உம்பரான் சிறுகதை நூல் வெளியீட்டு உரை

 அனைவருக்கும் வணக்கம் ,




'எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ' தமிழ்த்தாயை முன்னதாகவே வணங்கிவிடுகிறேன்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் சார்பில் நடைபெறும் புதுக்கோட்டை மண்ணிலிருந்து  ஒரு புத்தம் புதிய இலக்கிய பயிர் சகோதரி பாண்டிச்செல்வம் எழுதி தையல்  பதிப்பகத்தின் வழியே வெளிவந்திருக்கும் உம்பரான் எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்களையும்  அழைத்து வந்திருக்கும்  இதயங்களையும் வணங்குகிறேன்.

புதுக்கோட்டை இலக்கிய கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோட்டைக்குள் கவிதைப் பயிர்கள் அதிகம். சிறுகதை செடிகள்  குறைவு. அதிலும் பெண் சிறுகதையாளர்கள் போதுமான அளவிற்கு  இல்லை என்கிற அளவிலேயே புதுக்கோட்டை  இருந்து வந்துள்ளது. இந்த குறையை போக்கும் விதமாக வந்திருக்கிறார் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் அவர்கள்.

பாண்டிச்செல்வம் அவர்கள் தைரியமிக்க பெண். பிரச்சனைகளின் சிக்கல்களை எளிதில் அவிழ்ப்பவர். மனிதர்களை மென்மையாக கையாள்கிறவர். இப்படியான அம்சங்கள் இருக்கிற ஒருவரால்தான் சிறுகதை எழுத முடியும். 

அவரது முதல் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் தலைமை ஏற்பதை பெருமையாக கருதுகிறேன். எனது உரையை எப்படி தொடங்கலாமென்று யோசித்தேன். மொழி வாழ்த்திலிருந்து தொடங்கலாமா,  இறை வாழ்த்துகளிலிருந்து தொடங்கலாமா? பாண்டிச்செல்வம் அவர்களின் ஆசிரியர்கள் அம்மா நா. விஜயலெட்சுமி, ஆசிரியர் சி. பாலையா அவர்கள் வந்திருக்கிறார்கள். பாண்டிச்செல்வம் அவர்களின் பெற்றோர் வந்திருக்கிறார்கள். அவர்களை இந்நேரத்தில் நினைவு கொள்கிறேன்.

நல்லு ஆர். லிங்கம் அவர்கள் தையல் எனும் பதிப்பகத்தின் வழியே இந்நூலை கொண்டுவந்திருக்கிறார். இந்த நூல் சுவடு அல்லது நாற்கரம் எனும் பதிப்பகத்தின் வழியே வந்திருக்க வேண்டியது. ஆனால் தையல் பதிப்பகம் வழியே வந்திருக்கிறது. ஏன் இப்படி நிகழ்ந்தது யோதித்தேன். தையல் என்றால் பெண். தையல் சொல் கேளேல் என்று ஔவையார் பாடியுள்ளார்.  அது அந்தக் காலம். இனி தையல் சொல் கேளீர் என்று சொல்லும் விதமாகவே இந்நூல் தையல் பதிப்பகத்தில் கொண்டுவந்துள்ளார். இந்தப் பதிப்பகத்தின் சிறப்பு பிழையின்றி நல்ல கட்டமைப்புடன் கொண்டுவருவதுதான். அப்படியாகவே இந்நூல் வெளிவந்துள்ளது.

பாண்டிச்செல்வம் அவர்கள் என்னோடும் கவிமதி சோலச்சி அவர்களோடும் படித்தவர். நல்ல ஆசிரியர். நல்ல எழுத்தாளராக உருப்பெற்றிருக்கிறார். நல்ல எண்ணமும் நல்ல நினைவுகளும் கொண்டவர்.


சிறுகதை என்பதற்கான இலக்கணம் என்பது அது சிறுகதையாகவே இருக்க வேண்டும் என்பதுதான். சிறுகதை  இலக்கணங்களில்  முக்கியமானது அக்கதை சில மணித் திவாலைக்குள் முடிந்து விட வேண்டும். சிறுகதை வெளியீட்டு விழாவும் அப்படியே இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

சிறுகதைக்கு பலர் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். நான் சிறுகதை எழுதுவதை பிரியாணி சமையலோடு ஒப்பிட்டு பார்ப்பேன். பிரியாணியில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதுவெல்லாம் இருக்க வேண்டும் சிறுகதையில். பிரியாணியிலிருந்து சுவையும் வாசனையும் வெளியே எட்டிப் பார்ப்பதைப் போல நல்ல சிறுகதையில் எழுதிய எழுத்தாளர் எட்டிப்பார்க்கப்படுகிறார்.

உம்பரான் எனும் சிறுகதைக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரையில்  கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசத்தை வேறுபடுத்தி காட்டியிருக்கிறேன். கதை என்பது இலைச்சுருட்டுக்குள் புழு இருப்பது. சிறுகதை என்பது புழுவுக்கு இறக்கை முளைத்து வண்ணத்துப்பூச்சி ஆவது. புழுவுக்கும் பூச்சிக்கும் இடையிலிருக்கும் அழகியல் வித்தியாசம்தான் கதைக்கும் சிறுகதைக்குமான வித்தியாசமாக இருக்கிறது.

சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மே 4 முதல் மே 10 வரை புதிய அரசு அமைய இருந்த பதட்டமும் விறுவிறுப்பும் அடுத்தடுத்த திருப்பங்களும் கொண்டதாக இருக்க வேண்டும். கடைசியில் எதிர்பார்த்திராத திருப்பத்துடன் முடிய வேண்டும். ஒரு சிறுகதை எப்படி இருக்கக் கூடாது என்றால் முதல்வர் பதவி ஏற்றதன்பிறகு ஆற்றிய உரையைப் போல இருக்கக்கூடாது.

எழுத்தாளர் ராசி.பன்னீர்ச்செல்வம் எனக்கு ஒரு முறை சொன்னார். கதை ஒரு இடத்தில் முடிந்துவிடும். ஆனால் அதற்குப் பிறகும் கதையாளர் எழுதிக்கொண்டிருப்பார் என்று. கதை முடிக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக சரியாக முடித்துவிட்டால் அது நல்ல சிறுகதையாகிவிடும்.

பாண்டிச்செல்வம் நல்ல இதயக்காரர். இதை எப்படிச் சொல்கிறேன் என்றால்
நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டும் இந்த இயக்கத்தில் இயங்கக்கொண்டும் இருக்கிறேன். என்னால் ஒரு நிகழ்வுக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அவர்களை ஒரு நிகழ்வுக்கேனும் அழைக்க முடிந்ததில்லை. ஆனால் பாண்டிச்செல்வம் அவர்களுக்கு இது சாத்தியப்பட்டிருக்கிறது. டாக்டர் அறம் அவர்கள் பெயரிலும் இலக்கியத்திலும் இயக்கத்திலும் அறம் கொண்டவர். சிறுகதைகள் நிறைய வாசித்தவர் என்பதைக் காட்டிலும் சிறுகதைகள் இவரை நிறைய வாசித்திருக்கின்றன. அத்தகைய சிறப்புகள் கொண்ட பொதுச்செயலாளர் அவர்கள் இந்த நூலை வெளியீட்டு சிறப்புரையாற்றுவது பெரும் பேறாக கருதுகிறேன். இவரது தந்தையார் தனுஷ்கோடி ராமசாமியைப் போலவும் மேலாண்மை பொன்னுச்சாமியைப் போல எழுத்தில் நிறைய சாதிக்க வேண்டும்.

எனக்கெல்லாம் மிக நீண்ட கால ஆசையில் ஒன்றாக இருந்தது, கவிச்சுடர் அவர்களைக் கொண்டு நூல் வெளியிட வேண்டுமென்று. இந்த ஆசை நிறைவேற எனக்கு இருபது ஆண்டுகள் ஆனது. ஆனால் பாண்டிச்செல்வம் அவர்களுக்கு ஓரே வருடத்தில் நிகழ்ந்திருக்கிறது. சிலர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க பல வருடங்கள் ஆகின்றன. சிலருக்கு ஓரே வருடம் சாத்தியமாகிறது. அப்படித்தான் பாண்டிச்செல்வம் அவர்களுக்கும் இது நிகழ்ந்திருக்கிறது.

நான் புதுக்கோட்டையில் தன்னை ஓர் இலக்கிய பயிராக உருவகப்படுத்திக்கொண்டு நம்மூர் இலக்கிய ஆளுமைகளை அணுகியிருக்கிறேன்.

நான் எழுத வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் எனது பெயரை மேடையில் உச்சரித்தார். அப்பொழுது இலக்கிய பயிருக்கு நீர்ப்பாய்ந்த உணர்வைப் பெற்றேன். கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் பார்வையில் ஒரு படைப்பாளன் படுதல் என்பது இலக்கியப் பயிர்களுக்கு இடையில் முளைக்கும் களையை களைவது போன்றது.

க. அஜய்குமார் கோஷ் அவர்களின் அன்பை பெறுதல் என்பது இலக்கியப் பயிருக்கு உரமிடுதல் போன்றது.

தமிழ்ச்செம்மல் ரமா.ராமநாதனின் அன்பை நான் பெறுகையில்  பயிரின் தழைகளை அதன் தோகைகளைத் தன் மென்மெல்லிய விரல்களால்  வருடிக்கொடுப்பதற்கு ஈடானதாக உணர்வேன்.

இந்த வரிசையில் கவிச்சுடர் அவர்களின் அன்பை பெறுதல் என்பது ஒரு வேலிக்குள் இலக்கியப் பயிர் வளரும் உணர்வு கொண்டது. அப்படியானதுதான் அவரது அன்பு. அந்த பாதுகாப்பு உணர்வை பாண்டிச்செல்வம் அவர்கள் பெறுகிறார்.

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் நூலை வாசித்து கருத்துச் சொல்லவோ,  நூல் குறித்து எழுதவோ ஆட்கள் இருந்ததில்லை. மீறி எழுதுவதற்கு மனத்தடை இருந்தது.

உம்பிரான் எனும் நூலை  வாசித்து யாரும் கருத்து சொல்லவில்லையே,  எழுதவில்லையே என்கிற கவலை பாண்டிச்செல்வத்திற்கு வேண்டியதில்லை. பேராசிரியர் சா. விஸ்வநாதன் அவர்கள் இந்த நூல் குறித்து நிச்சயம் எழுதிவிடுவார். தினமும் ஒரு நூல் குறித்து எழுதுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நூல் அதிகமாக வாங்கப்படவில்லையே என்கிற கவலை உங்களுக்கு வேண்டியதில்லை. நல்ல நூலாக இருந்தால் பத்து இருபது பிரதிகள் வாங்கி எல்லாருக்கும் கொடுத்துவிடுவார்.

அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தஞ்சாவூரிலிருந்து வருகை தந்திருக்கிறார்.  அவரது அன்பு பெறுவது பெரும் பாக்கியம். எல்லாரும் நாள் ஒதுக்கித்தான் விழாவுக்கு வருவார்கள். இவர் நாளும் நேரமும் ஒதுக்கி வருகிறவர். அவரது அன்பு உங்களுக்கு கூடுதலாக கிடைக்க உள்ளது. 

நூலாசிரியரின் ஆசிரியர் சி. பாலையா சார் அவர்களின் திறனாய்வு பார்வை கூடுதலாக சேர்கிற பொழுது பாண்டிச்செல்வம் எனும் இலக்கியச் செடி மரமாகும் என்று நம்புகிறேன்.

இத்துடன் செம்பை முருகானந்தம் அவர்களின் வாழ்த்து புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் வாழ்த்தாக சு.பீர்முகமது அவர்களின் வாழ்த்து கூடுகிறது .

நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விசயம் குறித்து சொல்லியாக வேண்டும். நான் சமீபத்தில் ஒரு சிறுகதை நூல் வெளியிட்டேன். கவிச்சுடர் அவர்கள்தான் அதை வெளியிட்டு சிறப்புகள் செய்தார். அந்த விழாவின் ஏற்புரையில் நான் எனது இணையருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். அந்த விளைவு ஒரு மாதம் வரை வீட்டில் எதிரொலித்தது. துணையர் இணையர் ஒத்துழைப்பு இல்லாமல் நம்மால் ஓர் எழுத்துகூட எழுத முடியாது.


அந்த வகையில் பாண்டிச்செல்வம் அவர்களின் எழுத்துக்கு பக்க துணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அவரது இணையர்  அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள் நன்றிகள். சிறப்பு பிரதிகள் பெறும் பெருந்தகைகள் நூலினை வாங்கிச்செல்வதற்காக வருகை தந்திருக்கின்றன இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பையும் தெரிவித்து இந்தளவில் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம் !

மே 10, 2026 அன்று புதுக்கோட்டை சரவண பவன் அரங்கில் நடைபெற்ற விழாவில் எனது தலைமை உரை

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுதுதல் என்பது சரியாக சிந்தித்தல்

இலக்கிய உரை - எழுத்தாளருக்கு மூன்று படித்துறைகள்

நீர், கலப்பை, அகலம், இலக்கியம் - ஆலங்குடி