ஆர்.சூடாமணி நினைவு சிறுகதை கருத்தரங்கு

 அனைவருக்கும் வணக்கம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியும் வாசகர் பேரவையும் இணைந்து அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்கும் உயர்நோக்கில் சிறுகதை கருத்தரங்கு நடத்திக்கொண்டிருக்கிறது.

திருப்பாவையில் ஆண்டாள் "ஏரார்ந்த கண்ணி" என்று அழைக்கப்படுகிறாள். இவ்வாறு அவள் அழைக்கப்பட காரணம் அவளது கண்ணின் அழகு நாளுக்கு நாள் கூடுகிறது. எப்படியென்றால்  மார்கழி மாதத்தில் கண்ணன் எனும் நந்தகோபாலனை ஆண்டாள் தினம் தினம் பார்க்கிறாள். அவனது அழகு நாளுக்கு நாள் கூடுகிறது. அவனது அழகு கூட கூட அவனைப் பார்க்கும் ஆண்டாள் கண்ணின் அழகும் கூடுகிறது.

ஒரு பெண்ணின் கண்ணழகு நாளுக்கு நாள் கூடுமா?

கதைகளில் கூடும்.

ஏரார்ந்த என்கிற சொல் கண்ணுக்கு மட்டும்தான் பொருந்துமா? நாவுக்கும் பொருந்தும்.

ஏரார்ந்த நாவு என்றொரு நாவு இருக்கிறது. அது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நாவு. அவர் தினம் தினம் பேசுகின்ற மொழியால் கருத்தால் களஞ்சியத்தால் அவரது நாவு ஏரார்ந்த நாவாக வளர்கிறது.

ஏரார்ந்த கண், நாவு போல ஏரார்ந்த கைகள் இருக்கின்றன. அது வாசகர் பேரவை செயலாளர் ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் ச. விஸ்வநாதனின் கைகள். அவரது கைகள் யாரையும் அணைக்கின்றன. உதவி செய்ய நீள்கின்றன. புத்தகங்களை இளந்தலைமுறைக்கு வாரி வழங்குகின்றன.  ஆகவே அவரது கைகள் ஏரார்ந்த கைகளாக திகழ்கின்றன.

கதைகளும் சிறுகதைகளும் ஏரார்ந்த தன்மை கொண்டவை. வளர்ந்துகொண்டே இருப்பவை.

சிறுகதை என்பது ஒரு சம்பவத்தை எல்லாரும் ஒரு கோணத்தில் பார்க்க ஒருவர்  மாற்றுக்கோணத்தில் பார்ப்பது. நாம் காக்கைகளுக்கு இரை போடுகிறோம். எல்லா காக்கைகளும் நேராக இரை பொறுக்க  ஒரு காக்கை மட்டும் தலையை சற்று சாய்த்து இரையைப் பார்க்கும். இப்படியாக மாற்றுக்கோணத்தில் பார்ப்பதே சிறுகதை.

ஒரு சாவித் துவாரத்தின் வழியே புற உலகைப் பார்ப்பது.

நான் குழந்தையிடம் கேட்டேன். "நீ இவ்ளோ அழகாக இருக்கிறாயே,  எப்படி?" என்றேன். அந்த குழந்தை சொன்னான். "ஏ அம்மா அப்பா அழகு.
அதனாலே நான் அழகு."

இன்னொரு நாள் கேட்டேன். "நீ இவ்ளோ நல்லா படிக்கிறாயே,எப்படி?" இந்தக் கேள்விக்கு நான் எதிர்பார்த்த பதில் "என் அம்மா அப்பா நல்லா படிச்சவங்க, ஆகவே நான் நல்லா படிக்கிறேன்." ஆனால் அந்த குழந்தை சொன்னான். "எனக்கு என் டீச்சர் நல்லா சொல்லித் தாராங்க.  ஆகவே நான் நல்லா படிக்கிறேன்."

இப்படி நமது எதிர்பார்ப்பை தோற்க்கடித்து வேறொரு முடிவைத் தருவதுதான் சிறுகதை.

ஒரு கூட்டத்தில் ஒருவர்  பேசினார். எல்லாரும் கைத்தட்டினார்கள். ஒருவர் மட்டும் கைத்தட்டவில்லை. காரணம் என்னவாக இருக்கும், பலரிடம் கேட்டேன்.

"அவருக்கு பேச்சு பிடிக்கவில்லை."
"மொழி தெரியவில்லை."
"தூங்கியிருப்பார்."
இப்படியாக பலரும் பதில் தந்தார்கள்.

ஒருவர் சொன்னார். "அவருக்குக் கைகள் இல்லை."

இப்படியான எதிர்பாரா திருப்பத்தைத் தருவது சிறுகதை.

சிறுகதை என்பது மென்மெல்லிய உணர்வை பிரதிபலிப்பது. நமக்குள் கடத்துவது. அதற்கு உதாரணம் லியோ டால்ஸ்டாய் எழுதிய 'அன்னா கரீனினா' நாவலின் முதல் அத்தியாயம்.

ஒரு செல்வந்தன் ஒரு பிரெஞ்சு பணிப்பெண்ணை தன் குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பணி அமர்ந்துகிறான். ஒரு நாள் அவனது மனைவி அவனது அறையைச் சுத்தம் செய்கையில் அவனது அறையிலிருந்து பல காதல் கடிதங்களை பார்க்கிறாள். அவை அந்தப் பணிப்பெண் கணவருக்கு எழுதிய கடிதங்கள். இதைக் கண்டு அவள் அதிர்ந்து அவனிடம் இனி வாழ முடியாது என்று மாளிகையை விட்டு வெளியேறுகிறாள்.

எதிரே அன்னா கரீனா வருகிறாள். அவள் அந்த செல்வந்தரின் அக்கா. இருவருக்கும் இடையில் உரையாடல் நிகழ்கிறது.

"உன் தம்பி என்னை திருமணம் செய்துகொண்டு வேறொரு பெண்ணுடன் வாழ்கிறான்."

"அப்படியா! அவனிடம் கேட்டாயா?"

"கேட்டேன்" என்றவாறு அழுகிறாள்.

"கேட்டதற்கு அடித்தானா?"
"அடித்திருந்தால்தான் பரவாயில்லையே."
"திட்டினானா?"
"திட்டியிருந்தால் பரவாயில்லை"
"உன் நடத்தையில் சந்தேகப் படுகிறானா?"
"அப்படி பட்டிருந்தால் பரவாயில்லை"
"ஏறென்ன செய்தான்?"
"கேட்கிறேன் சிரிக்கிறான்."

நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் அடி உதைகளை தாங்க முடியும். சிரிப்பை தாங்க முடியாது என்பதை உணர்த்துவதும்தான் சிறுகதை.

இந்த கருத்தரங்கம் எழுத்தாளர் ஆர். சூடாமணி நினைவாக நடத்தப்படுகிறது.

ஆர். சூடாமணி பெண் உணர்வை பிரதிபலிக்கும் படியாக பல கதைகள் எழுதியிருக்கிறார்.  சூடாமணி என்கிற பெயருக்குள்ளேயே பெரிய கதை இருக்கிறது. விதவிதமான மணிகள், அணிகலன்கள் இருந்தும் அதை அணிய முடியாமல் இருப்பது பெரும் சோகம்.  சூடாமணி என்கிற பெயர் அதையே சொல்கிறது.

இவர் எழுதிய கதைகளில் 'நீலநிற ரிப்பனும் வானவில்லும்' என்கிற கதை முக்கியமானது.

ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரே மகன். அவளது முடியை தாய் சாமிக்கு காணிக்கையாக கொடுக்கிறாள்.  அவளது வறுமையில் அதை பருவத்திலேயே இறக்க முடியவில்லை. முடி கூந்தலாக வளர்ந்து விடுகிறது. அவனை எல்லாரும் அர்த்தநாரீசுவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள். அந்தப் பெயர் அவனுக்கு கோபத்தை மூட்டுகிறது.

அவனுக்கு ரெட்டை சடை பின்னி இரண்டு சடையிலும் ஒரே மாதிரியான ரிப்பன் கட்டிவிட முடியவில்லை. அவன் வேண்டா வெறுப்போடு அந்த முடியை விரல்களால் கோதி விடுகிறான்.

வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் அவனது தாய்க்கு ஒரு நாள் வேலை கிடைக்க வேலைக்குச் சென்று தீனிகள் வாங்கி வருகிறாள். அன்றைய தினம் வானம் இருண்டு கிழக்கில் வானவில் தெரிகிறது.

தாய் மகனை அழைத்து குளிப்பாட்டி தலையைச் சீவி இரட்டை சடை பின்னி ஒன்றில் பழைய நீல நிற ரிப்பனையும் இன்னொன்றில் புதிய நீல நிற ரிப்பனையும் அணிவித்து மகனை அள்ளிக் கொஞ்சுகிறாள். மகன் ஆசையோடு வானவில்லைப் பார்க்கிறான். வானில் வானவில் காணோம்.  வானவில் அவனது சடையில் நீல ரிப்பனாக இறங்கிகொள்கிறது.

இந்தக் கதை வாசிப்பதற்கும் கேட்பதற்கும் சாதாரணமாகத் தெரியும். இதற்குள் ரிப்பன் வாங்க முடியாத ஏழ்மையும் ரிப்பனால் தாயும் மகனும் தொலைத்த சந்தோசம் மீட்டெடுக்கையில் அதைப் பார்க்க வானவில் ரிப்பனாக மாறி சடையில் ஏறியதையும் மென் உணர்வால் மட்டுமே உணரமுடியும்.

இப்படி நமது குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன சந்தோசம் சம்மவங்களைக் கதைகளாக எழுதலாம்.

நான் துயிலி என்றொரு சிறுகதை எழுதினேன். நைட்டி என்பதுதான் தமிழில் துயிலி.  எனது வீட்டில் நடந்த சம்பவக்கதை இது.

ஒரு நாள் என் துணைவி நைட்டி  வாங்கிவந்தார்.  பாக்கெட் வைத்த நைட்டி.  அவரது செல்போனை பல நேரங்களில் வைத்த இடம தெரியாமல் தேடுவதால் இப்படியான நைட்டி அவருக்குத் தேவைப்பட்டது. 

நைட்டியை உடுத்திக்கொண்டு விதவிதமான கோணத்தில் நின்று பாக்கெட்டில் கைகளை விட்டவராய் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ரசித்தார். அந்த சந்தோசத்தோடு அவர் சமையலைற்க்கு வந்தார். இப்பொழுது அவர் சின்ன கரண்டி வைத்த இடத்தை மறந்து தேடிக்கொண்டிருந்தார். என் மகன் ஓடி  இரண்டு சிறிய கரண்டிகளை எடுத்து அவரது இரண்டு பாக்கெட்டிலும் வைத்தான்.  மொபைல் இடம் பெற வேண்டிய பாக்கெட்டில் கரண்டி இடம்பெற்றுவிட்டது.

இந்த சம்பவம் என்னை ஒரு கதையை நோக்கித் தள்ளியது. இந்த சம்பவத்தோடு எனது புனைவுகளைச் சேர்த்து ஒரு கதையாக எழுதினேன். அதுவே துயிலி எனும் சிறுகதை.

கு. அழகிரிசாமியின் காற்று எனும் சிறுகதை அவர் பார்த்த ஒரு விபத்தின் புனைவுதான்.  சென்னையில் ஒரு சாலையில் ஒரு சிறுமி லாரியில் அடிபட்டு இறந்துபோகிறாள். இந்தக் கட்சியைக் கண்ட அழகிரிசாமி இந்த குழந்தை எப்படி இறந்திருக்கும் என்று ஒரு கதையாக எழுதுகிறார். அந்தக் குழந்தை நகர குடியிருப்புகளில்  காற்று கிடைக்காமல் கடற்கரை வந்து அடிப்பட்டு காற்றாகிப் போகிறாள்.

நமது ஊர் எழுத்தாளர்களின் கதைகளை நீங்கள் வாசிக்க வேண்டும்.

எழுத்தாளர் ந.சோலையப்பன் எழுதி ஐம்பதாயிரம் பரிசு பெற்ற 'கானல் நீர் காட்சிகள்' எனும் சிறுகதை இன்றைய இணையவெளி காலத்தில் பெண்கள் எப்படி  ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் சிறுகதை. இந்த கதையின் மூலம் நீங்கள் சமூக வலைதளத்தை கவனமாக கையாளலாம்.

மிடறு முருகதாஸ் எழுதிய 'மொய் விருந்து' எனும் சிறுகதை நமது பகுதியில் மொய் விருந்து எனும் பெயரால் நடைபெறும் சோகமான சம்பவங்களை சொல்லும் கதை இது.

உங்களால் இப்படியான கதைகளை எழுத முடியும். நீங்கள் எழுதுவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறக்கிறது. காரணம் உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் கதைகள் இருக்கின்றன.  எதிர்காலத்தில் நீங்கள் பல சூடாமணிகளாக திகழப்போகிறீர்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.

வாய்ப்புக்கு நன்றிகள்

(உரையின் சுருக்கம்)









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்