செம்பை மணவாளன் நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு - தலைமை உரை

 அனைவருக்கும் வணக்கம்,


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக்குழு முன்னெடுத்திற்கும் தோழர் சந்துரு படத்திறப்பு மற்றும் செம்பை மணவாளன் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவுக்கு  அழைத்து வந்திருக்கின்ற உங்கள் இதயங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.  இரு கரங்களில் ஒன்று செயற்பாட்டாளர் சந்துரு என்கிற சந்திரசேகரனுக்கானது. மற்றொரு கரம் எழுத்தாளர் செம்பை மணவாளனுக்கானது.

ஒரு நிகழ்வு, ஒரு விழா இரண்டும் ஒரு சேர நடைபெறுகிறது. பெருமன்றத்தின் மேனாள் மாவட்டச் செயலாளர் சந்துரு  அவர்களின் படத்திறப்பு நிகழ்வாகவும் செம்பை மணவாளன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவாகவும் நடைபெறுகிறது.

நிகழ்வும் விழாவும் ஒரேநேரத்தில் நடத்துவது சரியா என்கிற கேள்வி இங்கு எழலாம். சந்துரு , செம்பை மணவாளன் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும்  பொதுவுடைமை இயக்கத்திற்கு வேறு வேறானவர்கள் அல்லர். இருவரும் வேர் ஆனவர்கள்.

அறிவியலின் இயக்கத்தில் அகவிசை,  புற விசை என்று இரு விசைகள் இருக்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனும் பேரமைப்பிற்கு புற விசையாக இருந்து  இழுத்தவர் செம்பை மணவாளன் அவர்கள். அகவிசையாக இருந்து உந்தி இயக்கியவர் சந்துரு என்கிற சந்திரசேகரன் அவர்கள்.


சொல்லை விடவும் செயல் முக்கியம் என்றவர் சந்துரு. சொல்லும் முக்கியம் செயலும் முக்கியம் என்றவர் செம்பை. இருவரும் பெருமன்றத்தின் விசைகள். சக்திகள். ஆகவே இருவரின் நினைவுகளை ஒன்றாக நினைவுகூரும் பொருட்டும் காலத்தில் கலந்திருக்கும் அவர்களைத் தற்காலப்படுத்தும் விதமாகவும் இந்த படத்திறப்பு நிகழ்வு மற்றும் சிறுகதைப் பரிசளிப்பு விழாவை நடத்துகிறோம். 

இந்த நிகழ்வுக்கு வருகை தந்து தோழர் சந்துரு என்கிற ஆர். சந்திரசேகரன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்திருக்கும் தோழர் க. சந்தானம் நிர்வாக இயக்குநர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் அவர்களுக்கு மாவட்டக்குழுவின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வருகை இரண்டு விதங்களில் புகழ் சேர்க்கிறது. ஒன்று சந்துரு அவர்களின் புகைப்படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் அவரது நீண்ட நெடிய உழைப்புக்கு நீங்கள் மரியாதை செய்திருக்கிறீர்கள். அவரது செயலகப் பணியைக் கவுரவித்திருக்கிறீர்கள். மற்றொன்று நீங்கள் நியூ செஞ்சுரி என்கிற அமைப்பிலிருந்து வருகை தந்திருக்கிறீர்கள். செஞ்சுரி என்றால் நூறு. இது பொதுவுடைமை அமைப்பின் நூற்றாண்டு. இந்த நூற்றாண்டில் நியூ செஞ்சுரி நிறுவனத்திலிருந்து வருகை தந்து சந்துரு அவர்களுக்குப் புகழ் செய்ததை தலை வணங்குகிறோம்.

இந்த நிகழ்வில் இடது சாரி கொள்கையில் பெரும் பிடித்தம் கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துநிலவன் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் கலந்து கொண்டதும் சந்துரு அவர்கள் குறித்து உரையாற்ற இருப்பதும் மேலும் அவருக்குப் புகழஞ்சலியை கனமாக்கியுள்ளது.

இந்த நிகழ்வில் புகழஞ்சலி செலுத்தும் தோழர் செங்கோடன்,  டி.எஸ்.நடராஜன், அர.மணிமோகன், மு.மாதவன், அஜய்குமார் கோஷ், க.சுதந்திரராஜன், ஜீவாதாசன் இவர்களுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும். இந்த நிகழ்வில் ஏற்புரையாற்றும் அழகம்மாள் சந்துரு அவர்களை பெருமன்றம் பாதுகாக்கும். அவரது இன்பம் துன்பங்களில் பங்கேற்கும் என்பதை இதயச்சொற்களால் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தலைவர் தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்களின் வருகையால் பெரிதும் மகிழ்கிறோம். ஒரு விழாவை எப்படி நடத்த வேண்டும்,  திட்டமிடவேண்டும், எப்படி சிறப்பு விருந்தினர்களை அழைக்க வேண்டும், மேடையில் எப்படி தோன்ற வேண்டும், மைக்கை எப்படியாக கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறவர் தங்கம் மூர்த்தி அவர்கள். இந்த நிகழ்வுக்கு அவரிடம் தேதி கேட்டோம். தேதி இல்லையென்றார்.  ஆனால் நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார். எங்கள் மீதான அன்பாலும் அமைப்பின் மீதான மதிப்பாலும் பெருமன்றம் எனும் அமைப்பையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அவரது வருகை அமைந்திருக்கிறது.  அவருக்கு எமது வணக்கங்கள்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து மறைந்த எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவு அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு நடைபெற விருக்கிறது.

செம்பை மணவாளன் அவர்களை என்னை விடவும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.  அவரோடு கடைசி காலத்தில் நெருங்கி பழகியவர்கள்,  அவரது இன்பம் துன்பங்களில் பங்கேற்றவர்கள் நீங்கள். அவருக்கு எனக்குமான நெருக்கம் என்பது இலக்கியம் மட்டும்தான்.  எனது முதல் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன்.  எனது குரலி எனும் சிறுகதைத் தொகுப்பை அவருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.  அவரை நான் ஒரு காலமும் அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளராக பார்த்ததில்லை. நல்ல சிறுகதையாளர்.  அவர் நிறைய படித்தவரில்லை. நிறைய எழுதியவரும் இல்லை. ஆனால் அவர் படித்த படிப்புக்கு மேலாக எழுதியவர். இதைப் பறைசாற்ற அவரது தவம் என்கிற சிறுகதைத் தொகுப்பு ஒன்று போதும். இவரது தவம் எனும் சிறுகதை உப்புக்கார செட்டியாரை மையமாகக் கொண்டு பசியை உயிரை உணர்வை உறவை இத்தனையையும் ஒரு கதையில் உணரவைத்திருப்பார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடமே சொல்லியிருக்கிறேன். புதுக்கோட்டை இலக்கியக்கோட்டைதான். ஆனால் சிறுகதை பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுக்க புதுக்கோட்டையில் சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று.  அவரும் இதையே விருப்பமாக கொண்டிருந்தார். இந்த விருப்பம் அவரது நினைவைப் போற்றும் விதமாக நிறைவேறியிருக்கிறது.
சிறுகதைப் போட்டி மாவட்ட அளவில் நடத்தி கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் எழுத வைக்க வேண்டும் என்றே இந்தப் போட்டி முன்னெடுக்கப்பட்டது.  செம்பை மணவாளன் அவர்களின் புதல்வர் செம்பை முருகானந்தம் இந்தப் போட்டியை தமிழகம் முழுமைக்குமாக நடத்தலாம் என்று விருப்பம் தெரிவித்தார். இப்படியாக நடத்தி புதுக்கோட்டையிலிருந்து ஒரு எழுத்தாளரேனும் தேர்வாகாமல் போனால் புதுக்கோட்டையில் சிறுகதையாளர் ஒருவரேனும் இல்லையே என்று இந்த தமிழ் உலகிற்கு பறைசாற்றி அறிவிப்பதாகிவிடுமே என்று பயந்தேன். ஆனால் சிறுகதைகளைத் தேர்வு செய்து நடுவர்கள் பட்டியல் கொடுகையில் அதற்குள் புதுக்கோட்டை  எழுத்தாளர் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இதுவே இந்தப் போட்டியின் வெற்றியாக கருதுகிறேன்.

இந்தச் சிறுகதைப் போட்டிக்குப் பரிசு தொகை முழுமையும் ஏற்றுக்கொண்ட செம்பை முருகானந்தம்  அவரது குடும்பத்தினருக்கு  நன்றிகள். இந்நேரத்தில் நடுவர்களாக பணியாற்றி சிறந்த கதைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பெருமை சேர்க்க வந்திருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலப் பொதுச்செயலாளர்  மருத்துவர் த. அறம் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்.

சமீப காலத்தில் சிறுகதைகள் அதிகம் வாசித்தவர் இவர். கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன்,  தமிழ்ஒளி,  கி.ரா, இவர்களின் கதைகளோடு என்னுடைய நூறு சிறுகதைகளையும் வாசித்திருக்கிறார். ஆகவே இவருக்கு சிறுகதைகள் நன்கு தெரியும் என்பதை விடவும் சிறுகதைகளுக்கு இவரை நன்கு தெரியும். அத்துடன் இவர் சிறுகதையாளர் தனுஷ்கோடி ராமசாமியின் புதல்வர் என்பதால் சிறுகதையாளர்களின் வதையும் இன்னல்களும் பிரசுர வேதனையும் நன்கு அறிந்தவர். அவர் வெற்றி பெற்ற கதையாளர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்வது பெருமைக்குரியதாக கருதுகிறோம்.

நாங்களெல்லாம் காளமேகப் புலவரைப் பார்த்ததில்லை.  எங்கள் காலத்தின் காளமேகம் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள். கவிப்பேரரசு வைரமுத்து ஒரு மேடையில் சொன்னதைப் போன்று கோப்பு பார்க்கும் அமைச்சர்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர் யாப்பு பார்க்கும் சுடர். எங்கள் புதுக்கோட்டையின் சிறப்புகளில் ஒன்று இவர். எங்கள் புதுக்கோட்டையின் புகழில் ஒன்று இவர். இவரது திருக்கரங்களாலும் இந்தப் பரிசை பெறும் நீங்கள் மேலும் புகழடைகிறீர்கள்.

இந்தச் சிறுகதைப் போட்டியில் இரு நூறு சிறுகதைகள் வந்தன. இரு நூறு சிறுகதைகளையும் ஐந்து நடுவர்கள் வாசித்து ஐம்பது இருபது பத்து ஆறு என்கிற எண்ணிக்கையில் கதைகளை வடித்தார்கள். பெருமன்றத்தின் தலைவராக நான் இருந்த போதிலும் என்னிடமே கூட கதைகள் அனுப்பியவர்களின் பெயர்களை பகிர்ந்து கொள்ளாதவர் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் அவர்கள்.

நடுவர் தேர்ந்தெடுத்து கொடுத்த கதைகளை நான் வாசித்துப் பார்க்கையில் இந்த கதைகள் யாவும் உயிர் என்கிற பொருண்மையின் கீழ் மணிகளாக கோர்க்கப்பட்டுள்ளன.

முதல் பரிசு பெற்றிருக்கும் லோகும் பஞ்சாயத்து டிவியும் எனும் சிறுகதையை ரிஸ்வான் எழுதியிருக்கிறார். இக்கதையின் உயிராக மின்சாரம் இருக்கிறது. மின்சாரம் ஒரு பொழுதை கொன்று மற்றொரு பொழுதாக்கிறது. மின்சாரம் இல்லாத வரைக்கும் தெருக்கூத்துகள்,  வில்லுப்பாட்டுகள் பெருங்கலைகளில் ஒன்றாக இருக்கிறது. மின்சாரம் வந்ததும் இந்த கலைகள் என்னாகின என்று வலியோடு சொன்ன கதை லோகும் பஞ்சாயத்து டிவியும்.

