாவை திறம்பட திட்டமிட்டு நடத்திய கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூறினேன்.
ஏற்புரை இன்னும் கொஞ்சம் விரிவாகவும் தயாரிப்போடும் நான் பேசியிருக்க வேணும் என்றாலும் சில சொற்களோடு நான் கடந்துபோனதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று மணி இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. மற்றொன்று நூறு கதைகள் என்பது மற்றவர்கள் வியந்து சொல்வதைப் போல எனக்கு பெரிய சாதனையாகவோ இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துவிட்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை.
எனது ஏற்புரையில் நான் பேசியதில் இரண்டு விசயங்கள் எனக்கு முக்கியமாகப்பட்டது. ஒன்று நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் வெ. சந்திரமோகன் குறித்தது. நூல் அச்சுக்குச் செல்வதற்கு முன்பு என்சிபிஎச் நிறுவனத்தார் பிழை திருத்தம் பார்த்ததை என்னிடம் கொடுத்து இவற்றையெல்லாம் திருத்தம் போடலாமா என்று கேட்டார்கள். நூல் முழுவதும் பல திருத்தங்கள். ஐந்து பக்கங்கள் மட்டும் ஒரு திருத்தமும் இல்லாமல் இருந்தன. இந்த பக்கங்களுக்கு ஏன் திருத்தம் போடவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அந்தப் பக்கங்களில் பிழைகளே இல்லை என்றார்கள். அந்த பக்கங்கள் வெ. சந்திரமோகன் எழுதிய அணிந்துரை.
இவரைப் போன்று பிழையில்லாமல் எழுதிப் பழக வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்தேன்.
மற்றொன்று இந்த விழா முடிந்த பிறகு வீட்டில் நன்கு குளித்து இதுவரை படைத்த எல்லா சிறுகதைகளையும் முற்றிலுமாக மறந்துவிட்டு இனி பள்ளி முதல் வகுப்பு குழந்தைகள் 'அ' எழுதி பழகும் அதே புத்துணர்வோடு புதிய கதைகள், புதிய படைப்புகள் படைக்க விரும்புவது.
உரையில் எனது குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் முக்கிய நண்பர்களையும் எனது எழுத்துக்கு உற்றத்துணையாக இருந்த பல இலக்கிய அமைப்புகளையும் குறிப்பிட தவறிவிட்டோமே என்பது மன வருத்தமாக இருந்தாலும் அவர்களை இன்னும் கொஞ்சம் காத்திரமாக எழுதி இலக்கியப் பெரும் பங்களிப்பு செய்து நினைவும் நன்றியும் கூறலாம் என்று என்னை நான் தேற்றிக்கொண்டேன்.
நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரை வழங்கிய ஒட்டடை பாலச்சந்தர் நெறியாள்கை செய்த பீர்முகமது, மகா.சுந்தர்
; நன்றியுரை வழங்கிய என்சிபிஎச் வெங்கடேஷ் அவரவர் பணிகளை மிகக் கச்சிதமாக செய்தார்கள்.
இந்த விழாவுக்கு மாவட்டத்தைக் கடந்து மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், காரைக்குடி ஊர்களிலிருந்து பலரும் வந்து அரங்கத்தை நிரப்பியிருந்தார்கள். அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றும் நான் நன்றிகடன் பட்டவன்!!





















.jpg)
.jpg)























.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக