சொற்களில் வாழ்கிறோம்
@அண்டனூர் சுரா
அனைவருக்கும் வணக்கம்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேடையில் முதல் புத்தகம் வெளியிட்ட ஒருவன் உங்கள் முன்னால் ஒரு எழுத்தாளனாக நின்றுகொண்டிருக்கிறேன்.ஓர் எழுத்தாளனின் ஆகப்பெரிய இலக்கு, லட்சியம், ஆசை நிற்றல் என்பதுதான். காலத்தாலும் காலம் கடந்தும் வாசக பரப்பில் எழுத்தாக நிற்க வேண்டும்.
கற்பக விநாயகம் அறக்கட்டளை அறங்காவலர் திருமதி கவிதா சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்ச்செம்மல் ரமா. ராமநாதன், பாடலாசிரியர் தனிக்கொடி, கவிமதி சோலச்சி உள்ளிட்ட அறிவுசார் அவையை வணங்குகிறேன்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற எட்டாவது புத்தகத் திருவிழா இது.
ஒரு மாதக் காலமாகவே எட்டு என்பதும் எட்டாவது என்பதும் தொடர்ந்து உச்சரிப்பட்டு வருவதை கேட்கயில் மனதிற்கு இதமாக இருக்கிறது.
காரணம் ஒரு காலம் வரைக்கும் எட்டு என்கிற சொல் அவ்வளவாக யாராலும் உச்சரிக்காத சொல்லாகவும் ஒதுக்கப்பட்ட சொல்லாகவும் இருந்தது.
வயலில் விளையும் விளைபொருட்களை படி, மரக்காலில் அளப்பவர்கள் ஒன்று இரண்டு மூன்று அளப்பவர்கள் எட்டு வருகிற இடத்தில் எட்டுக்குப் பதிலாக லெட்சுமி என்று சொல்லி பிறகு ஒன்பது பத்து என்று அளந்து செல்வார்கள்.
நன்கு படித்து அறிவால் தெளிந்தவர்கள் கூட அஷ்டமி நாளன்று திருமணம், காதுகுத்து போன்ற விசேசங்கள் வைக்க முன்வருவதில்லை. காரணம் அஷ்டமி என்பது திதிக்களில் எட்டாவது நாளாக வருகிறது.
எனது உறவினர் வீட்டில் ஒரு அழகான பெண் இருந்தாள். பொறியியல் படித்து தங்கப் பதக்கம் பெற்றவர். அவருக்கு நீண்ட காலமாகவே வரன் அமைய வில்லை. வயது முப்பது முப்பதைந்து கடந்துவிட்டது. அவரது அழகுக்கும் அறிவுக்கும் ஒரு குறையுமில்லை. மணமகன் கேட்கும் தட்சணை எல்லாம் செய்ய அந்தக் குடும்பத்தினர் காத்திருந்தார்கள். இவ்வளவு இருந்தும் அவருக்கு எதிர்பார்த்த துணைவன் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவர் தந்தக் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்திருந்தார் என்பதுதான். 'எட்டாவது பேறு பெண் எட்டிப்பார்க்கும் வீடு குட்டிச்சுவர்' என்று பழமொழியைச் சொன்னார்கள்.
அப்படியென்றால் பெண் குலத்தின்மீது எட்டின் பெயரால் பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் எட்டாவது புத்தகக் கண்காட்சியைக் கொண்டாடுதல் என்பது புத்தகங்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுவதாக மட்டும் பார்க்கவில்லை. எட்டைக் கொண்டாடும் விழாவாகவும் நான் பார்க்கிறேன்.
எனக்குப் பின்னால் விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆரியப்பட்டாவின் அதிசயக் கண்டுபிடிப்புகள் எனும் தலைப்புகள் எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார். அறிவியலை சொற்களால் அளக்க இருக்கிறார்.
இந்த உலகில் மகத்தான கண்டுபிடிப்பு என்பது மொழிதான். மொழி என்பது வேறு எதுவோ அல்ல, சொற்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள். இந்த உலகை ஆளப்போவது எது? ஐன்ஸ்டீன் சொன்னார். அறிவியல்தான்.
எதையும் எதைக்குக் கொண்டு அளந்துவிடலாம். ஒரு.அரசியல்வாதியை வாக்குகளைக் கொண்டு அளந்துவிடலாம். ஒரு நடிகனை அவனைப் பார்க்க வரும் ரசிகர்களைக் கொண்டு அளந்துவிடலாம். ஒரு படிப்பாளியை அவன் பெறும் மதிப்பெண்களால் அளந்துவிடலாம். ஆனால் அறிவியலை அளப்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. காரணம் அறிவியல் மீட்டராக, கிலோவாக, லிட்டராக, டெசிபல், ரிக்டர், ஜூல், ஆம்பியர், ஹெர்ட்ஸ், ஒளி ஆண்டு என்று பல சொற்களால் அளவிடப்படுகிறது.
நம்மை ஆண்டுகொண்டிருப்பது சொற்கள்தான். ப்பிபீ எனும் பிளட் பிரசரும் மில்லி கிராம் / டெசி லிட்டர் எனும் சுகரும் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றன.
நான் சொற்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதனுக்கு சோறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சொற்கள். சொல் வேறு சோறு வேறு அல்ல.
சோறு என்கிற சொல் சொல் என்பதிலிருந்தே பிறந்தது என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்.
சொல் என்கிற சொல் சொன்றி என்றாகி பிறகு அது சோறு என்றானது என்கிறார். ஆகவேதான், சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் சொல்லையும் சோற்றுக்குக் காரணமான நெல்லையும் ஒரு பாடலில் வைத்து பாடுகிறார்.
"சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேல்அல்லார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"
தமிழ் அதிகம் பெண்களால் வாழ்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் தமிழ் வட்டாரச் சொற்களாக புழங்கி வருகிறது. பெண்கள் பேசும் மொழிகள் வேறுவிதமாக இருக்கின்றன. அவர்கள் பேசும் மொழிகளுக்கென்று தனி அகராதிகள் தேவைப்படுகின்றன.
சொற்கள் சிலருக்கு மூலதனமாக இருக்கிறது. சிலருக்கு பிரச்சாரமாக இருக்கிறது. சிலருக்கு புகழாக இருக்கிறது. சிலருக்கு கவசமாக இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி இருக்கிறார். நன்கு படித்தவர். நாங்கள் படிக்கும் காலத்தில் பேச்சு, கவிதைப் போட்டியில் அவ்வளவு அழகாக பேசுவார் வாசிப்பார். திருக்குறளும் திருவாசகமும் நாலடியாரும் அவரது நாவில் தமிழாடும்.
அவர் சிறுவயதிலேயே மணம் முடிக்கப்பட்டார். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் திருமணம் முடிக்கப்பட்ட ஊரில் சந்தித்தேன். அவர் ஒற்றை ஆளாக நின்று சண்டைப் பிடித்துக்கொண்டிருந்தார்.
கெட்ட கெட்ட வார்த்தைகளாக பேசுவதை கிராமத்தில் அதலை மொழி என்று சொல்வார்கள்.
மானாங்கண்ணியாக பேசுகிறான் என்பார்கள். கறிவாடை என்பார்கள்.
அப்படியான சொற்களில்தான் அவள் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த அக்கா நன்கு படித்தவராச்சே. இவரா இப்படியாக பேசுகிறார். ஒரு நாள் அவரிடமே சென்று கேட்டேன். " அக்கா எவ்ளோ அழகா தமிழ்ப் பேசுவீங்க. இப்ப நீங்க பேசுறத காது கொடுத்து கேட்க முடியலையே, ஏன்க்கா இப்படி மாறுனீங்கனு " கேட்டேன்.
அவர் சொன்னார். " சின்ன வயதிலேயே மணம் முடிக்கப்பட்டேன். ரெண்டு பொம்பள பிள்ளைகள வச்சிருக்கேன். என் கணவர் எங்களை பருவ வயதிலேயே விட்டுவிட்டு இறந்துவிட்டார். என் மீதும் என் பிள்ளைகள் மீதும் ஆண்களின் காமக் கண்கள், இச்சை கண்கள் மொய்க்கின்றன. அவர்களிடமிருந்து என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ள என் கையில் ஆயுதங்கள் இல்லை. என்னிடம் இருப்பது நாக்கு மட்டும்தான். இப்படியாக பேசினால் மட்டும்தான் ஆண்களின் பார்வையிலிருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்றார்.
அதற்காக இவ்வளவு அதலை பேச்சா பேசுறது என்றேன். அதலை என்றாலும் அதுவும் தமிழ்தானே என்றார்.
எனக்கு அவர் சொன்ன விசயம் எனக்கு வலியாக இருந்தது. அவரை மையமாக வைத்து மொழியாள் என்று ஒரு சிறுகதை எழுதினேன்.
ஒருவரை வாழ்த்துகையில் பாராட்டுகையில் தேர்ந்த மொழியை நாம் கையாள்கிறோம். எப்படியென்றால் மூக்கனிகளில் ஒன்றான பலா பழத்தை பகுந்து சக்கைகளை நீக்கி அதிலிருந்த சுளையை எடுப்பதைப் போல. அதுவே திட்டுவதாக இருந்தால் மாங்காயைக் கடிப்பதைப் போல அடியிலிருந்து சொற்களை எடுக்கிறோம்.
பாராட்டும் வாழ்த்தும் சொற்களை விடவும் திட்டுவதற்கு அதைவிடவும் நல்ல சொற்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் புதுக்கோட்டைப் பகுதியைப் பாடிய இலக்கியங்கள் வரிசை எனும் தலைப்பில் பண்டைய சங்க நூல்களை தேடி வாசிக்கையில் ஆவுடையார்கோவில் எனும் பெருந்துறை, திருப்புனல்வாசல் எனும் ஊர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அப்பர் எனும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரால் அந்த ஊர் பாடப்பட்டுள்ளது.
ஞானசம்பந்தர் ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று அந்த ஊரைக் குறித்தும் சிவனைக் குறித்தும் பதினொரு பாடல்களைப் பாடுகிறார். இவற்றில் ஒவ்வொரு பத்தாவது பாடல்களிலும் அவர் சைவத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் பௌத்தத்தையும் சமணத்தையும் திட்டி சபித்து பாடுகிறார். அப்படிப் பாடுகையில் சிவனை வாழ்த்துவதற்கு அவர் தேர்ந்தெடுத்துப் பாடும் சொற்களை விடவும் நல்ல சொற்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து சமணத்தையும் பௌத்தத்தையும் திட்டுகிறார்.
இதைத்தான் திருவள்ளுவர் நாநலம் என்கிறார்.
நான் புதுக்கோட்டை வட்டாரங்களில் புழங்கும் சொற்களைச் சேகரித்து புதுக்கோட்டை வட்டாரச் சொல்லகராதி எனும் தொகுப்பு நூல் கொண்டுவந்துள்ளேன். அந்த நூல் புத்தகக் கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ளேன். அதில் செவந்தரம் எனும் சொல்வை வலியோடு சேர்த்துள்ளேன். ஆறு வயதில் கேட்ட சொல் அது. அப்பொழுது நெல் கதிர் அறுத்து, அடித்து, புணையல் விடுவார்கள். பிணையல் சுற்ற என்னை அழைத்துச் செல்வார்கள். ஒரு நாள் முழுக்க மாட்டோடு மாடாக சுற்ற வேண்டும். மாடு சாணம் போடுகையில் அதை வைக்கோலால் வாங்கி வெளியே போடவேண்டும். அவ்வாறு சுற்றி முடித்த பிறகு கூட்டப் பெருக்கிய நெல்லில் அரைபடி இந்த அளவிற்கு எனது துண்டில் முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இரவு உடம்பெல்லாம் வலி. என்மீது யானை மிதிப்பதைப் போலிருந்தது. எனது பாட்டி எனது கால்களை பிடித்துவிட்டபடி "அடப் பாவிப் பயலே செவந்திரத்துக்காடா உழைச்சே" என்றார்.
அந்தச் சொல்லை முப்பது வருடத்திற்கு பிறகு சமீபத்தில் கேட்கையில் எனக்கு குழந்தைப் பருவ ஒரு துண்டு வாழ்க்கை நினைவுக்கு வந்தது.
ஒரு காலம் வரைக்கும் எங்கள் ஊரில் அதிக ரகசியம் தெரிந்தவன் நான்தான். காரணம் ஊர்கள் வெளிநாட்டில் வெளிஊரில் வேலை செய்கிறவர்களுக்கு கடிதம் எழுதுவது நான்தான். என்னிடம்தான் கொண்டுவந்து கொடுப்பார்கள்.
ஒரு முறை ஒரு அக்கா அவரது தம்பிக்கு கடிதம் எழுதச் சொன்னார். " தம்பி அடுப்புல பூனை தூங்குதுடா " என்று எழுதச் சொன்னார். நானும் அப்படியாக எழுதுனேன். எனக்குச் சிரிப்பு வந்தது.
அந்த அக்கா வீட்டில் பூனை இல்லை. இருப்பதாக பொய் சொல்கிறார் என்று சிரித்துக்கொண்டேன். ஆனால் அந்த வரி சொல்லும் செய்தி புரிந்துகொள்ள நீண்ட காலம் ஆனது.
அடுப்பு எரிக்க வீட்டுல அரிசி இல்லேடா. அவ்ளோ வறுமைடா. அடுப்பு பற்ற வைக்காம அடுப்புல பூனை தூங்குதுடா என்பதைத்தான் அவர் அப்படியாகச் சொல்லியிருக்கிறார்.
பூனை குறித்த பழமொழியில எனக்கு ரொம்ப பிடித்தது பூனை இருக்கிற வீட்டுலதான் எலி பேரன் பேத்தி எடுக்கும். இந்த பழமொழி சொல்லும் செய்தி பெரியது. ஆதிக்கம், அதிகாரம் இவற்றை மீறி வாழும் வாழ்க்கையைச் சொல்லும் பழமொழி இது.
இந்த வரிசையில் எட்டாததை எட்டும் எட்டு என்றொரு பழமொழி இருக்கிறது.
திரும்பவும் நான் எட்டுக்கு வருகிறேன்.
எட்டு என்பது எட்டுத்தொகை நூலைக் குறிக்கிறது.
எட்டு என்பது எட்டு வகையான நிகண்டுகளைக் குறிக்கிறது
எட்டு என்பது திசைகளைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்கிறார் பாரதியார்.
இதே பாரதியார் எட்டு என்பது தூரத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துகிறார். கும்மி பாடலில்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி."
இங்கு எட்டு என்பது எட்டாத, எட்டுகின்ற தூரமாக பாடியிருக்கிறார்.
எட்டாததையும் எட்டும் எட்டு இதன் பொருள் என்னவென்று தேடினேன். ஒரு ஜோதிடர் இவ்வாறு சொன்னார். ஜோதிடத்தில் எட்டாம் இடத்திற்கு சனி வந்தால் அவருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும். கைக்கு எட்டாததெல்லாம் எட்டும் என்றார். இது சற்றே பொருந்துபோனாலும் எனது அறிவு அதற்கு இடம் கொடுக்கவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் இந்தப் புத்தகக் கண்காட்சி கொடுத்தது.
தற்போது எட்டு புறக்கப்பட்ட சொல்லாக எண்ணாக இருப்பதற்கு காரணம் ஒரு காலத்தில் எட்டுதான் மக்களை நெறிப்படுத்தியது.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். தற்போது விகாரம் என்கிற சொல் அவலட்சனமான சொல்லாக இருக்கிறது. ஒரு காலத்தில் விகாரம் என்பது வழிபாட்டு சொல். புத்தக் கோவில்களின் கோபுரத்திற்குப் பெயர் விகாரம்.
பௌத்ததிற்கு எதிரான மதங்கள் விகாரம் என்கிற சொல்லை அழகுக்கு எதிரான சொல்லாக மாற்றிவிட்டது. அதே போன்றுதான் எட்டும்.
எட்டு என்பது பௌத்தம் கற்பித்த எண்வகை மார்க்கம். நீண்ட காலம் எட்டு என்றால் எண் வகை மார்க்கத்தையே குறிக்கும்.
நல்ல எண்ணம்
நல்ல செயல்
நல்ல தியானம்
நல்ல பார்வை
நல்ல பேச்சு
நல்ல நினைப்பு
நல்ல முயற்சி
நல்ல வாழ்க்கை
இந்த எட்டும் எண் மார்க்கங்கள்.
இந்த எட்டையும் இன்று புத்தகங்கள் கொடுக்கின்றன. புத்து அகம் என்பதே புத்தகம். புத்து என்றால் அறிவு என்று பொருள் . புத்து என்பதுதான் புத்தி என்றானது. அதாவது அறிவுநிலை. தியான நிலை. முதிர்ந்த நிலை. முதிர்ச்சி நிலை.
எட்டாததை எட்டச் செய்யும் எட்டாக புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் ஏடுகளால் ஆனவை அல்ல, சொற்களால் ஆனவை. நாம் சொற்களால் வாழ்கிறோம். இன்னும் தேர்ந்தெடுத்த நல்ல சொற்களால் வாழ்வோம். வாய்ப்புக்கு நன்றி!!
(06.10.2025 புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் சொற்களால் வாழ்கிறோம் எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கம் )

.jpg)
.jpg)

"நல்ல சொற்களால் ஆள்வோம் "
பதிலளிநீக்குஎன்ற உரை நிறைவு
நிறைவான உறை நிறைவு
நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் தோழர்