அன்பாதவன் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். இவரது பேப்பர்குருவி எனும் சிறுகதை உயிரில் என்ன பெரிய உயிர் சிறிய உயிர்? ஓர் உயிரை இன்னொரு உயிர் எடுப்பது பறிப்பது உயிரியல் கோட்பாட்டில் சரியாக இருக்கலாம். இயற்கைக்கோட்பாடு அதை அனுமதிப்பதில்லை என்பதை குறியீடாக எழுதியுள்ளார்.

கூடாரத்தில் கசியும் குளம்படி எனும் சிறுகதை உயிரின் மீது வேறொரு உயிர் இரங்குவது. அன்பால் கவிழ்வது. சில உயிர்களுக்கு வேண்டா வெறுப்பாக பணிவிடை செய்கிறோம். இதிலிருந்து எப்பொழுது  விடுதலை பெறப்போகிறோம் என்று நினைப்போம். அப்படியான விடுதலை கிடைக்கின்ற பொழுது விடுதலை பெற்ற உயிர் எப்படியாக பிரிகிறது என்பதை கண்களில் கண்ணீர் வர வைக்கும்படியாக எழுதியுள்ளார் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் செவிலியர் என்பதால் இப்படியான ஒரு கதையை எழுத முடிந்திருக்கிறது என்பதாக பார்க்கவில்லை. இதயமுள்ள செவிலியர் என்பதால்  இக்கதை அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

சிறப்பு பரிசுகள் பெரும் சாமி கிரிஷின் கருத்தறிப்பு எனும் சிறுகதை கரு உயிர்கொள்வது பற்றியது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு இவர் ஒரு புது வழியைச் சொல்கிறார்.

ச.மோகனின் வேட்டல் நிலம் எனும் சிறுகதை  அடமானம் பிடிக்கப்பட்ட நிலத்தை மீட்க குடும்ப உயிர்கள் போராடும் சிறுகதை. இக்கதையின் முடிவில் மோகன் சொல்கிறார்.  இவர் இந்த நிலத்தை மீட்க இரு வழிகளே இருக்கின்றன. ஒன்று இந்த கதையை வாசிக்கும் யாராவது ஒருவர் கடன் கொடுத்து உதவ வேண்டும். இல்லையெல் இன்றைய நாள் பொழுது விடியாமல் இப்படியே இருந்துவிட வேண்டும். இந்த சிறிய பரிசை மோகன் அந்த நிலத்தை மீட்கப் போராடும் மருதமுத்து எனும் கதாபாத்திரத்திடம் கொண்டுபோய் சேர்ப்பார் என்று நம்புகிறேன்.

நோட்டு எனும் சிறுகதை எழுதிய பாஸ்கர் கோபால் அவர்களுக்கு இக்கதை முதல் கதை. உயிரின் கண்ணியத்தை இக்கதை பேசுகிறது. மருத்துவமனை தரும் ஒரு நோயாளியின் குறிப்பு நோட்டு தேவையில்லாத பார்வைக்குச் செல்வதால் வரும் வலி வதையை இக்கதை பேசுகிறது.

இப்படியாக ஆறு கதைகள். நல்ல மொழியும் அழகும் கட்டு வடிவமைப்பும் கொண்ட கதைகள்.

இந்த சிறுகதை போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறுகதையாளர்களுக்கும் எமது நன்றிகள். பரிசு பெறும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

எங்கள் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் அவர்கள் தொடர்ந்து பரப்பு இழுவிசையோடு இயங்குகிறார். சோலச்சி அதற்கான எல்லா உத்துழைப்பும் கடமைகளையும் செய்கிறார். இந்தச் சிறுகதைப் போட்டியை ஒருங்கிணைத்த தோழர்கள் சிவானந்தம், மூட்டாம்பட்டி ராஜூ, துவாரகா சாமிநாதன், கோவில் குணா, பாண்டிச்செல்வம் இவர்களின் உழைப்பிற்கு நன்றி பாராட்டி எனது  தலைமை உரையை நிறைவுசெய்கிறேன் நன்றி வணக்கம்.


 

























































கருத்துகள்

பிரபலமான இடுகைகள்