நன்றியும் வணக்கமும்
ஒரு மனிதன் ஒரு நாளில் வணக்கம், நன்றி இவ்விரு சொற்களையும் எத்தனை முறை பயன்படுத்துகிறார், எந்தளவு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து அவரது மாண்பு கணக்கிடப்படுகிறது. நான் பள்ளி, கல்லூரி பருவத்தில் வணக்கம் அதிகளவில் உச்சரித்திருக்கிறேன். நன்றியைத் தற்போதுதான் உணர்த்து பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன். இதிலிருந்து வணக்கம் என்பது குழந்தை மனம் கொண்டதாகவும் நன்றி என்பது மானுடத் தன்மை கொண்டதாகவும் புரிந்துகொண்டிருக்கிறேன். எனக்கு நேர் எதிர் நிலையில் இருக்கிறார் திருவள்ளுவர். இவர் வணக்கத்தை அதிகம் பயன்படுத்தவில்லை. நன்றியை அதிக அளவு பயன்படுத்தியிருக்கிறார். நன்றி நவில்தல் என்கிற சொல் இவரது பயன்பாட்டின் உச்சம். வணக்கம், நன்றி இரண்டும் பண்புப்பெயர்கள். சில இடங்களில் வினைச்சொல்லாவும் வினையாற்றுகிறது. வணங்குதல் என்பதே வணக்கம் ஆனது. நல்லது என்பதே நன்றும் நன்றியும் ஆனது. நன்றிக்கும் இன்றைய அரசியல் களத்தில் பேசும் பொருளாக இருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருக்குறளில் 108 ஆவது குறள் நன்றியைப் பாடுகிறது. நன்றி மறப்பது நன்றன்று.
நிற்க,
கடைசியாக நான் முத்தன் பள்ளம் நாவல் வெளியீட்டு விழா எடுத்தது. தலைமை நான் பெரிதும் நேசிக்கும் பேரா. இரா. காமராசு அவர்கள். நூலை வெளியிட்டு சிறப்பித்தவர் விடுதலைப் போராட்டத் தியாகி தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்கள். இந்த விழாவிற்கு பலரையும் அழைத்திருத்திருந்தேன். கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை நேரில் தொடர்பு கொண்டு கேட்கையில் அந்தத் தேதியில் அவர் வெளிநாடு செல்வதாக சொன்னதால் அவரது பெயரை அழைப்பிதழில் வைக்கவில்லை.
விழா அக்டோபர் 2, 2018 காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு நான் எதிர்பார்த்திராத நிலையில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வருகை தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். நான் மதிக்கும் பல எழுத்து ஆளுமைகள் தன் பெயர் அழைப்பிதழில் இல்லை என்றும் தான் எதிர்பார்க்கும் இடத்தில் இல்லை என்றும் மற்ற பெயர்களை விடவும் பெரிய எழுத்தில் இல்லையென்றும் விழாவைத் தவிர்த்திருந்த நிலையில் அழைப்பிதழில் பெயரே இல்லாமல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் விழாவுக்கு வருகைதந்து நூல் குறித்து பேசிச் சென்றிருந்தார். அவரது இந்த பண்புநலனுக்குக் கைமாறாக எந்த வகையிலேனும் நன்றி நவிலக் காத்திருந்தேன். அண்டனூர் சுரா சிறுகதைகள் -100 வெளியீட்டு விழா அதற்கு தக்க வாய்ப்பாக அமைந்தது.
ஆம், அவரது தலைமையிலேயே இந்த நூலினை வெளியிட விரும்புனேன். இந்த விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். ஒரு கட்டத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா மீது எனக்கு விருப்பமில்லாமல் போய்விட்டது. காரணம் அந்த விழா வாங்கும் வேலைகளும், செலவீனங்களும். இதிலிருந்து மெல்ல விடுபட தொடங்கினேன். இந்நிலையில்தான் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் அவராகவே முன்வந்து அழைப்பிதழ், மேடை, பதாகை, கேமரா, வீடியோ என்று திட்டமிடலில் இறங்கினார். விழாவில் அரசியல் கலக்காமல் முழுக்க இலக்கிய விழாவாக நடத்திட முனைப்புக் காட்டினார். அதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களான நாஞ்சில் நாடன், எஸ்.ரா அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்தார். பிறகு அடுத்து பாரதி கிருஷ்ணக்குமார். யாரிடமும் தேதி கிடைக்காத நிலையில் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் அழைப்புப்பட்டியலில் இருந்தார். அவரே நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற நேரில் சென்று அழைப்புவிடுத்து கவிச்சுடர் அவர்களும் வருகை தந்து விழா நிறைவு பகுதி வரைக்கும் இருந்து நூல் வெளியிட்டு வாழ்த்தி சென்றார். எழுத்தாளர் கவிப்பித்தன் என்னால் அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர். பேரன்பின் அழைப்பு இவர்.
விழா நாளின் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் மூர்த்தி அவர்கள் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் கவிஞராக இருந்தவர் கறுப்புக் கண்ணாடி அணிந்த கலைஞராகிப் போனார். விழாவில் அத்தனை ஏற்பாடுகளையும் திறம்பட செய்தவர் தலைமையுரையாற்றி ஒளி வெள்ளத்திலிருந்து மெல்ல நழுவி கண்களைக் காப்பாற்றிக்கொள்ள இடம் பெயரலானார். இதனால் இந்த விழாவில் அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதை, கவுரவிப்பு அந்த மேடையில் இடம்பெறாமல் போனது.
நேற்று எனது உற்ற தோழமை கவிஞர் ஒட்டடை பாலச்சந்திரன், என்சிபிஎச் வெங்கடேஷ் உடன் கவிஞர் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து எமது நன்றியைத் தெரிவித்தோம்.
இலக்கியத்தின் தற்கால போக்குகள் குறித்து பேச பெரும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அவரே மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தார். ஒன்றாக அமர்ந்து பகுத்துண்டு இன்னும் கொஞ்சம் இலக்கியம் இளைப்பாறி விடைபெறும் முன்பு நூல் வெளியீட்டு விழாவுக்கான செலவில் ஒரு பகுதியை நான் ஏற்றுக்கொள்கிறேன், சொல்லுங்கள் என்றேன். ஒரு நொடி என் முகத்தைப் பார்த்தவர், " இருக்கட்டும் எல்லாம் நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்றார். ஒரு நிமிடம் அப்படியே நின்றவன் அவரது அன்புக்கு நன்றி நல்கி விடைபெற்றேன்.
விழா செலவீனத்தில் சிறு பகுதியை என்சிபிஎச் நிறுவனமும் பெரும் பகுதியை புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கமும் ஏற்றுக்கொண்டது எனது மீதான அன்பா, எனது எழுத்துக்கு கிடைத்த பரிசா தெரியவில்லை.
இப்பொழுதெல்லாம் வணக்கம், நன்றி இவ்விரு சொற்களும் என்னிடமிருந்து தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொள்கிறேன். என்சிபிஎச் நிறுவனத்திற்கு வணக்கம் செலுத்திய நான் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு நன்றி நல்கி விடைபெற்றேன்.
வெளியே ஒரு ஆட்டோ நின்றிருந்தது. அதில் இந்தக் குறள் எழுதப்பட்டிருந்தது.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்."


.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக